மற்ற விளம்பர வீடியோ மாதிரி இல்ல.. ஒரு குழந்தையை வச்சே முழு வீடியோவையும் எடுத்திருக்காங்க..
இந்தியாவின் எஸ்யூவி (SUV) கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக கியா (Kia) நிறுவனம் சீக்கிரமே சிரோஸ் (Syros) எனும் புதுமுக கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காரை அது ஏற்கனவே நாட்டில் வெளியீடு செய்துவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. நீண்ட நாட்களாக டீசர் படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில், சமீபத்திலேயே சிரோஸ்-ஐ அது அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தது. இந்த நிலையிலேயே, தற்போது இந்த புதிய காரின் விளம்பர வீடியோக்களையும் நிறுவனம் வெளியிடத் தொடங்கி இருக்கின்றது.
கடந்த நாட்களில் டீசர் படங்கள் வாயிலாக இந்தியர்களின் கவனத்தைத் திசைத் திருப்பி வந்ததைபோல இப்போது விளம்பர வீடியோ வாயிலாக கார் காதலர்களை சிரோஸ் எஸ்யூவி பக்கம் வளச்சு போடும் பணியில் அது களமிறங்கி இருக்கின்றது. தற்பது வெளியாகி இருக்கும் விளம்பர வீடியோவில் காரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

மிக முக்கியமாக ஓர் சிறுமியின் வாயிலாக காரின் அம்சங்களை நிறுவனம் வெளிக்காட்டி இருக்கின்றது. ஆகையால், மற்ற விளம்பரங்களைக் காட்டிலும் இது கொஞ்சம் தனித்துவமானதாகக் காட்சியளிக்கின்றது. கியா சிரோஸ் ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காரின் பான்னெட் மிகவும் உயரமான அமைப்பைக் கொண்டிருக்கின்றது.
இதற்கு அதன் 17 அங்குல வீல்களும் ஓர் முக்கிய காரணமாகும். ஆமாங்க, இந்த அளவு பெரிய சைஸ் வீலே சிரோஸை அலங்கரிக்கின்றது. இதுதவிர, தனித்துவமாக பெட்டி போன்ற லுக்கை இந்த கார் கொண்டிருக்கின்றது. இவை அனைத்தும் சேர்ந்தே சிரோஸ் காருக்கு 'டால் பாய்' தோற்றத்தை வழங்கி இருக்கின்றன.
மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR)-ம் இதே மாதிரியான ஸ்டைலையேக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, இந்த காரை மேலும் கவர்ச்சியானதாக காண்பிக்கும் விதமாக ரூஃப் ரெயில்கள், ஐஸ் கட்டி போன்ற தோற்றம் கொண்ட ஹெட்லைட், மீன் தூண்டில் முள் போன்ற அமைப்புடைய பகல்நேர லைட், டோருடன் டோராக இருக்கும் கதவு கைப் பிடி மற்றும் இரண்டு அடுக்கு கிரில் ஆகியவை உள்ளன.
காரின் வெளிப்புறத்தைப் போலவே உட்பக்கத்தையும் இந்த விளம்பர வீடியோவில் கியா காண்பித்து இருக்கின்றது. இதன் வாயிலாக சிரோஸ் மிகவும் பிரீமியமான கேபினைக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், லெவல் 2 வகை அடாஸ் அம்சம், தரமான இருக்கை, 30 அங்குல நீளமான திரை உள்ளிட்டவற்றையே கியா சிரோஸை அலங்கரிக்கும் மிக முக்கியமான அம்சங்களாகக் காட்சியளிக்கின்றன.
இந்த 30 அங்குல நீளமான திரையில் 12.3 அங்குலம் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், 5 அங்குலம் கிளைமேட் கன்ட்ரோலுக்கானதாகவும் மற்றும் 12.3 அங்குலம் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிகளையும், ஹர்மேன் கர்டோன் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றையும் இந்த காரில் கியா வழங்கி இருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் ஆகியவையே அவை ஆகும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என பன்முக கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரில் பயணிக்கும்போது மிகவும் சூப்பரான பயண அனுபவம் கிடைக்கும் என்பதையும் தற்போதைய விளம்பர வீடியோ வாயிலாக கியா தெரியப்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக, குழந்தைகளுக்கு உகந்த வாகனமாக கியா சிரோஸ் இருக்கும் என்பதையே இந்த வீடியோ வாயிலாக நமக்கு தெரியப்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








