கொஞ்சம் பணத்தை சேர்த்து வெச்சா போதும், இதில் ஒரு கியா காரை வாங்கிடலாம்!! சன்ரூஃப் உடன் கிடைக்கும்ங்க...
கியா (Kia) நிறுவனம் அதன் சொனெட் எஸ்யூவி காரில் புதியதாக 4 விலை குறைவான வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. அத்துடன், சொனெட் காரின் சில வேரியண்ட்களில் புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அது என்ன? கியா சொனெட் காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வேரியண்ட்களின் விலைகள் எவ்வளவு? என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தென்கொரியா நாட்டை சேர்ந்த கியா நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் கார்களுள் ஒன்று சொனெட் ஆகும். இதன் காரணமாகவே, சொனெட் காரை குறிப்பிட்ட காலத்திற்குள் கியா நிறுவனம் தவறாமல் அப்டேட் செய்துவிடுகிறது. இந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான சொனெட் கார் கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதிய 2024 சொனெட் காரில் எச்.டி.இ (ஆப்ஷ்னல்) மற்றும் எச்.டி.கே (ஆப்ஷ்னல்) என 2 புதிய வேரியண்ட்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு வேரியண்ட்களை 1.2 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் CRDi VGT டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் வாங்கலாம். ஆக மொத்தமாக, 4 விதமான வேரியண்ட்கள் சொனெட்டில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய எச்.டி.இ (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் சன்ரூஃப் வசதியை பெறலாம். ஆனால், வழக்கமான எச்.டி.இ வேரியண்ட்டில் சன்ரூஃப் கிடைப்பது இல்லை. இதன் காரணமாகவே, எச்.டி.இ வேரியண்ட்டை காட்டிலும் புதிய எச்.டி.இ (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20,000 அதிகமாக ரூ.8.19 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கியா சொனெட்டின் எண்ட்ரீ-லெவல் எச்.டி.இ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.99 லட்சமாக உள்ளது.
எச்.டி.கே (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டை பொறுத்தவரையில், இந்த வேரியண்ட்டில் சன்ரூஃப், எல்இடி கனெக்டட் டெயில்லேம்ப்கள், ஃபுல்லி-ஆட்டோமேட்டிக் டெம்ரேச்சர் கண்ட்ரோல் மற்றும் ரியர் டீஃபாக்கர் வசதிகளை பெறலாம். இந்த வசதிகளை வழக்கமான எச்.டி.கே வேரியண்ட்டில் பெற முடியாது. எச்.டி.கே வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.89 லட்சம் ஆக உள்ள நிலையில், புதிய எச்.டி.கே (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய வேரியண்ட்களின் அறிமுகத்துடன், சொனெட் காரின் மற்ற வேரியண்ட்களிலும் சில அப்டேட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, விலையுயர்ந்த ஜிடிஎக்ஸ்+ மற்றும் எச்.டி.எக்ஸ்+ வேரியண்ட்களில் ஜன்னல் கண்ணாடிகளை வாய்ஸ் கமெண்ட்ஸ் மூலமாக திறந்து மூடலாம். சொனெட்டின் விலை குறைவான வேரியண்ட்களான எச்.டி.இ மற்றும் எச்.டி.கே-இல் புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலமாக, சொனெட்டின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களை இனி அரோரா பிளாக் பேர்ல், இம்பெரீயல் நீலம் மற்றும் பெவ்டர் ஆலிவ் பெயிண்ட் ஆப்ஷன்களில் வாங்கலாம். அதுமட்டுமின்றி, சொனெட் எச்.டி.கே+ வேரியண்ட் காரை இனி க்ளீயர் வெள்ளை நிறத்தில் வாங்க முடியாது. அதற்கு பதிலாக பேர்ல் வெள்ளை பெயிண்ட் ஆப்ஷனில் வாங்கலாம்.
கியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2024 சொனெட் காரை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது மேலும் புதிய அப்டேட்கள் 2024 சொனெட் காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, சமீபத்தில் 2024 செல்டோஸ் காரை கியா நிறுவனம் அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. செல்டோஸ் காரிலும் புதிய வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனை செய்யப்படும் கார்களில் புதிய வேரியண்ட்களை அறிமுகம் செய்வது வழக்கமான ஒன்றே. இருப்பினும், நம் இந்திய மக்களுக்கு ஏற்ப விலை குறைவான வேரியண்ட்களை அறிமுகம் செய்ய கியா முயற்சிப்பது அந்த நிறுவனத்தின் தெளிவான சிந்தனையை காட்டுகிறது. இதனால், வரும் மாதங்களில் கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








