இந்த மஹிந்திரா காரின் அதிகபட்ச விலையே ரூ.21லட்சம் மட்டும்தான்! ஒருத்தரு ரூ.1.31கோடி கொடுத்து வாங்கியிருக்காரு!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அண்மையில் அதன் 5 டோர் தார் ராக்ஸ் (Thar Roxx) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. யாரும் எதிர்பார்த்திராத விலையாக ரூ. 12.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே இந்த காருக்கு நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 20.49 லட்சம் மட்டுமே ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதை விட சற்று அதிகமாக இதன் விலை இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த மாதிரியான சூழலிலேயே ஓர் நபர் மஹிந்திரா தார் ராக்ஸ் கார் மாடலை ரூ. 1.31 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது என்ன அதிசயம் என நீங்கள் கேட்கலாம், மேலும், ஏன் இந்த விலை குறைவான காரை ரூ. 1.31 கோடி கொடுத்து அவர் வாங்கினார், ஒருவேளை அவரை டீலர்கள் ஏமாத்திட்டாங்களோ என்கிற சந்தேகமும் உங்களுக்கு எழும்பியிருக்கலாம்.

ஆனால், இதில் எந்தவொரு ஏமாத்து வேலையும் நடைபெறவில்லை. அந்த நபர் தெரிந்தே 20.49 லட்ச ரூபா மதிப்புள்ள காரை 1.31 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கின்றார். காரணம், அதுதான் மஹிந்திராவால் தயாரிக்கப்பட்ட முதல் தார் ராக்ஸ் கார் மாடல் ஆகும். விஐஎன் 0001 எனும் சீரியல் நம்பரையே அது கொண்டிருக்கும்.
எனவே இந்த யூனிட் அரிய வகை தயாரிப்பாகக் கருதப்படுகின்றது. இத்தகைய ஓர் யூனிட்டையே ஓர் முகம் அறியப்படாத நபர் தற்போது வாங்கியிருக்கின்றார். அவரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏலத்தின் வாயிலாகவே இந்த கார் விற்பனைச் செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்த காருக்கான ஏலப் பணிகள் செப்டம்பர் 15 தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. பலர் இதில் கலந்துக் கொண்டு போட்டியிட்ட நிலையில், இறுதியாக ரூ. 1.31 கோடிக்கு விஐஎன் 0001 எண் கொண்ட தார் ராக்ஸ் விற்பனையாகி இருக்கின்றது.
இந்த காரின் விற்பனை வாயிலாக கிடைத்திருக்கும் லாபத்தை ஏழை மற்றும் எளிய மக்களின் நலனுக்கு மஹிந்திரா பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் 5 டோர் தார் ராக்ஸ் கார் மாடலை மட்டுமில்லைங்க, முன்னதாக, 3 கதவுகள் கொண்ட தார் கார் மாடலின் விஐஎன் 0001 எண் கொண்ட யூனிட்டையும் ஏலத்தின் வாயிலாகவே விற்பனைச் செய்தது.
அதற்கும் நல்ல வரவேற்பே கிடைத்தது. ரூ. 1.11 கோடிக்கே அது விற்பனையானது. இந்த பெரும் தொகை கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மீட்புப் பணிக்காக செலவிடப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா நிறுவனம் விஐஎன் 0001 எனும் எண்ணாக தயாரித்திருப்பது ஏஎக்ஸ்7 எல் டீசல் எஞ்சின், ஆட்டோமேட்டிக், 4வீல் டிரைவ் திறன் கொண்ட வேரியண்ட் ஆகும்.
இதுவே இந்த கார் மாடலின் டாப் ஸ்பெக் ஆகும். எனவே பலதரப்பட்ட பிரீமியம் அம்சங்களை தாங்கியதாக இந்த யூனிட் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, ஆனந்த் மஹிந்திராவின் சிக்னேச்சர் கொண்ட பேட்ஜ் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், இது என்ன மாதிரியான நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பதை மஹிந்திரா நிறுவனம் உறுதி செய்யவில்லை.
இதனை பிரத்யேக நிறத்தாலேயே அது அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறத்தை தேர்வு செய்யும் அதன் உரிமையாளருக்கே உண்டு என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், டீப் ஃபாரஸ்ட் (Deep Forest), எவரெஸ்ட் ஒயிட் (Everest White), டேங்கோ ரெட் (Tango Red), பேட்டில்ஷிப் கிரே (Battleship Grey), நெபுளா ப்ளூ (Nebula Blue), பர்ன்ட் சியன்னா (Burnt Sienna) மற்றும் ஸ்டெல்த் பிளாக் (Stealth Black) ஆகியவையே அவை ஆகும்.
அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதே ஏஎக்ஸ்7 எல் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த வேரியண்டில் 10.25 அங்குல திரை இரண்டு, ஆட்டோமேட்டிக் ஏசி, வெண்டிலேட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள், 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட பவர்டு டிரைவர்களுக்கான இருக்கை மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், எஞ்சினைப் பொருத்த வரை 2.2 லிட்டர் டீசல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 175 பிஎஸ் பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், 4 வீல் டிரைவ் அம்சத்தையும் இது தாங்கியிருக்கும்.
பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஆட்டோ ஹோல்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் லெவல் 2 வகை அடாஸ் அம்சம் ஆகியவற்றையும் இது தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தார் கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதே வரவேற்பு தார் ராக்ஸ்-க்கும் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இப்போதே புக்கிங் மிக அமோகமாக கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், விற்பனையிலும் அது மிகப் பெரிய சாதனைகளைப் படைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








