உலக நாடுகள் மத்தியில் கியாவை பெருமைப்படுத்திய இந்தியா! நம் பாரதம் தான் இப்போதைக்கு ஒரே நம்பிக்கை!
கியா (Kia), தென்கொரியாவை சேர்ந்த பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம். உலகம் முழுவதும் கார்களை விற்பனை செய்து வருகிறது. இருப்பினும், கடந்த 3 மாத கார்கள் விற்பனையில் கியாவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய சந்தைகளாக இருப்பது நம் இந்தியாவும், வட அமெரிக்க, மத்திய கிழக்கு மற்றும் பசுபிக் பெருங்கடலை ஒட்டிய ஆசிய நாடுகளும் தான். இதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 3 மாதங்களில் கியா நிறுவனம் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அதனை விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகின் பல நாடுகளில் வணிகம் செய்துவரும் கொரியன் கியா நிறுவனம் இந்தியாவில் 2019ஆம் ஆண்டில்தான் நுழைந்தது. முதல் காராக அறிமுகம் செய்யப்பட்ட செல்டோஸ் இந்திய மார்க்கெட்டில் செம்ம ஹிட். இப்போதும் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் செல்டோஸ் கார்கள் அசால்ட்டாக இந்தியாவில் விற்பனையாகுகின்றன.

இதன் மூலமாக இந்திய மக்கள் மத்தியில் கியா ஓரளவிற்கு கவனத்தை பெற ஆரம்பித்தது. அதன்பின், கொஞ்சமும் கேப் விடாமல் உடனடியாக சொனெட் காரை 2020இல் அறிமுகம் செய்து மார்க்கெட்டை மிரள வைத்தது. அதன்பின், கார்னிவல், கேரன்ஸ் என தொடர்ச்சியாக கியா கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கியா இவி6 என்கிற எலக்ட்ரிக் காரும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்பார்த்ததை போல், தற்போதைய நிலவரப்படி உலகளவில் கியாவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய நாடாக நமது இந்தியா விளங்குகிறது. மேலும், இங்கு உற்பத்தி செலவு குறைவாக உள்ளதாலும், தேவையான பொருட்கள்/ பணியாட்கள் எளிதாக கிடைப்பதாலும் கார்களை உற்பத்தி செய்து வெளிநாட்டுகளுக்கு அனுப்பும் விஷயத்தில் இந்தியாவை கியா நன்கு பயன்படுத்தி வருகிறது.

இவ்வாறு இந்தியாவை பெரிதும் சார்ந்திருக்கும் கியா உலகளவில் கடந்த 3 மாதங்களில் (2024 ஜூலை- செப்டம்பர்) மொத்தம் 7 லட்சத்து 63,693 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2023ஆம் ஆண்டில் இதே 3 மாதங்களில் விற்கப்பட்ட கியா கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 1.9% குறைவாகும். உலகின் பல நாடுகளில் கியா கார்கள் உற்பத்தி தொழிற்சாலை மேம்படுத்தப்பட்டு வருவதை இந்த விற்பனை குறைவுக்கு காரணமாக கியா தெரிவித்துள்ளது.
இந்த 2024ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மொத்தம் 23 லட்சத்து 390 கார்களை கியா உலகளவில் விற்பனை செய்துள்ளது. இதுவும் கடந்த 2023ஆம் ஆண்டை காட்டிலும் 1.5% குறைவாகும். ஆனால், கியாவின் ஹைப்ரீட் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கு பல நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பல நாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியம் குறைப்பட்டு இருக்கும் போதிலும், கடந்த 3 மாதங்களில் கியா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை 8.3% அதிகரித்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் ஏறக்குறைய 54,000 எலக்ட்ரிக் கார்களை உலகளவில் கியா விற்பனை செய்துள்ளது. மறுப்பக்கம், 84,000 ஹைப்ரீட் கார்களையும், 17,000 பிளக்-இன் ஹைப்ரீட் கார்களையும் கடந்த 3 மாதங்களில் கியா விற்பனை செய்துள்ளது. இதில் கியா ஹைப்ரீட் கார்கள் விற்பனை 10% அதிகரித்துள்ள போதிலும், பிளக்-இன் ஹைப்ரீட் கார்கள் விற்பனை 26.7% குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் கார்கள் என எல்லாவற்றையும் சேர்த்தால், கியா கார்கள் விற்பனை கடந்த 3 மாதங்களில் உலகளவில் குறைந்துள்ளது. கியாவின் இந்த சிறிய சரிவுக்கு இத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும், சொல்லப்படாத முக்கியமான காரணம் ஐரோப்பிய பொருளாதாரத்தின் வீழ்ச்சி ஆகும். ஐரோப்பிய நாடுகளில் கியாவின் விலை குறைவான கார்களின் விற்பனை கூட வெகுவாக குறைய ஆரம்பித்துள்ளது.
கொரியாவுக்கு வெளியே கியாவின் கார்கள் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் 0.8% குறைந்துள்ளது. அதாவது, தென்கொரியாவிலும் கியா கார்கள் விற்பனை குறைந்து வருகிறது. தென் கொரியாவில் உள்ள கியாவின் தொழிற்சாலையில் கார்கள் உற்பத்தி பணிகள் குறைந்திருப்பது இதற்கு ஒரு காரணமாக சொல்லப் படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 1.9% விற்பனை குறைவு பெரியதாக இல்லாதது போல் தோன்றலாம். ஆனால், கியாவின் ஒட்டுமொத்த உலகளாவிய கார்கள் விற்பனையில் இந்த 1.9 சதவீதமே ஏறக்குறைய 15 ஆயிரம் கார்கள் என வரும். 3 மாதங்களில் 15 ஆயிரம் கார்கள் என்பது பெரிய வித்தியாசமே ஆகும். வெளியே இத்தனை அமளி, துமளிகள் நடந்தாலும் இந்தியாவில் புதிய க்ளாவிஸ் மற்றும் ஜிடி லைன் கார்களை அறிமுகம் செய்ய கியா தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications









