சாலையில் சோதனை செய்யப்பட்டது அந்த விலை குறைவான காரா... இந்தியாவே இதுக்காகதான் வெயிட் பண்ணீட்டு இருக்கு...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா க்ளாவிஸ் (Kia Clavis). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அனேகமாக நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ கியா க்ளாவிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக கியா க்ளாவிஸ் கார் இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது பரவி கொண்டுள்ளது. இந்த வைரல் வீடியோவின் மூலம், கியா க்ளாவிஸ் எஸ்யூவி காரை பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளன. இதில், செங்குத்தான எல்இடி பகல் நேர விளக்குகள் ஒன்றாகும். கியா க்ளாவிஸ் காரின் முன் பகுதியில், எல்இடி பகல் நேர விளக்குகள் செங்குத்தாக வழங்கப்படவிருப்பது இந்த வீடியோவின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர இந்த காரின் முன் பக்க பம்பரின் அடிப்பகுதியில் ரேடார் சிஸ்டமும், விண்டுஷீல்டில் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளன. அடாஸ் (Advanced Driver Assistance Systems - ADAS) வசதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை இவை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன. அத்துடன் வெளிப்புறத்தில் உள்ள ரியர் வியூ மிரரிலேயே, எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் ஒருங்கிணைந்த வகையில் கொடுக்கப்பட்டுள்ளன.
கியா நிறுவனத்தின் கார்களில் அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது. இதற்கு கியா க்ளாவிஸ் காரும் விதிவிலக்கு அல்ல. கியா க்ளாவிஸ் காரில், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா சிஸ்டம், மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் உள்பட பல்வேறு அதிநவீன வசதிகள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம். இவை தவிர 1.2 லிட்டர் அல்லது 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா க்ளாவிஸ் கார் களமிறக்கப்படும்போது, ஐசி இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் பிற்காலத்தில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கியா க்ளாவிஸ் காரானது, ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார்களுக்கு நேரடி போட்டியாக களமிறக்கப்படலாம்.
அல்லது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். ஆனால் கியா க்ளாவிஸ் கார் எந்த செக்மெண்ட்டில் நிலை நிறுத்தப்படும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா க்ளாவிஸ் கார் ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக மைக்ரோ எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டால் இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும்.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில்தான் இதன் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








