பணக்காரர்கள் போட்டி போட்டு வாங்க போகும் கார்... லம்போர்கினி தயாரிப்பில் எந்த குறையையும் சொல்ல முடியாது!!
லம்போர்கினி (Lamborghini) நிறுவனம் அதன் புதிய உருஸ் எஸ்.இ பிளக்-இன் ஹைப்ரீட் (Urus SE Plug-in Hybrid) காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் லம்போர்கினியின் 2வது பிளக்-இன் ஹைப்ரீட் காராக உருஸ் எஸ்.இ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படையில் இது ஒரு லம்போர்கினி உருஸ் எஸ்யூவி கார் ஆகும். புதிய உருஸ் எஸ்.இ காருக்கு ரூ.4.57 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய லம்போர்கினி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இத்தாலி நாட்டை சேர்ந்த லம்போர்கினி உலகளவில் பிரபலமானதாக உள்ளதை நான் கூற வேண்டியது இல்லை. இருப்பினும், தாழ்வான ஸ்போர்ட்ஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்துவந்த லம்போர்கினி தனது முதல் எஸ்யூவி காரான உருஸ் -ஐ பலத்த ஆலோசனைகளுக்கு பிறகே அறிமுகப்படுத்தியது. ஏனெனில், எஸ்யூவி கார்கள் என்றாலே உயரமானவைகளாக இருக்கும். ஆதலால், ஆரம்பத்தில் லம்போர்கினிக்கு சிறிய தயக்கம் இருந்தது.

ஆனால், லம்போர்கினி உருஸ் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் லம்போர்கினி கார்களுள் ஒன்றாக உருஸ் விளங்குகிறது. இத்தகைய உருஸ் காரில் தான் தற்போது பிளக்-இன் ஹைப்ரீட் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உருஸ் எஸ்.இ என்கிற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஹைப்ரீட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.57 கோடி ஆகும்.
உருஸ் எஸ்.இ காரில் 4.0 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 620 எச்பி மற்றும் 800 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த டர்போ என்ஜின் உடன் 25.9kWh லித்தியம்-இரும்பு பேட்டரியை கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது.

என்ஜின் & எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டும் சேர்ந்து அதிகப்பட்சமாக 800 எச்பி மற்றும் 950 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை இந்த காரில் எட்ட குறைந்தப்பட்சம் 3.4 வினாடிகள் தேவைப்படும். இந்த காரின் டாப்-ஸ்பீடு 312kmph ஆகும். உருஸ் எஸ்.இ ஆனது ஓர் 4X4 டிரைவ் கார் ஆகும்.
அதாவது, இந்த காரில் வழங்கப்பட்டுள்ள 8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது இயக்க ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்கும். இது காரின் மேம்பட்ட செயல்படுதிறனுக்கு வழிவகுக்கிறது. உருஸ் எஸ்.இ காரை வெறும் எலக்ட்ரிக் மோட்டாரின் பவரில் மட்டும் கூட இயக்க முடியும். எலக்ட்ரிக் மோடில் இந்த காரின் டாப்-ஸ்பீடு 130kmph ஆகும்.

மேலும், வெறும் எலக்ட்ரிக் பவரில் காரை ஓட்டும்போதும் 4X4 டிரைவிங்கை பெறலாம். ஸ்ட்ராடா, ஸ்போர்ட், கோர்ஸா (ரேஸ் டிரக்கிற்கானது), நேவே, சாப்பியா, டெர்ரா (ஆஃப்-ரோடு பயணங்களுக்கு), இவி டிரைவ் (வெறும் எலக்ட்ரிக் மோட்டார் பவரில் இயங்க), ஹைப்ரீட், ரீசார்ஜ் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என மொத்தம் 10 விதமான டிரைவ் மோட்களை லம்போர்கினி உருஸ் எஸ்.இ காரில் பெறலாம்.
லம்போர்கினி ரெவோல்டோ காரின் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறையவற்றை புதிய உருஸ் எஸ்.இ காரில் லம்போர்கினி நிறுவனம் வழங்கியுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மேம்படுத்தப்பட்ட 12.3-இன்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்பிளேவை சொல்லலாம். உருஸ் எஸ்.இ காரை வாங்கும்போது, 100க்கும் அதிகமான வெளிப்புற பெயிண்ட் ஆப்ஷன்கள் மற்றும் 47 உட்புற ஃபினிஷிங் ஆப்ஷன்களை லம்போர்கினியின் அட் பெர்சோனம் புரோகிராமின் மூலமாக பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய உருஸ் எஸ்.இ காரின் அறிமுகம் ஆனது லம்போர்கினி உருஸ் கார் விற்பனையை மேலும் அதிகரிக்கும். இந்த காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் இன்னும் பெரிய லிஸ்ட் உள்ளது. அவற்றுள் முக்கியமானவைகளை மட்டுமே இந்த தொகுப்பில் குறிப்பிட்டுள்ளோம். பிளக்-இன் ஹைப்ரீட் ரக கார்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருவதால், உருஸ் எஸ்.இ காரின் விற்பனை சிறப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









