கியா கார்கள் இனி கேண்டீனிலும் விற்பனைக்கு கிடைக்கும்.. ரூ. 1 லட்சம் வரை கம்மி விலையில் கிடைக்குமா?..
கியா (Kia) நிறுவனத்தின் கார்கள் இனி கேந்திரியா போலீஸ் கல்யாண் பந்தர் (Kendriya Police Kalyan Bhandar) கேன்டீனிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த தகவலையே அந்நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது. அதாவது, கேந்திரியா போலீஸ் கல்யாண் பந்தர் உடனான தன்னுடைய இணைவையே அது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனம், சொனெட் (Sonet), செல்டோஸ் (Seltos) மற்றும் கேரன்ஸ் (Carens) ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதில் முதல் இரண்டு எஸ்யூவி கார் பிரிவிலும், மூன்றாவது கார் மாடல் எம்பிவி பிரிவிலும் விற்கப்படுகின்றன. இதுதவிர, இவி6 (EV6) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலையும் அது நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது பிரீமியம் அம்சங்கள் நிறைந்த, அதேவேளையில், நிறுவனத்தின் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் அது காட்சிளிக்கின்றது.

இவற்றில் சொனெட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார் மாடல்களே ராணுவ கேன்டீனில் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்காகவே, கியா நிறுவனம் கேந்திரியா போலீஸ் கல்யாண் பந்தர் உடன் இணைந்திருக்கின்றது. 2006 இல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டதே இந்த அமைப்பு ஆகும்.
பிஎஸ்எஃப் (BSF), சிஆர்பிஎஃப் (CRPF), சிஐஎஸ்எஃப் (CISF), ஐடிபிபி (ITBP), எஸ்எஸ்பி (SSB) மற்றும் அசாம் ரைபிள்ஸ் என பல்வேறு பிரிவுகளை கேந்திரியா போலீஸ் கல்யாண் பந்தர் உள்ளடக்கி இருக்கின்றது. இந்த பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான கேண்டீனிலேயே தற்போது கியா கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும்படி அந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது.
எனவே, ராணுவப் படைகள் மற்றும் உள்துறை அமைச்சக ஊழியர்கள் உட்பட பலரால் சலுகை விலையில் கியா கார்களை வாங்கிக் கொள்ள முடியும். பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களாலும் இதை வாங்கிக் கொள்ள முடியும். மாநில மற்றும் மத்திய காவல்துறை ஊழியர்களுக்கு முன்னதாக கூறியதைப் போலவே தள்ளுபடி விலையில் இந்த கார்களை அவர்களால் வாங்கிக் கொள்ள முடியும்.
எவ்வளவு தள்ளுபடி விலையில் இந்த கார்கள் விற்கப்படும் என்பது தெரியவில்லை. ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான குறைவான விலையிலேயே கியா கார்கள் விற்கப்படும் என யூகிக்கப்படுகின்றது. இந்தியாவில் கியாவின் செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய கார் மாடல்களுக்கு மிக சிறப்பான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது.
இதேபோல், எம்பிவி கார்கள் பிரிவில் கேரன்ஸ்-க்கும் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடல்கள் ராணுவ கேன்டீனில் இணைக்கப்பட்டு இருப்பது பாதுகாப்புப் படை வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நாடு முழுவதும் கேந்திரியா போலீஸ் கல்யாண் பந்தரின்கீழ் 119 மாஸ்டர் கேண்டீன்களும், 1,900 துணை கேன்டீன்களும் செயல்பட்டு வருகின்றன.
மேலும், இதில் சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான காவல் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பலரின் தேவையை கியாவின் தற்போதைய இணைவு பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கியா நிறுவனத்தின் 88 விதமான டிரிம்களை இங்கே விற்பனைக்குப் பட்டியலிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
கியா நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை ஆந்திரா மாநிலம் அனந்தபூரிலேயே அமைந்திருக்கின்றது. இதுவரை 1.2மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை இந்த ஆலையில் உற்பத்தி செய்து வெளியேற்றி இருக்கின்றது, கியா. இதில், 9.8லட்சத்துக்கும் அதிகமான யூனிட்டுகள் உள்நாட்டு விற்பனையானவை ஆகும். மேலும், 2.5லட்சத்துக்கும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். தற்போது விரிவான நெட்வொர்க்குடன் இந்த பிராண்டு இந்தியாவில் செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில், 265 நகரங்களில் 588 டச் பாயின்ட்களுடன் அது செயல்பட்டு வருகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா தற்போது இந்தியர்களின் ஃபேவரிட் பிராண்டாக மாறி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கேந்திரிய போலீஸ் கல்யாண் பந்தர் உடன் அது கூட்டணி வைத்திருக்கின்றது. இதனால் ஏராளமான காவல்துறை மற்றும் துணை ராணுவ வீரர்கள் மலிவு விலையில் கியா கார்களைப் பயனடையும் சூழல் உருவாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








