மாருதி சுஸுகிக்கு இந்நேரம் வெடவெடத்து போயிருக்கும்! மஹிந்திராவின் 5கதவுகள் கொண்ட தாரா இது! அட்டகாசமா இருக்கு!
இந்தியாவில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தரமான எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் தார் (Thar)-ம் ஒன்றாகும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவில் மூன்று கதவுகள் கொண்ட வெர்ஷனில் மட்டுமே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதற்கு போட்டி என கூறப்படும் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) ஐந்து கதவுகளுடன் நாட்டுல் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக சற்றே தார் காருக்கான போட்டி அதிகரித்துள்ளது.
இதுதவிர, ஃபோர்ஸ் (Force) நிறுவனமும் அதன் கூர்கா (Gurkha) கார் மாடலின் ஐந்து கதவுகள் கொண்ட வெர்ஷனை இந்திய சந்தையில் களமிறக்கி இருக்கின்றது. இந்த மாதிரியான கடும் போட்டி சூழலைச் சமாளிக்கும் பொருட்டு மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவிலேயே அதன் ஐந்து கதவுகள் கொண்ட தார் காரை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

ஆனால், இந்த கார் தார் எனும் பெயரில் அல்லாமல் அர்மதா எனும் பெயரிலேயே அது விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. தற்போது இந்த காரின் படங்களே இணையத்தில் வாயிலாக கசிந்துள்ளன. இது விற்பனைக்கு வர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அதன் படங்கள் வெளியாகி உள்ளன.
முதல் முறையாக எந்தவொரு மறைப்புகளும் இன்றி இந்த கார் காட்சி தந்திருக்கின்றது. 3 கதவுகளைக் கொண்ட தார் காரைப் போலவே ஐந்து கதவுகள் கொண்ட அர்மதா மிகுந்த கட்டுமஸ்தான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் கூடுதல் முரட்டுத் தனமான தோற்றம் அர்மதாவிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதற்கு சில பாகங்கள் சற்றே தனித்துவமான வடிவமைப்பில் வழங்கியிருப்பதுதான் காரணமாக உள்ளது. அந்தவகையில், கிரில், ஹெட்லைட், பனி மின் விளக்கு, பம்பர் மற்றும் பான்னெட் ஆகியவை வித்தியாசமான தோற்றத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரின் முகப்பு பகுதிக்கு அழகு சேர்க்கும் பொருட்டு செவ்வக துளைகளை செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டதைப் போன்ற அமைப்புடைய கிரில்லே வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அமைப்பை வைத்து பார்க்கையில் கவர்ச்சிகரமான அணிகலன்களைக் கொண்டு மாடிஃபை செய்யப்பட்ட தார் காரை போல இது தெரிகின்றது. ஆனால், இதில் ஐந்து கதவுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தனைக் கதவுகள் கொண்ட தார் காரை இன்னும் மஹிந்திரா விற்பனைக்குக் கொண்டு வரவில்லை.
எனவேதான் இது விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் அர்மதா என்பது உறுதியாகி இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, 5 ஸ்போக்குகள் கொண்ட புதிய அலாய் வீல், கன் மெட்டல் கிரே நிறத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவை அனைத்தும் சேர்ந்தே அர்மதாவிற்கு வேற லெவல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றன.
இதேபோல், இந்த காரின் உட்பக்கத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், அதுபற்றிய முழுமையான விபரம் வெளியாகவில்லை. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, மூன்று வரிசை இருக்கை அமைப்பு, 10.25 அங்குல திரை, பனோரமிக் சன்ரூஃப், அடாஸ் அம்சம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
எஞ்சினைப் பொருத்த வரை தற்போதைய தார் கார் மாடலில் வழங்கப்படும் அதே மோட்டார் தேர்வே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய தார் கார் மாடலில் 1.5 லிட்டர் டீசல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஆகிய மோட்டார் தேர்வுகளே வழங்கப்படுகின்றன. இவற்றுடனேயே 5 டோர் தார் காரும் எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தார் காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேமாதிரியான வரவேற்பையே விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் அர்மாதவும் நாட்டில் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த கார் இந்தியாவில் ஆகஸ்டு 15இல் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








