ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 பேர் புக் செய்யும் கியா கார்! ரூ.64 லட்சத்தில் விலை இருந்தால்கூட வாங்க ஆள் இருக்கு
கியா (Kia), தென்கொரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். இந்தியாவில் குறுகிய காலத்தில் முன்னணி கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், கியாவில் இருந்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தரமான கார்கள் ஆகும். அதேநேரம், கார்னிவல் போன்ற சொகுசு கார்களையும் இந்தியாவில் கியா விற்பனை செய்கிறது. சிறிய இடைவெளிக்கு பின்னர், சமீபத்தில்தான் புதிய மேம்படுத்தப்பட்ட கார்னிவல் லிமௌசைன் காரை கியா அறிமுகம் செய்தது. இந்த நிலையில், கார்னிவல் கார்களை டெலிவிரி கொடுப்பதில் கியா நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
நாட்டில் உள்ள அனைத்து விதமான மக்களையும் கவர்ந்தால்தான் அந்த நாட்டில் எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கும் வர்த்தகம் சிறப்பாக நடக்கும். அதாவது, மிடில்-கிளாஸ் மக்களை கவரும் வகையில் சொனெட், கேரன்ஸ் உள்ளிட்ட கார்களை கியா விற்பனை செய்தாலும், அதேநேரம் பணக்காரர்களை கவரும் வகையிலான கார்களும் விற்பனையில் இருக்க வேண்டியது அவசியமாகும்.

உலகளவில் கார்களை விற்பனை செய்யும் கியா நிறுவனத்திற்கு இதை சொல்லியா தர வேண்டும். அதனால்தான், 2019ஆம் ஆண்டில் செல்டோஸ் கார் மூலமாக இந்திய சந்தையில் நுழைந்த கியா நிறுவனம் அதற்கடுத்து 2020 துவக்கத்தில் அறிமுகப்படுத்திய 2வது கார், கார்னிவல் ஆகும். பெயருக்கேற்ப கார்னிவல் பிரம்மாண்டமான கார் ஆகும். அதிக இருக்கை வசதிகள், தள்ளக்கூடிய பின் கதவுகள் உள்ளிட்டவற்றுடன் சொகுசான காராக கார்னிவல் அறிமுகம் செய்யப்பட்டது.
இருப்பினும், சில வருடங்களில் கார்னிவலின் விற்பனையை இந்தியாவில் நிறுத்திய கியா நிறுவனம் கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் மீண்டும் கார்னிவல் காரை மேம்படுத்தப்பட்ட தோற்றத்தில் அறிமுகம் செய்தது. இந்த முறை கார்னிவல் லிமௌசைன் என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் நீளமான சொகுசு கார்களை லிமௌசைன் என அழைப்பது வழக்கம்.

ரூ.63.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கியா கார்னிவல் காருக்கு துவக்கம் முதலே அதிக முன்பதிவுகள் குவிய ஆரம்பித்தன. தற்போதுவரையில், சுமார் 3 ஆயிரத்து 350 கார்னிவல் லிமௌசைன் கார்கள் இந்தியாவில் புக் செய்யப்பட்டுள்ளதாக கியா தெரிவித்துள்ளது. இதைவிட ஆச்சிரியம் என்னவென்றால், அவற்றுள் 400 கார்னிவல் லிமௌசைன் கார்கள் புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டுவிட்டன.
கார் அறிமுகம் செய்யப்பட்ட 2 மாதங்களுக்கு உள்ளாக கார்னிவல் லிமௌசைன் போன்ற சொகுசு கார் 400 யூனிட்கள் டெலிவிரி செய்யப்பட்டு இருப்பது உண்மையில் ஆச்சிரியமானது ஆகும். லிமௌசைன் பிளஸ் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் புதிய கியா கார்னிவல் காரை அடர் கருப்பு அல்லது கிளாசியர் வொயிட் பேர்ல் நிறத்தில் வாங்கலாம்.

இந்த இரு கலர் ஆப்ஷன்களிலும் கார்னிவல் லிமௌசைன் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைப்பதாக கியா தெரிவித்துள்ளது. இந்த சொகுசு எம்பிவி காரின் முக்கியமான சிறப்பம்சமே அதன் 2வது இருக்கை வரிசை ஆகும். ஏனெனில், டிரைவருக்கு பின்னால் வழங்கப்படும் இருக்கைகளில் வெண்டிலேஷன், ஹீட்டிங் மற்றும் லெக் சப்போர்ட் என மிகுந்த சவுகரியமான பயணத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த லக்சரியான கியா காரினுள் டேஸ்போர்டில் 12.3 இன்ச்சில் இரு திரைகள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் பொருத்தப்படும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 193 பிஎஸ் மற்றும் 441 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்றாலும், சுமார் ரூ.63.90 லட்சத்தில் விலையை கொண்ட கியா சொகுசு காருக்கும் 2 மாதங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் விதமாக, முடிந்தவரையில் விரைவாக காரை புக் செய்த கஸ்டமர்களிடம் ஒப்படைக்க கியா முயற்சிப்பது பாராட்டுக்குரியது ஆகும்.


Click it and Unblock the Notifications









