மாருதி வேகன்ஆரை போல உயரமான உருவம் கொண்ட கார் இந்தியாவில் வெளியீடு.. ஒரு வழியா முழுமையா காட்சிப்படுத்திட்டாங்க!
கியா (Kia) நிறுவனம், அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிரோஸ் (Syros) கார் மாடலை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் எஸ்யூவி ரக கார் மாடல்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சிரோஸ் கார் மாடலை அது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரை நிறுவனம் முழுமையாகக் காட்சிப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக கியா டீசர் படங்களை வெளியிட்டு வந்தது.
இந்த நிலையிலேயே ஒரு வழியாக முழுமையாக அக்காரை அது வெளிக்காட்டி இருக்கின்றது. மாருதி சுஸுகி-யின் புகழ்பெற்ற கார் மாடலான வேகன்ஆர் (Maruti Suzuki WagonR)-ஐ போல 'டால் பாய்' ஸ்டைலில் இந்த காரை கியா தயார் செய்திருக்கின்றது. எனவே லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் விஷயத்தில் இந்த கார் மாடல் மிக சிறந்ததாக இருக்கும் என தெரிகின்றது.

குறிப்பாக, 6 அடி உயரமானவர்களாலும் இந்த காரில் சௌகரியமாக அமர்ந்து பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த காரின் முன் பக்க பான்னெட் பகுதி டாடாவின் பஞ்ச் மற்றும் நெக்ஸான் ஆகிய கார் மாடல்களுடன் ஒத்துப்போகின்ற வகையில் இருப்பதை நம்மால் உணர முடிகின்றது.
எனவே, இந்த காரை சிலர் வேகன்ஆர் மற்றும் டாடா கார்களின் கலவையாகப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். அதேவேளையில், இந்த கார் கியாவின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றான கேரன்ஸ் (Carens MPV)-யை பிரதிபலிக்கவும் தவறவில்லை. ஆமாங்க, இந்த கார் மாடலின் ஸ்டைல் அம்சங்களையும் சிரோஸ் லேசாக தாங்கி இருக்கின்றது.

அதேவேளையில், கிரில், பம்பர் மற்றும் லைட்டிங் அமைப்பு ஆகியவற்றால் கியா நிறுவனம் சிரோஸ்-க்கு தனித்துவமான லுக்கை வழங்கி இருக்கின்றது. சொல்லப்போனால், இதன் லைட் அமைப்பு அதிக கவர்ச்சியான தோற்றத்தை அதன் முன் பக்கத்திற்கு வழங்கும் வகையில் இருக்கின்றது. மூன்று அடுக்குகளில் ஐஸ் கட்டி மாதிரியான லைட்டுகளே ஹெட்லைட்டாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், அது அருகிலேயே மீன் பிடிக்க உதவும் தூண்டில் முல் போன்ற அமைப்புடைய லைட் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய லைட் (DRL) ஆகும். இத்துடன், இதன் முன் பக்கத்திற்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் விதமாக இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்ட கிரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலே இருப்பது சற்றே அகலம் குறைவானதாகவும், கீழே இருப்பது சற்றே அகலம் அதிகமானதாகவும் உள்ளது. இத்துடன், அடிப்பக்கத்தில் சில்வர் நிற பம்பர் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமாதிரியான இன்னும் பல கவர்ச்சியான அணிகலன்களை இந்த காரில் வெளிப்பக்கத்தில் காண முடிகின்றது. கியா நிறுவனம் ஒட்டுமொத்தமாக இந்த காரை ஆறு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.
எச்டிஎக்ஸ் பிளஸ் (ஓ) HTX+(O), எச்டிஎக்ஸ் பிளஸ் (HTX+), எச்டிஎக்ஸ் (HTX), எச்டிகே பிளஸ் (HTK+), எச்டிகே ஓ (HTK(O)) மற்றும் எச்டிகே (HTK) ஆகிய தேர்வுகளிலேயே சிரோஸ் விற்பனைக்குக் கிடைக்கும். இதுதவிர, வேரியண்டிற்கு ஏற்ப மூன்று விதமான அளவுள்ள வீல் ஆப்ஷனும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
15 அங்குலம், 16 அங்குலம் மற்றும் 17 அங்குலம் ஆகியவையே அவை ஆகும். இந்த காரின் வெளியீட்டு நிகழ்வு மட்டுமே இன்று அரங்கேறி இருக்கின்றது. புக்கிங் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே அது தொடங்கப்பட இருக்கின்றது. ஜனவரி 3 ஆம் தேதி புக்கிங் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து, டெலிவரி பணிகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இந்த காரின் விலைகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சீக்கிரமே இது பற்றிய தகவலையும் கியா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கியா நிறுவனம் இந்தியர்களைக் கவர வேண்டும் என்பதற்காக சிரோஸ் காரில் சிறப்பம்சங்களை வாரி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, பவர் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பிரத்யேக ஏசி கன்ட்ரோல்கள், பன்முக ஜோன்கள் கொண்ட க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு உள்ளிட்ட அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமில்லைங்க, டிராவல் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக இந்த காரில் ஹர்மேன் கர்டோன் சவுண்டு சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், பாதுகாப்பு அம்சங்களையும் இந்த கார் மிக தாராளமாகக் கொண்டிருக்கின்றது. மிக முக்கியமாக லெவல் 2 அடாஸ் அம்சம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா உள்ளிட்டவையும் கியா சிரோஸ் காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன.
ஸ்மார்ட்-ஸ்ட்ரீம் ஜி1.0லிட்டர் டி-ஜிடிஐ மற்றும் டி1.5லிட்டர் சிஆர்டிஐ விஜிடி ஆகியவையே அவையாகும். முதலில் பார்த்த மோட்டாரே பெட்ரோல் ஆகும். இரண்டாவது பார்த்து டீசல் மோட்டார் ஆகும். பெட்ரோலில் 6ஸ்பீடு மேனுவல் மற்றும் 7டிசிடி ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும், டீசலில் 6ஸ்பீடு மேனுவல் மற்றும் 6ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. பெட்ரோல், 88.3kW மற்றும் 172என்எம் டார்க்கையும், டீசல் மோட்டார் 85kW மற்றும் 250என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே உயரமான உருவம் கொண்ட ஓர் புதுமுக கார் மாடலை கியா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கும் அதன் மற்ற தயாரிப்புகளைபோல நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









