கப்பலே இந்த கார் முன்னாடி வந்தா சலாம் அடிக்கும்! அரண்மனை மாதிரியான சொகுசு அம்சம் கொண்ட காரின் டெலிவரி ஸ்டார்ட்
உல்லாச கப்பல், அரண்மனை ஆகியவற்றிற்கே டஃப் கொடுக்கும் அம்சங்கள் கொண்ட காராக லெக்சஸ் (Lexus) நிறுவனத்தின் எல்எம் 350எச் (LM 350h) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். மிக மிக அதிக ஆடம்பர அம்சங்களை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த வாகனத்தை அல்ட்ரா லக்சூரி (ultra-luxury) வாகனம் என வாகன ஆர்வலர்கள் போற்றுகின்றனர். அந்த அளவிற்கே சொகுசு அம்சங்களால் நிரப்பப்பட்ட வாகனமாக எல்எம் 350எச் காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடலையே இந்தியர்களுக்காக கடந்த மார்ச் மாதத்தில் விற்பனைக் களமிறக்கியது லெக்சஸ் நிறுவனம்.
இந்த காரின் அறிமுகம் மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இப்போதே இதன் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கி இருக்கின்றன. சுமார் நான்கு மாத இடைவெளிக்கு பின்னரே எல்எம் 350எச் எம்பிவியின் டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றன. இதற்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்னதான் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த தகவலை தாராளமாக நம்பலாம் என கூறும் அளவிற்கே அதில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் உள்ளன. மிக மிக தாராள மனசுடன் பிரீமியம் அம்சங்கள், சொகுசு அம்சங்கள் மற்றும் நவீன கால அம்சங்களை வாரி வழங்கி இருக்கின்றது, லெக்சஸ்.
அந்தவகையில், 48 அங்குல அளவிலான பெரிய திரை (பொழுதுபோக்கிற்கான ஸ்கிரீன்), 23 ஸ்பீக்கர்களைக் கொண்ட மியூசிக் சிஸ்டம், கைகளுக்கு ஓய்வளிக்கும் குஷன் பேட்கள், யுஎஸ்பி சார்ஜர், ஒயர்லெஸ் சார்ஜர், புத்தகம் படிப்பதற்கான குட்டி லைட் செட்-அப் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.
இதுமட்டுமில்லைங்க, குடைகளை தாங்குவதற்கான இடம், சிறிய குளிர்சாதன பெட்டி, இரட்டை சன்ரூஃப், எச்விஏசி (HVAC)-க்கான டச் கன்ட்ரோல்கள், இருக்கைகளைக் கன்ட்ரோல் செய்வதற்கான அம்சம் போன்ற அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, இதன் இருக்கைகள் மிகவும் மிருதுவானதாக இருக்கும். மேலும், அதை படுக்கைக்கு இணையாக சாய்த்துக் கொள்ளவும் முடியும்.
எனவே, நீண்ட தூர பயணமாக இருந்தாலும் இந்த கார் கைகளில் இருந்தால் பெரிய அளவில் அலுப்பே இல்லாமல் பயணித்துக் கொள்ள முடியும். மேலும், இந்த காரை 4 மற்றும் 7 என இரண்டு விதமான இருக்கைகள் ஆப்ஷனில் லெக்சஸ் விற்பனைக்கு வழங்குகின்றது.
இதில் 4 இருக்கைகள் தேர்வு என்பது முழுக்க முழுக்க ஆடம்பர பயணத்தை விரும்புவர்களுக்கானதாக உள்ளது. ஆகையால், பயணத்தின்போது தனிமை உணர்வுடனும் பயணித்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்காக, டிரைவர் பகுதியை பிரிக்கும் விதமாக இடையில் கண்ணாடியால் ஆன சுவர் அமைப்பும் 4 சீட்டர் வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுபோன்ற முழுக்க முழுக்க ஆடம்பர பயணத்தை விரும்புவோர்க்கு என்றே தயார் செய்யப்பட்டு இருக்கும் காரின் டெலிவரி பணிகளையே நாட்டில் லெக்சஸ் நிறுவனம் தற்போது தொடங்கி இருக்கின்றது. லெக்சஸ் நிறுவனம் இந்த சொகுசு எம்பிவி காரை தன்னுடைய புகழ்பெற்ற ஜிஏ-கே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே உருவாக்கி இருக்கின்றது.
மேலும், இதில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் ஹைபிரிட் எஞ்சினையே பயன்படுத்தி இருக்கின்றது. இது அதிகபட்சமாக 247 பிஎச்பி பவரையும், 239 என்எம் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. இ-சிவிடி மற்றும் இ-4 வீல் டிரைவ் ஆகிய அம்சங்களையும் இந்த கார் மாடல் தன்னுள் தாங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்தியர்களைக் கவரும் விதமாக லெக்சஸ் நிறுவனம் அதன் எல்எம் 350எச் சொகுசு எம்பிவி காரை விற்பனைக்குக் களமிறக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. இந்த காருக்கு அம்பானி மற்றும் பெரும் பணக்காரர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








