செலவு பற்றி யாரும் யோசிப்பது இல்லை... விலையுயர்ந்த கார்களை வாங்க துடிக்கும் இந்தியர்கள் - ரிப்போர்ட்!!
இந்தியாவில் லக்சரி கார்களுக்கான மார்க்கெட் குறிப்பிடத்தக்க வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக, மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களை நம் மக்கள் வாங்கி குவிக்கின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட லக்சரி கார்களின் எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. வழக்கத்தை காட்டிலும் அவை எவ்வளவு அதிகம் என்பதை பற்றியும், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அமெரிக்கா, சீனா அளவிற்கு இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனையாகுவதில்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இருப்பினும், உலகளவில் சொகுசு கார்களுக்கான பெரிய அளவிலான மார்க்கெட்களுள் ஒன்று நம் இந்தியா ஆகும். மெர்சிடிஸ்-பென்ஸ், பி.எம்.டபிள்யூ மற்றும் ஆடி என்பன இந்தியாவின் டாப்-3 லக்சரி கார் நிறுவனங்களாக விளங்குகின்றன.

இதில் முதலிடம் வகிக்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம், இந்த 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் மொத்தம் 9,262 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது 2023ஆம் ஆண்டின் இதே முதல் 6 மாதங்களை காட்டிலும் 9% அதிகமாகும். இந்தியாவில் 2024 ஜனவரி - ஜூனில் விற்பனை செய்யப்பட்ட மொத்த சொகுசு கார்களில் சுமார் 55% மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் ஆகும்.
மெர்சிடிஸ் நிறுவனம் விற்பனை செய்தவைகளில் 25 சதவீதம் ரூ.1.5 கோடிக்கும் அதிக விலையிலான கார்கள் ஆகும். அதாவது, மெர்சிடிஸ் நிறுவனத்தில் விற்கப்பட்ட 4இல் ஒரு கார் ரூ.1.5 கோடிக்கும் அதிகமான விலை கொண்டது ஆகும். பென்ஸ், ஏஎம்ஜி மற்றும் மேபக் என 3 விதமான வெர்சன்களில் மெர்சிடிஸ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் மேபக் ஆனது இருப்பதிலேயே விலையுயர்ந்த கார்களாக விளங்குகின்றன.

மெர்சிடிஸ்-மேபக் கார்களின் விற்பனை ஆனது 2023ஐ விட சுமார் 108% அதிகரித்துள்ளது. அதேபோல், மெர்சிடிஸ் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையும் 60% அதிகரித்துள்ளது. ஆனால் உண்மையில், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தை காட்டிலும் 2வது இடத்தில் உள்ள பிஎம்டபிள்யூ இதனை காட்டிலும் பெரிய அளவிலான வளர்ச்சியை சந்தித்துள்ளதாக ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம்.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாத விற்பனையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் சுமார் 21% வளர்ச்சியை கார்கள் விற்பனையில் கண்டுள்ளது. பிஎம்டபிள்யூ க்ரூப்பில் இருந்து 2024 ஜனவரி - ஜூனில் மொத்தம் 7,098 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், 6,734 பிஎம்டபிள்யூ கார்களும், 364 மினி கார்களும் அடங்குகின்றன.

இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள ஆடி இந்த 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 2,477 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இதில் முதல் 3 மாதங்களில் விற்பனை செய்யப்பட்டவை 1,046 மட்டுமே. ஆனால், அதற்கடுத்த 3 மாதங்களில் விற்பனை செய்யப்பட்டவை 1,431 ஆகும். ஆடி நிறுவனத்தின் மற்றொரு முக்கிய பிஸ்னஸான பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையும் 33% வளர்ச்சி கண்டுள்ளது.
ஆடிக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தை லெக்ஸஸ் பிடித்துள்ளது. லெக்ஸஸ் இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 2023ஆம் ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் 14% அதிகரித்துள்ளது. லெக்ஸஸ் கார் வாங்கும் 55% வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வது இ.எஸ் என்கிற செடான் கார் ஆகும். அதேபோல், லெக்ஸஸ் நிறுவனத்தின் எஸ்யூவி கார்கள் விற்பனையும் 60% அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சொகுசு கார்கள் விற்பனையில் தவிர்க்க முடியாத சந்தையாக நம் இந்தியா மாறி வருவதை இதன் மூலம் அறிய முடிகிறது. குறிப்பாக, பென்ஸ் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் அவற்றின் எலக்ட்ரிக் கார்களின் விற்பனையை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக சார்ஜிங் உள்கட்டமைப்பிலும் இந்த நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.


Click it and Unblock the Notifications









