ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
மஹிந்திரா பொலேரோ நியோ+ (Mahindra Bolero Neo+) இந்திய மார்க்கெட்டில் மிக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த நிலையில், இந்த புதிய பொலேரோ நியோ காரின் விலை குறைவான வேரியண்ட் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் காட்சி தந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த மஹிந்திரா டியூவி300 காரை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால், டியூவி300 கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகாததால் சில வருடங்களுக்கு முன் டியூவி300 மாடலின் விற்பனையை மஹிந்திரா நிறுத்தியது. பின், டியூவி300 காரின் தோற்றத்தில் சில திருத்தங்களை செய்து, 'பொலேரோ நியோ' என்கிற பெயரில் சில வருடங்களுக்கு முன் மஹிந்திரா அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் மஹிந்திரா பொலேரோ கார்கள் சிறப்பாக விற்பனையாகுவதால், அதன் பெயரை பயன்படுத்தும் விதமாக பொலேரோ நியோ காரை மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. ஆனால், மஹிந்திரா பொலேரோ மற்றும் பொலேரோ நியோ இரண்டும் தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் நிறைய வித்தியாசங்களுடன் உள்ளன. இந்த நிலையில்தான், மிக சமீபத்தில் இந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் பொலேரோ நியோ காரின் புதிய 9-சீட்டர் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா பொலேரோ நியோ+ என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.39 லட்சமாக நிர்ணயிக்கப்ப்பட்டுள்ளது. 3-வரிசைகளில் இருக்கைகளை கொண்ட புதிய பொலேரோ நியோ+ கார் மார்க்கெட்டில் பி4 மற்றும் பி10 என மொத்தம் 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதில், பொலேரோ நியோ+ பி4 வேரியண்ட் கார்கள் மஹிந்திரா டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன. அதாவது, ரூ.11.39 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் பொலேரோ நியோ+ கார்கள் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன. பி10 வேரியண்ட்டை காட்டிலும் விலை குறைவானது என்பதால், பி4 வேரியண்ட்டில் சில வசதிகள் இடம்பெறவில்லை.
அதாவது, காருக்குள் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVM-கள், ரிமோட் கீ எண்ட்ரீ, ஸ்டேரிங் கண்ட்ரோல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரியர் வைபர், ரியர் டிஃபாக்கர் உள்ளிட்டவற்றை பி4 வேரியண்ட்டில் பெற முடியாது. அதேபோல், இந்த வேரியண்ட்டில் அலாய் சக்கரங்களுக்கு பதிலாக இரும்பு சக்கரங்களே கிடைக்கும்.

மேலும், இந்த காரில் ஃபாக் விளக்குகளும் வழங்கப்படவில்லை என்பதை இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம் அறிய முடிகிறது. இருப்பினும், ஈக்கோ மோட் உடன் மேனுவல் ஏசி, ட்யூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் அணியாததை எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவற்றை இந்த காரில் பெறலாம்.
பி4 மற்றும் பி10 வேரியண்ட்களில் முதல் வரிசையில் 2 இருக்கைகளும், 2வது வரிசையில் 3 இருக்கைகளும், 3வது வரிசையில் 4 இருக்கைகளும் கிடைக்கும். புதிய பொலேரோ நியோ+ காரில் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கார்பியோவுக்கு அடுத்து மஹிந்திராவில் இருந்து அதிகம் விற்பனையாகும் காராக பொலேரோ உள்ளதினால், முடிந்தவரையில் புதிய, புதிய பொலேரோ கார்களை அறிமுகம் செய்ய மஹிந்திரா முனைப்புடன் உள்ளது. இந்த வரிசையில் களமிறக்கப்பட்டுள்ள பொலேரோ நியோ+ காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் தோற்றத்திலும், தொழிற்நுட்ப வசதிகளிலும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றதாக உள்ளதை இந்த இடத்தில் பதிவு செய்தாக வேண்டும்.


Click it and Unblock the Notifications









