உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
கியா நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கார் என்கிற விருதைப் பெற்றிருக்கின்றது. அது என்ன கார் மாடல்? இந்தியாவில் அந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கிறதா? அது எப்போது விற்பனைக்கு வரும்? என்கிற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கியா நிறுவனத்தின் இவி9 எனும் கார் மாடலே 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கார் (2024 World Car Of The Year) எனும் விருதைத் தட்டிச் சென்றிருக்கின்றது. இவி9 ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். எனவேதான் இந்த கார் 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த எலெக்ட்ரிக் கார் என்கிற பட்டத்தையும் அது பெற்றிருக்கின்றது.

ஸ்கூல் டாப்பர் போல பல விருதுகளை இந்த ஒற்றைக் கார் மாடல் குவித்திருப்பது ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. பிஒய்டி சீல் மற்றும் வால்வோ எக்ஸ்30 போன்ற தலைசிறந்த கார் மாடல்கள் போட்டியாக இருந்த நிலையிலும் இந்த விருதுகளை கியா நிறுவனத்தின் இவி9 எலெக்ட்ரிக் கார் தனக்கானதாக மாற்றியிருக்கின்றது.
உலகின் தலைசிறந்த ஆட்டோ துறைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் வழங்கிய கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே கியா கிவி9 தற்போது கவுரவிக்கப்பட்டு இருக்கின்றது. 29 நாடுகளில் இருந்து 100 கணக்கான ஊடகவியலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. டிசைன், விலை மற்றும் சிறப்பம்சங்கள் என பல பிரிவுகளில் இந்த கார் மாடல் தலை சிறந்ததாக இருந்ததன் அடிப்படையிலேயே கியா இவி9க்கும் இந்த விருது வழங்கப்பட்டு இருக்கின்றது.

கியா இவி9 கார் மாடலைப் போலவே இன்னும் சில கார் மாடல்களும் குறிப்பிட்ட பிரிவுகளில் தலை சிறந்தவை என தேர்வுச் செய்யப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் /ஐ5 ஆகிய கார் மாடல்கள் மிக சிறந்த சொகுசு கார் என்கிற விருதையும், ஹூண்டாய் ஐயோனிக் 5 என் கார் மாடல் உலகின் சிறந்த திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட கார் என்கிற விருதையும் தட்டிச் சென்றிருக்கின்றது.
இதற்கு அடுத்தபடியாக உலகின் சிறந்த நகரங்களுக்கான கார் என்கிற விருதை வால்வோ இஎக்ஸ்30-யும், உலகின் சிறந்த டிசைனுக்குச் சொந்தமான கார் என்கிற விருதை டொயோட்டா பிரியூஸ்-ம் தட்டிச் சென்றிருக்கின்றன. ஆனால், இவை அனைத்தைக் காட்டிலும் தலை சிறந்த விருதையே கியா இவி9 தட்டிச் சென்றிருக்கின்றது.
கியா இவி9 3 வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். இந்த கார் இரண்டு விதமான வீல் ஆப்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், பின் வீல்கள் மட்டும் இயங்கும் ஆப்ஷனும், அனைத்து வீல்களும் இயங்கும் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது.
கியா இவி9 ஓர் முழு சார்ஜில் 541 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக கியா இவி9 எலெக்ட்ரிக் காரில் 99.8 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. பேட்டரி பேக்கில் மட்டுமில்லைங்க இந்த கார் தொழில்நுட்பங்கள் விஷயத்திலும் நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கின்றது.
டிவி போன்ற பெரிய திரைகள், பன்முக ஜோன்கள் கொண்ட க்ளைமேட் கன்ட்ரோல், லெவல் 2 அடாஸ் அம்சம் (Advanced Driver Assistance System), பவர் வசதிக் கொண்ட 2வது வரிசை இருக்கைகள் மற்றும் பவர் டெயில்கேட் உள்ளிட்டவை இவி9 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, சொகுசான இருக்கைகள், பயணிகளுக்கான ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டர்கள், பெரிய சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல்கள் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற தரமான அம்சங்களும் புதிய கியா இவி9 எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை இந்த கார் மாடல் தாங்கி இருக்கின்றது.
மேலும், இதுபோன்ற அம்சங்களைத் தாங்கியிருப்பதனால்தான் கியா இவி9 காருக்கு உலகின் சிறந்த கார் என்கிற விருதை வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த கார் சமீபத்தில் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது. எனவே விரைவில் கியா இவி9 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா இவி6 எலெக்ட்ரிக் கார் மாடலைப் போலவே கியா இவி9 எலெக்ட்ரிக் காரும் சிகேடி வாயிலாகவே இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் கியா நிறுவனத்தின் ஐசிஇ மற்றும் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இவி9க்கும் மிக சிறப்பான டிமாண்ட் இந்தியாவில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








