இனி எர்டிகா, எக்ஸ்எல்6 விற்பனையான மாதிரிதான்... ஃப்ரிட்ஜ்ல வச்ச ஆப்பிள் மாதிரி ஃப்ரெஷ்ஷா இறக்கியிருக்காங்க!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் முன்னணி எம்பிவி (MPV) ரக கார் மாடல்களில் கேரன்ஸ் (Carens)-ம் ஒன்றாகும். இது தென் கொரியாவைச் சேர்ந்த கியா (Kia) நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பாகும். இந்த கார் மாடலையே புதிய தேர்வுகளாலும், புதிய சிறப்பு வசதிகளாலும் அப்டேட் செய்திருக்கின்றது, கியா.
அப்டேட்டின் கீழ் இந்த கார் மாடலில் என்ன மாதிரியான புதிய சிறப்புகளை கியா நிறுவனம் சேர்த்து இருக்கின்றது? அதன் விலை எவ்வளவு? என்பது பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மேலும், இரண்டு தேர்வுகள் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைப் பற்றியும் விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கியா நிறுவனம் இரண்டு புதிய தேர்வுகளை கேரன்ஸ் எம்பிவியில் இணைத்திருப்பதால் தற்போது அதன் ஒட்டுமொத்த தேர்வின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. புதிய தேர்வுகளில் புதிய யு2 1.5 லிட்டர் விஜிடி டீசல் (U2 1.5 VGT diesel) எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
ஏற்கனவே கியா கேரன்ஸ் 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என மூன்று விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதிலேயே நான்காவதாக தற்போது புதிய டீசல் மோட்டார் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
6 இருக்கைள் மற்றும் 7 இருக்கைகள் என இரண்டு ஆப்ஷன்களும் புதிய தேர்வுகளில் வழங்கப்படுகின்றது. புதிய நிற தேர்வையும் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பியூடர் கிரீன் ஷேட் எனும் புதிய நிற தேர்வே கேரன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. புதிய வேரியண்டுகள் பிரீமியம் ஓ (Premium O), பிரெஸ்டீஜ் ஓ (Prestige O) மற்றும் பிரெஸ்டீஜ் பிளஸ் ஓ (Prestige+ O) ஆகிய தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கும்.
இதில், பிரீமியம் ஓ தேர்வில் சாவியில்லாமல் நுழையும் வசதி, 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஷார்க் ஃபின் ஆன்டென்னா, ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள் மற்றும் பர்க்லர் அலாரம் போன்ற ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும். இதைவிட அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகவே மற்ற இரண்டு வேரியண்டுகளும் இருக்கும்.
குறிப்பாக பிரெஸ்டீஜ் பிளஸ் ஓ தேர்வில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், எல்இடி மேப் லேம்ப் மற்றும் ரூஃப் லேம்ப் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும். இத்துடன், 180 வாட் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கும். இதேபோல், நிறுவனம் கேரன்ஸ் எக்ஸ் லைன் தேர்வையும் லேசாக அப்டேட் செய்திருக்கின்றது.
இதன்கீழ் டேஷ்கேம், அனைத்து ஜன்னல் கண்ணாடிகளையும் குரல் கட்டளை வாயிலாகவே கன்ட்ரோல் செய்யும் வசதி, ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளையே நிறுவனம் கேரன்ஸ் கார் மாடலில் அறிமுகம் செய்திருக்கின்றது. கியா கேரன்ஸ் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.
ஆகையால், இப்போது ஆரம்ப நிலை தேர்வின் விலையே ரூ. 10.52 லட்சமாக மாறி இருக்கின்றது. அதேவேளையில் கேரன்ஸின் அதிகபட்ச விலை ரூ. 19.67 லட்சமாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வேரியண்ட் ரூ. 12.12 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, செஸ்டோஸ் எஸ்யூவி கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், கேரன்ஸ் எம்பிவிக்கும் கணிசமான அளவு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டு இருக்கின்றது. இதனை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே புதிய தேர்வுகளை கேரன்ஸில் கியா இணைத்திருக்கின்றது. இதன் வருகை எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6க்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








