விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகும் முன்னணி நிறுவனம்! டாடா பொருளை எடுத்து டாடாவையே போட போறாங்க!
இந்திய சந்தையில் மிக குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்த கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). தற்போதைய நிலையில் கியா சொனெட் (Kia Sonet), கியா செல்டோஸ் (Kia Seltos), கியா கேரன்ஸ் (Kia Carens) மற்றும் கியா இவி6 (Kia EV6) என ஒட்டுமொத்தமாக 4 கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இதில், இவி6 ஒன்றுதான் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். மற்ற அனைத்தும் ஐசி இன்ஜின் (IC Engine) மூலம் இயங்க கூடியவை. கியா நிறுவனம் இந்திய சந்தையில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்தாலும், அதன் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. தற்போதைய நிலையில் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே 60.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 65.95 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆன்-ரோடு (On-road Price) விலை, இன்னும் கூடுதலாக வரும்.

எனவே கியா நிறுவனம் ஓரளவிற்கு குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதில், நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. ஆம், கியா நிறுவனம் ஓரளவிற்கு குறைவான விலையில் 2 புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
கியா நிறுவனம் களமிறக்கவுள்ள 2 மாஸ்-மார்க்கெட் எலெக்ட்ரிக் கார்களும் (Mass-market Electric Cars), அடுத்த 18 மாதங்களுக்கு உள்ளாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு உள்ளாக இந்த 2 மாஸ்-மார்க்கெட் எலெக்ட்ரிக் கார்களும் விற்பனைக்கு வந்து விடும்.

இதில் ஒன்று தற்போது விற்பனையில் உள்ள கியா கேரன்ஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில், கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை 10.52 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.67 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆனால் கியா கேரன்ஸ் எலெக்ட்ரிக் காரின் விலை இதை விட அதிகமாக இருக்கும். எனினும் கியா நிறுவனம் களமிறக்கவுள்ள 2வது மாஸ்-மார்க்கெட் எலெக்ட்ரிக் காரை பற்றிய தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. அனேகமாக இது கியா க்ளாவிஸ் (Kia Clavis) காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கலாம்.
கியா நிறுவனம் க்ளாவிஸ் என்ற பெயரில் புதிய ஐசி இன்ஜின் கார் ஒன்றை 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதை தொடர்ந்து 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள்ளாக இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் கியா விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கியா நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்கிற பெருமையை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள்தான் தற்போதைய நிலையில் இந்தியாவின் தேவையாக உள்ளன. டாடா அதை சரியாக புரிந்து கொண்டு மாஸ்-மார்க்கெட் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து, மிகப்பெரிய வெற்றியை ருசித்து வருகிறது. இதே பாணியை கியா நிறுவனமும் கையில் எடுக்கவுள்ளது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கியா களமிறக்கவுள்ள க்ளாவிஸ் எலெக்ட்ரிக் கார், டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காருடன் போட்டியிடலாம்.


Click it and Unblock the Notifications








