8 ஆண்டுகள் வாரண்டியா!.. ஆடி, பிஎம்டபிள்யூ-வை கதற விட லெக்சஸ் போட்ட செம்ம பிளான்!
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று 8 ஆண்டுகள் வாரண்டியை அனைத்து கார் மாடல்களுக்கும் நிரந்தரமானதாக மாற்றி இருக்கின்றது. லெக்சஸ் (Lexus) நிறுவனமே இந்த அதிரடி நடவடிக்கையை தற்போது எடுத்திருக்கின்றது. சொகுசு உற்பத்தியில் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமே லெக்சஸ் ஆகும். இது தற்போது இந்தியாவில் எம்பிவி, எஸ்யூவி மற்றும் செடான் ரக கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எஸ்யூவி கார்கள் பிரிவில் என்எக்ஸ் (NX), ஆர்எக்ஸ் (RX) மற்றும் எல்எக்ஸ் (LX) ஆகிய கார் மாடல்களை லெக்சஸ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதேபோல், செடான் கார்கள் பிரிவில் இஎஸ் (ES) மாடலையும், எம்பிவி கார்கள் பிரிவில் எல்எம் (LM) எனும் கார் மாடலையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் பக்கம் இந்தியர்களை ஈர்க்கும் முயற்சியாகவே அது 8 ஆண்டுகள் வாரண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

நடப்பு ஜூன் 1 முதல் விற்கப்பட்ட அனைத்து லெக்சஸ்-இன் தயாரிப்புகளுக்கும் இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டம் பொருந்தும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. 8 ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் வாரண்டியையே லெக்சஸ் அறிவித்து இருக்கின்றது.
முன்னதாக 3 ஆண்டுகள்/ 1 லட்சம் கிமீ வாரண்டியையே லெக்சஸ் வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே போட்டி நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக இந்த நீண்ட கால வாரண்டி பிளானை அது அறிவித்து இருக்கின்றது. தன்னுடைய தயாரிப்புகளின் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பொருட்டும் இந்த நீண்ட கால வாரண்டி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
லெக்சஸ் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான மெர்சிடிஸ் பென்ஸ் 3 ஆண்டுகள் வாரண்டியையும், பிஎம்டபிள்யூ 2 ஆண்டுகள் வாரண்டியையே ஸ்டாண்டர்டு வாரண்டியாக வழங்கிக் கொண்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், ஆடி நிறுவனம் சற்றே அதிகமாக 5 ஆண்டுகள் வாரண்டியை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இவர்களுக்கே கூடுதல் போட்டியை நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தின் வாயிலாக லெக்சஸ் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி இஎஸ் கார் மாடலே மலிவு விலை கார் மாடலாக உள்ளது. அது இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இஎஸ் 300எச் எக்ஸ்க்யூசைட் மற்றும் இஎஸ் 300எச் லக்சூரி ஆகியைவேயே அவை ஆகும்.
முதல் ஒன்று 63.10 லட்சம் ரூபாய் என்கிற விலையில் விற்கப்படுகின்றது. இதுவே ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இரண்டாவது ஒன்று ரூ. 69.70 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக அதிக பிரீமியம் அம்சங்களையும், தொழில்நுட்ப வசதிகளயைும் தாங்கியதே இந்த கார் மாடல் ஆகும்.
உரிமையாளரின் குரலை அடையாளம் காணும் அம்சம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்களையும் இஎஸ் தன்னுள் தாங்கி இருக்கின்றது. அதுதவிர, கூடுதல் இட வசதிக் கொண்டதாகவும் இந்த கார் மாடல் உள்ளது. எஞ்சினைப் பொருத்தவரை இந்த கார் மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாருடன், ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இவையிரண்டும் சேர்ந்து 218 பிஎஸ் பவர் வரை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், பெட்ரோல் மோட்டார் மட்டும் தனியாளாக 175 பிஎச்பி பவரையும், 221 என்எம் டார்க் ஆற்றலையும் வெளியேற்றும். காரின் இயக்கத்தை சுலபமானதாக மாற்றும் விதமாக இ-சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கருவி வழங்கப்பட்டுள்ளது.
ஆடி ஏ6 (Audi A6), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) மற்றும் மெர்சிடிஸ் இ கிளாஸ் (Mercides E Class) உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும் வகையிலேயே லெக்சஸ் இஎஸ் செடான் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லெக்சஸ் நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தின் வாயிலாக வாடிக்கையாளர்களை மிகப் பெரிய அளவில் திருப்திப்படுத்த திட்டமிட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், தங்களின் தயாரிப்புகள் அதிக தரமானது மற்றும் நீடித்து உழைக்கும் திறன்மிக்கது என்பதையும் இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி பிளானின் வாயிலாக வெளியுலகிற்கு காண்பித்திருக்கின்றது. லெக்சஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஏற்கனவே அதிக பாதுகாப்பு திறனுக்கு பெயர்போனவையாக உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








