வாங்கினா இந்த காரைதான் வாங்குவன்னு நிறைய பேர் ஒத்த கால்ல நிக்கறாங்க... மாருதி, டாடாவுக்கு 'செக்' வைக்க போகுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ அல்லது மத்திய பகுதியிலோ கியா சைரோஸ் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கியா சைரோஸ் கார் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புத்தம் புதிய கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை எல்லாம் இந்த செய்தி உங்களுக்கு வழங்கும்.
செயல்திறனை பொறுத்தவரையில் கியா சைரோஸ் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர 118 பிஹெச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா சைரோஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்கள் கழித்து, சிஎன்ஜி, ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய வெர்ஷன்களும், ஒன்றன் பின் ஒன்றாக களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக கியா நிறுவனத்தின் கார்களில் அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது. இதற்கு கியா சைரோஸ் காரும் விதிவிலக்காக இருக்காது என கருதப்படுகிறது.

10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகள் எல்லாம் கியா சைரோஸ் காரில் வழங்கப்படலாம்.
பாதுகாப்பை பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், தற்போது வேகமாக பிரபலமடைந்து வரும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட வசதிகளை எல்லாம் கியா சைரோஸ் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.
டிசைனை பொறுத்தவரையில், முன் பகுதியில் எல்இடி ஹெட்லைட்கள், பின் பகுதியில் 'L' வடிவ எல்இடி டெயில்லைட்கள், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்க முடியும். கியா டெல்லுரைட் (Kia Telluride) காரின் டிசைன் சாயல், கியா சைரோஸ் காரில் தெரிவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற கார்களுக்கு எல்லாம் கியா சைரோஸ் போட்டியாக இருக்கும்.
இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள கியா சொனெட் (Kia Sonet) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்களுக்கு இடையில், கியா சைரோஸ் நிலைநிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த செய்திகள் வழங்கப்பட்டுள்ள படங்கள் அனைத்தும், உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








