மிடில்-கிளாஸ் மக்கள் கார் வாங்கும் ஆசையை கை விட வேண்டியதுதான் போலயே! கியாவும் ஆரம்பிக்க போகுது!!
கியா (Kia), தென்கொரியாவை சேர்ந்த முன்னணி கார் நிறுவனம். உலகளவில் பிரபலமான கியா, இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் நுழைந்தது. அதன்பின் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக கியா வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் வெற்றிப் பெற்ற சில வெளிநாட்டு கார் நிறுவனங்களுள் கியாவையும் ஒன்றாக சொல்லலாம். இருப்பினும், மற்ற கார் நிறுவனங்களை போன்று, கியாவும் அதன் கார்களின் விலைகளை அதிகரிக்க தயாராகி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஒவ்வொரு வருட துவக்கத்திலும் கார் நிறுவனங்கள் அவற்றின் கார்களின் விலைகளை அதிகரிப்பது வழக்கம். இந்த விலை அதிகரிப்பை ஒரு சில கார் நிறுவனங்கள் சற்று தாமதமாக மார்ச், ஏப்ரலில் துவங்குகின்றன. ஆனால், பெரும்பாலான கார் நிறுவனங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதலே விலை அதிகரிப்பை கொண்டுவந்து விடுகின்றன.

அந்த வகையில், வருகிற 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் மாருதி சுஸுகி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற முன்ணனி கார் நிறுவனங்கள் விலை உயர்வை அமல்படுத்த உள்ளன. அந்த வரிசையில் கியா நிறுவனமும் அதன் கார்களின் விலைகளை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, கியா கார்களின் விலைகள் ஜனவரி முதல் 2% வரையில் உயர்த்தப்பட உள்ளன.
மற்ற கார் நிறுவனங்கள் உடன் ஒப்பிடுகையில் கியாவின் விலை உயர்வு கொஞ்சம் குறைவுதான். ஏனெனில், மாருதி சுஸுகி நிறுவனம் 4 சதவீத விலை உயர்வையும், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் 3 சதவீத விலை அதிகரிப்பையும் 2025 ஜனவரி 1 முதல் கொண்டுவர உள்ளன. இந்தியாவில் கியா நிறுவனம் மொத்தம் 6 விதமான கார்களை விற்பனை செய்கிறது.

சொனெட், செல்டோஸ், கேரன்ஸ், இவி6, கார்னிவல் மற்றும் இவி9 என்பன அந்த 6 கார்களாகும். இதில், இவி6 மற்றும் இவி9 என்கிற எலக்ட்ரிக் கார்களை மட்டும் வெளிநாட்டில் இருந்து கியா இறக்குமதி செய்கிறது. 2% வரையில் விலை அதிகரிக்கப்படுவதால், கியா கார்களின் விலைகள் எந்த அளவிற்கு மாற்றம் காணவுள்ளன என்பது 2025ஆம் ஆண்டு பிறந்த பின்பே தெரியவரும்.
ஏனெனில், ஒரு சில கியா கார்களின் விலைகள் வெறும் 1% மட்டுமே உயர்த்தப்படலாம். இந்தியாவின் சாதகமற்ற பணப்பரிமாற்று விகிதத்தை இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கியா தெரிவித்துள்ளது. அதேபோல், அதிகரித்துவரும் கார் உற்பத்தி செலவு மற்றும் போக்குவரத்து செலவும் கியாவின் விலை அதிகரிப்புக்கு காரணங்கள் ஆகும்.

முடிந்தவரையில் கூடுதல் செலவுகளை தாங்களே சமாளிக்க முயற்சிப்பதாகவும், அதனையும் தாண்டி ஏற்படும் செலவுகளை மட்டுமே விலை உயர்வாக கொண்டுவருவதாகவும் கியா தெரிவித்துள்ளது. விலை அதிகரிப்பு குறித்து கியா இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் ஹர்தீப் சிங் பிரார் கூறுகையில், "கியாவில் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரத்தில் விதிவிலக்கான, தொழிற்நுட்ப ரீதியாக மேம்பட்ட வாகனங்களை வழங்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்" என்றார்.
இந்தியாவில் கியா நிறுவனத்தின் கார்கள் பிரிவு ஏற்கனவே வலுவாக இருக்கிறது. ஏனெனில், சப்-காம்பெக்ட், காம்பெக்ட், எம்பிவி மற்றும் விலையுயர்ந்த லக்சரியான எம்பிவி என பெரும்பாலான பிரிவுகளில் கியா நிறுவனம் அதன் கார்களை விற்பனை செய்கிறது. இருப்பினும், புதிய எஸ்யூவி காராக சைரோஸை இந்தியாவில் அறிமுகம் செய்ய கியா தயாராகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் வரிசையில் கியா உள்ளது. கடந்த சில மாதங்களாக கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது என்றாலும், 2025 ஜனவரியில் இருந்தே கொண்டுவரப்படும் இந்த விலை உயர்வானது நிச்சயமாக கியா கார்களின் விற்பனையை சற்று பாதிக்கும். இதனை கியா நிறுவனம் சிறப்பாக சமாளிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









