யாருமே எதிர்பாக்காத டுவிஸ்ட்.. ரூ.6.4 லட்சத்தை குறைத்த பிரபல கார் நிறுவனம்! இன்னும் நிறைய பேரு வாங்க போறாங்க!
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் அதன் முன்னணி ஆடம்பர கார் மாடல் ஒன்றின் விலையில் ரூ. 6.4 லட்சம் வரை விலை குறைப்பைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இப்போது அந்த கார் என்ன விலையில் விற்கப்படுகின்றது? எவ்வளவு விலையில் இருந்து ரூ. 6.4 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று லேண்ட் ரோவர் (Land Rover). இந்த நிறுவனத்தின் தரமான மற்றும் கவர்ச்சியான கார் மாடலாக ரேஞ்ஜ் ரோவர் வெலார் (Range Rover Velar) இருக்கின்றது. இந்த காருக்கு உலக அளவில் வரவேற்பு மிக மிக அதிகம்.

குறிப்பாக, இந்திய பணக்காரர்கள் மத்தியில் இந்த காருக்கு வரவேற்பு இரட்டிப்பாக காட்சயளிக்கின்றது. அதிலும், பாலிவுட் திரைநட்சத்திரங்கள் பலரின் ஃபேவரிட் கார் மாடலாகவும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான ஓர் கார் மாடலின் விலையையே தற்போது அதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை கூடுதலாக்கும் பொருட்டு லேண்ட் ரோவர் நிறுவனம் விலை குறைப்பைச் செய்திருக்கின்றது.
ஆகையால், இந்த காரின் தற்போதைய விற்பனை விலை ரூ. 87.9 லட்சமாக குறைந்திருக்கின்றது. முன்னதாக இதே கார் மாடல் 94.3 லட்சத்திற்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். அதேவேளையில், இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ. 93 லட்சத்திற்கே அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு பின்னரே கடந்த டிசம்பர் மாதத்தில் இதன் விலையை ரூ. 94.3 லட்சமாக உயர்த்தியது, லேண்ட் ரோவர். தற்போது பெரும் தொகையை குறைத்து அது நடவடிக்கை எடுத்திருக்கின்றது. முந்தைய மாடல்களைக் காட்டிலும் பலதரப்பட்ட சிறப்பம்சங்களைத் தாங்கியதகாவே 2024 ரேஞ்ஜ் ரோவர் வெலார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
புதிய லைட் செட்-அப் இந்த காரின் அழகிற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. பிக்ஸல் எல்இடி செட்-அப் முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில் மிக முக்கியமான மற்றும் பெரிய மாற்றங்கள் எல்லாம் இந்த காரின் பின் பக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

ஃபிசிக்கல் டச் பட்டன்கள் க்ளைமேட் கன்ட்ரோலுக்காக வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, 11.4 அங்குல வளைவான ஸ்டைலில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், கூடுதல் லக்சூரி அனுபவத்தை வழங்கும் விதமாக 20 வழிகளில் மசாஜ் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை முன் பக்கத்திலும், பவர் ரெக்லன் வசதிக் கொண்ட இருக்கை பின் பக்கத்திலும், ஏர் ப்யூரிஃபையர், ஒயர்லெஸ் சார்ஜிங் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, பவர்டு டெயில்கேட், மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட பான்னெட் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் இரண்டு விதமான தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 250 எச்பி மற்றும் 365 என்எம் டார்க்கை வெளியேற்றும். அதேபோல், டீசல் மோட்டார் அதிகபட்சமாக 204 எச்பி மற்றும் 430 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
இத்துடன், மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் வழங்கப்படுகின்றது. இரண்டு எஞ்சின்களிலும் ஆல் வீல் டிரைவ் மற்றும் 8ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி வழங்கப்படுகின்றது. இதன் பெட்ரோல் அதிக பவர்ஃபுல்லானதாகக் காட்சிளிக்கின்றது. அது வெறும் 7.5செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை எட்டிவிடும். அதேவேளையில், டீசல் மோட்டாரோ இதே வேகத்தை எட்ட 8.3செகண்டுகளை எடுத்துக் கொள்ளும். இத்தகைய பலதரப்பட்ட திறன் கொண்ட காரின் விலையிலேயே ரூ.6.4லட்சத்தை குறைத்திருக்கின்றது லேண்ட் ரோவர் நிறுவனம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைக்கத் தொடங்கி இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விலை குறைப்பைச் செய்திருக்கின்றது. இந்த விலைக் குறைப்பிற்கான காரணம் வெளியிடப்பவில்லை.


Click it and Unblock the Notifications









