கியா நிறுவனத்துக்கு எவ்வளவு பெரிய மனசு... மேனுவல் கார்களை ஓட்டி அலுத்தது போதும் - புது ஆட்டோமேட்டிக் கார்கள்!!
கியா (Kia), தென்கொரியாவை சேர்ந்த முன்னணி கார் நிறுவனம். இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் இருந்து முதல்முறையாக கார்களை விற்பனை செய்ய ஆரம்பித்த கியா கடந்த வருடங்களில் பல தரமான கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில் அறிமுகம் செய்யப்பட்ட சொனெட் மற்றும் செல்டோஸ் கார்கள் புதியதாக ஜிடிஎக்ஸ் (GTX) வேரியண்ட்டை பெற்றுள்ளன. எக்ஸ்-ஷோரூம் விலைகள் மற்றும் மற்ற தொழிற்நுட்ப அம்சங்கள் உள்பட இந்த புதிய கியா கார்கள் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
2019ஆம் ஆண்டில் செல்டோஸ் கார் மூலமாக இந்தியாவில் பயணத்தை துவங்கிய கியா நிறுவனத்துக்கு நம் நாட்டில் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்த கார் செல்டோஸ் எனலாம். செல்டோஸ் மட்டுமின்றி, அதன்பின் வெளிவந்த கியா கார்கள் இந்திய மக்களை கவர்ந்தன. குறிப்பாக, செல்டோஸை விட அளவில் சிறியதாக, விலை குறைவானதாக அறிமுகம் செய்யப்பட்ட சொனெட்டை மக்கள் நிறைய பேர் வாங்குகின்றனர்.

இந்த நிலையில்தான், கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்களில் புதியதாக ஜிடிஎக்ஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது, சொனெட் மற்றும் செல்டோஸ் கார்களின் எச்.டி.எக்ஸ்+ வேரியண்ட்டை காட்டிலும் விலை அதிகமானதாகவும், அதேநேரம் ஜி.டி.எக்ஸ்+ வேரியண்ட்டை காட்டிலும் விலை குறைவானதாகவும் விளங்குகிறது.
முதலில், புதிய கியா சொனெட் ஜிடிஎக்ஸ் வேரியண்ட்டை பற்றி பார்ப்போம். கியா சொனெட் ஆனது சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் ஆகும். அதாவது, 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட கார் ஆகும். சொனெட் காரை இந்த ஆண்டு துவக்கத்தில் கியா நிறுவனம் அப்டேட் செய்தது. இதன்படி, சொனெட்டின் டிசைன் சற்று மெருக்கேற்றப்பட்டது மற்றும் புதிய தொழிற்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டன.

இந்த நிலையில், சொனெட்டில் சேர்க்கப்பட்டுள்ள புதிய ஜிடிஎக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.13.71 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மானிடர், முன்பக்க மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்களை பெறலாம். இவற்றுடன் பயணிகளின் சவுகரியத்துக்கும் நிறைய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்படி, முன்பக்கத்தில் வெண்டிலேட்டட் இருக்கைகள், 4 விதமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பவர்டு டிரைவர் இருக்கை, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், எல்இடி ஃபாக் விளக்குகள், காற்று சுத்திகரிப்பான், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்கள் புதிய சொனெட் ஜிடிஎக்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தம் 7 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கும் சொனெட் ஜிடிஎக்ஸ் வேரியண்ட்டில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் இந்த புதிய வேரியண்ட் கிடைக்காது. செல்டோஸ் ஜிடிஎக்ஸ் வேரியண்ட்டை பொறுத்தவரையில், சொனெட்டை போல் இல்லாமல் இந்த வேரியண்ட் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
இதில் எந்த என்ஜின் உடன் புதிய செல்டோஸ் ஜிடிஎக்ஸ் காரை வாங்கினாலும் எக்ஸ்-ஷோரூம் விலை ஒன்றே, ரூ.19 லட்சம். செல்டோஸ் ஜிடிஎக்ஸ் கார்களில் 18-இன்ச் அலாய் சக்கரங்கள், லெவல்-2 அடாஸ், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், எல்இடி விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஜிடிஎக்ஸ் வேரியண்ட்களின் அறிமுகத்துடன், கியா செல்டோஸ் எக்ஸ் லைன் மற்றும் சொனெட் எக்ஸ் லைன் கார்களில் புதியதாக அரோரா பிளாக் பேர்ல் பெயிண்ட் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கியா சொனெட் மற்றும் செல்டோஸ் ஜிடிஎக்ஸ் வேரியண்ட்களின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இந்த வேரியண்ட்கள் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் கிடைக்கும். இதன் மூலமாக, சொனெட் மற்றும் செல்டோஸ் கார்களை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் வாங்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications









