இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
தென்கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம் கியா (Kia). இந்தியர்களின் பிரியமான கார் பிராண்டாக இந்த நிறுவனம் களமிறங்கிய சில ஆண்டுகளிலேயே மாறியது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனமே, விரைவில் ஓர் பிக்-அப் டிரக் (Pickup Truck)-கை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
நிறுவனம் பிக்-அப் டிரக் உற்பத்தியில் களமிறங்கி தயாரித்து இருக்கும் முதல் பிக்-அப் டிரக் இதுவே ஆகும். டாஸ்மேன் (Kia Tasman) எனும் பெயரையே அதற்கு சூட்டியிருக்கின்றது, கியா. ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ் பெற்ற தீவின் பெயரே இதுவாகும். கரடுமுரடான, அதேவேளையில், இயற்கை எழில் கொஞ்சும் ஓர் தீவே டாஸ்மேனியா ஆகும்.

இதைப் போலவே முரட்டுத் தனமான உருவத்தில் கரடு-முரடானதாகவும், அதேநேரத்தில், கவர்ந்து இழுக்கும் கவர்ச்சியான தோற்றத்தை டாஸ்மேன் கொண்டிருக்கின்றது. இது 2025 ஆம் ஆண்டிற்குள் வெளியீட்டைப் பெற்றுவிடும் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்த புதுமுக பிக்-அப் டிரக்கின் டீசர் படங்களை கியா தற்போது வெளியிட்டு இருக்கின்றது.
பிக்-அப் டிரக் காதலர்களை ஈர்க்கும் பொருட்டு இந்த செயலை கியா செய்திருக்கின்றது. அத்துடன், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் பொருட்டு புதுவிதமான மறைப்புகளைக் கொண்டு அந்த வாகனத்தை மறைத்து டீசர் படங்களை வெளியீடு செய்திருக்கின்றது. வண்ண மயமான மற்றும் கலை ஓவியங்களைக் கொண்ட மறைப்பு ஸ்டிக்கர்களையே பிக்-அப் டிரக்கை மறைக்க பயன்படுத்தி இருக்கின்றது.
இந்த மறைப்புகளை ரிச்சர் பாய்ட் - டன்லப் எனும் புகழ்பெற்ற கலைஞர்களைக் கொண்டு உருவாக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த டீசர் படத்தையே அது தற்போது வெளியிட்டு இருக்கின்றது. டாஸ்மேன் சி பிரிவிற்கான பிக்-அப் டிரக் ஆகும். மிகவும் அழகான மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்கள் பலவற்றை இந்த காரில் கியா வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், அதுபற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இன்னும் சொல்லப் போனால் டாஸ்மேன் பற்றிய எந்தவொரு முக்கிய தகவல்களையும் கியா வெளியிடவில்லை. அந்த வாகனம் பற்றிய அனைத்து தகவல்களும் இப்போது வரை ரகசியம் காக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், வாகனம் பற்றிய ஒரு சில சுவாரஷ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்தவகையில், இந்த பிக்-அப் டிரக் சரக்குகளை ஏற்றி செல்ல மட்டுமல்ல குடும்பத்துடன் பயணிக்கவும் ஏதுவான பிக்-அப் டிரக்காக இது இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதன் ஸ்டைல் மற்றும் லுக்கை வைத்து பார்க்கையில் இதை எங்களால் யூகிக்க முடிகின்றது. இந்த காரை ஒன்றன் பின் ஒன்றாக உலக நாடுகளில் விற்பனைக்குக் கொண்டு வர கியா திட்டமிட்டுள்ளது.
முதலில் கொரிய சந்தையிலேயே டாஸ்மேன் பிக்-அப் டிரக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, இந்த பிக்-அப் டிரக் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் அது விற்பனைக்கு வர இருக்கின்றது.
ஆனால், இந்தியாவில் இந்த வாகனம் எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என துள்ளியமான தகவல்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில், முன்னதாக கூறியதைப் போலவே டாஸ்மேன் பிக்-அப் டிரக் பற்றிய எந்தவொரு முக்கிய விபரங்களையும் இந்த கியா வெளியிடவில்லை. விரைவில் இதையும் கியா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிக குறைவான எண்ணிக்கையிலேயே பிக்-அப் டிரக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. டொயோட்டா ஹைலக்ஸ், மஹிந்திரா பொலிரோ கேம்பர், டாடா யோதா, இசுஸு டி மேக்ஸ், வி-கிராஸ் மற்றும் இசுஸு ஹை-லேண்டர் என சொற்ப எண்ணிக்கையிலேயே இந்த பிரிவில் வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
அதேவேளையில் இந்த பிரிவில் இசுஸு நிறுவனம் மிக அதிக ஆப்ஷன்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றிற்கு போட்டியளிக்கும் விதமாக கியா அதன் டாஸ்மேனை இந்திய சந்தையில் விரைவிலேயே விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இதன் வருகை டொயோட்டா ஹைலக்ஸ் மற்றும் இசுஸு ஹைலேண்டருக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும் என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








