ஹூண்டாய் ஒன்னு செஞ்சிட கூடாதே.. அத அப்படி செஞ்சுட்றது! கியாவும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கு
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தன்னுடைய புகழ்பெற்ற கார் மாடலான கிரெட்டா (Creta)-வில் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. கிரெட்டா நைட் எடிசன் (Creta Knight Edition)-னையே அது நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia)-வும் இந்தியாவில் தற்போது சிறப்பு பதிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்தெந்த மாடலில், என்ன மாதிரியான சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
கியா நிறுவனம் கிராவிட்டி எடிசன் (Gravity Edition) எனும் பதிப்பையே விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களான செல்டோஸ் (Seltos), சொனெட் (Sonet) மற்றும் கேரன்ஸ் (Carens) ஆகிய மூன்றிலும் இந்த சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

கியா செல்டோஸ் கிராவிட்டி எடிசன் பற்றிய விபரங்கள்: சில தனித்துவமான அம்சங்களை இந்த பதிப்பில் கியா வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், டேஷ் கேமிரா, 10.25 அங்குல டிஜிட்டல் எல்சிடி கிளஸ்டர், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, போஸ் சவுண்டு சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், செல்டோஸ் கிராவிட்டி எடிசனில் 17 அங்குல மெஷின் கட் வீல், க்ளாஸ்ஸி கருப்பு நிற ரியர் ஸ்பாய்ளர், உடல் நிறத்திற்கு ஏற்ற டோர் கைப் பிடிகள் மற்றும் கிராவிட்டி எனும் எம்பளங்கள் ஆகியவை இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, மூன்று விதமான நிற தேர்வுகளையும் இந்த சிறப்பு பதிப்பில் கியா வழங்குகின்றது.
கிளாசியல் ஒயிட் பெர்ல் (Glacial White Pearl), அரோரா பிளாக் பெர்ல் (Aurora Black Pearl) மற்றும் மேட் டார்க் கன் மெட்டல் (Dark Gun Metal (Matte)) ஆகிய நிற தேர்வுகளே இதில் வழங்கப்படுகின்றது. மேலும், இந்த கிராவிட்டி பதிப்பை எச்டிஎக்ஸ் ட்ரிம்மில் மட்டுமே கியா வழங்குகின்றது.
அதேவேளையில், இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் இதை வாங்கிக் கொள்ள முடியும். 1.5 லிட்டர் பெட்ரோல் 6 ஸ்பீடு மேனுவல், 1.5 லிட்டர் பெட்ரோல் ஐவிடி மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் 6 ஸ்பீடு மேனுவல் ஆகியவை அவை ஆகும். ரூ. 16.62 லட்சம் தொடங்கி ரூ. 18.20 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
கியா சொனெட் கிராவிட்டி எடிசன் பற்றிய விபரங்கள்: கியா நிறுவனத்தின் மற்றுமொரு பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக சொனெட் இருக்கின்றது. இந்த கார் மாடலின் எச்டிகே பிளஸ் எனும் ட்ரிம்மிலேயே கியா நிறுவனம் கிராவிட்டி எடிசனை அறிமுகம் செய்திருக்கின்றது. செல்டோஸில் வழங்கப்பட்டதைப் போலவே இதிலும் பன்முக எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், 1.2 பெட்ரோல் - 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் - 6 ஸ்பீடு ஐஎம்டி டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. ஆனால், நிற தேர்வில் இது லேசாக மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது.
அந்தவகையில், பெர்ல் ஒயிட் Pearl White), அரோரா பிளாக் பெர்ல் (Aurora Black Pearl) மற்றும் மேட் கிராஃபைட் (Matte Graphite) ஆகியவையே அவை ஆகும். இதேபோல் சில தனித்துவமான மாற்றங்களை இந்த சிறப்பு பதிப்பு பெற்றிருக்கும். அந்தவகையில், வெள்ளை நிற பிரேக் காலிபர்களை இது கொண்டிருக்கும்.
இத்துடன், இன்டிகோ பெரா வகை இருக்கை நேவி தையல்களுடனும், டிஜிஎஸ் வகை லெதர் க்நாப், ஸ்பாய்ளர் மற்றும் ஆர்16 அலாய் வீல் ஆகியவற்றை இது கொண்டிருக்கும். இத்துடன், கூடுதலாக ஒயர்லெஸ் போன் சார்ஜர், டேஷ் கேமிரா, டோர் ஆர்ம்ரெஸ்ட், 60:40 ஸ்பிளிட் வசதிக் கொண்ட இருக்கை, பின் பக்கத்தில் அட்ஜஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஹெட்ரெஸ்ட், கோப்பை தாங்கிக் கொள்ளும் வசதிக் கொண்ட ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றையே இதுக் கொண்டிருக்கும்.
இத்துடன், கிராவிட்டி எடிசன் என்கிற எம்பளத்தையும் அது தாங்கியிருக்கும். சொனெட் கிராவிட்டி பதிப்பு ரூ. 10.49 லட்சம் தொடங்கி ரூ. 11.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதை விட சற்று அதிக விலையை இவைக் கொண்டிருக்கும்.
கியா கேரன்ஸ் கிராவிட்டி எடிசன்: இது ஓர் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இதனால்தான் இதனைச் சிறப்பிக்கும் விதமாக கியா நிறுவனம் இதிலும் கிராவிட்டி பதிப்பை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
மற்ற மாடல்களைப் போலவே இதிலும் டேஷ் கேமிரா, சன்ரூஃப், செயற்கையான கருப்பு நிறம் பூசப்பட்ட லெதர் பேர்த்தப்பட்ட இருக்கைகள், டி-கட் லெதர் ஸ்டியரிங் வீல், எல்இடி மேப் மற்றும் ரூம் லேம்ப் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ஆர்ம் ரெஸ்ட் மற்றும் டோரின் மையப் பகுதியிலும் லெதர் வழங்கப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து, கிராவிட்டி எடிசன் என்கிற எம்பளத்தை இதிலும் பார்க்க முடிகின்றது. கியா நிறுவனம் கேரன்ஸ்-இன் பிரீமியம் (ஓ) ட்ரிம்மிலேயே கிராவிட்டி பதிப்பை வழங்குகின்றது. 1.5 லிட்டர் பெட்ரோல் 6 ஸ்பீடு, 1.5 லிட்டர் பெட்ரோல் ஐவிடி ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே இதில் வழங்கப்படுகின்றன.
இதுதவிர, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் 6 ஐஎம்டி ஆப்ஷனும் கேரன்ஸ் எம்பிவியில் வழங்கப்படுகின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 12.09 லட்சம் ஆகும். அதிகபட்ச விலை ரூ. 13.99 லட்சம் ஆகும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் பண்டிகைக் காலத்தில் புதிய காரை வாங்கும் திட்டத்தில் இருப்பவர்களைக் கவரும் பொருட்டே கியா நிறுவனம் தற்போது அதன் முக்கிய தயாரிப்புகளில் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அது சிறப்பு பதிப்பை அறிமுகம் செய்திருக்கும் மூன்றும் இந்தியாவில் நல்ல விற்பனை வரவேற்பைப் பெறும் கார் மாடல்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், வரும் நாட்களில் வாடிக்கையாளர்களின் கவனத்தை இந்த கார் மாடல்கள் கூடுதலாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








