டாடாவுக்கு கார் விற்பனையில் தண்ணி காட்டும் மஹிந்திரா! யாராலும் தடுத்து நிறுத்த முடியல!!
மஹிந்திரா (Mahindra), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம். குறிப்பாக, இந்த வருடத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை அறிமுகம் செய்த பிறகு மஹிந்திராவின் விற்பனை வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் மூலமாக, கடந்த அக்டோபர் மாத கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸை முந்தி 3வது இடத்தை பிடித்த மஹிந்திரா கடந்த நவம்பர் மாதத்தில் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
மாருதி சுஸுகிக்கு அடுத்து கார்கள் விற்பனையில் 2வது இடத்தை யார் பிடிப்பது என்பதில் ஹூண்டாய்க்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக டாடா கார்களின் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது. அதேநேரத்தில், மஹிந்திரா கார்களின் விற்பனை அதிகரித்து வருவதால், கடந்த அக்டோபர் மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸை முந்தி 3வது இடத்தை பிடித்து மஹிந்திரா அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.

ஆனால், கடந்த 2024 நவம்பர் மாத விற்பனையில் சில நூறு கார்கள் வித்தியாசத்தில் மஹிந்திராவை முந்தி டாடா மோட்டார்ஸ் தனது வழக்கமான 3வது இடத்தை சொந்தமாக்கி கொண்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 46 ஆயிரத்து 222 கார்களை மஹிந்திரா இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெறும் 39 ஆயிரத்து 981 கார்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனத்தால் விற்க முடிந்தது.
இந்த வகையில் பார்த்தால், மஹிந்திரா கார்கள் விற்பனை ஆனது 6 ஆயிரத்து 241 யூனிட்கள் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 50 ஆயிரம் கார்களுக்கும் அதிகமாக 54 ஆயிரத்து 504 கார்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், அக்டோபரை காட்டிலும் நவம்பரில் 8 ஆயிரத்து 282 கார்களை மஹிந்திரா குறைவாக விற்பனை செய்துள்ளது.

இதற்கு காரணம், தார் வாகனத்தை தவிர்த்து மற்ற அனைத்து மஹிந்திரா கார்களும் நவம்பரை காட்டிலும் அக்டோபரில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. வழக்கம்போல் கடந்த நவம்பர் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா காராக முதலிடத்தை ஸ்கார்பியோ பிடித்துள்ளது. ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என ஸ்கார்பியோ கார்கள் இரு விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த மாதத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 704 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 நவம்பரில் இதனை காட்டிலும் 500 ஸ்கார்பியோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த அக்டோபரில் சுமார் 15 ஆயிரத்து 677 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு, இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களுள் ஒன்றாக ஸ்கார்பியோ விளங்கியது.

ஸ்கார்பியோவுக்கு அடுத்து 2வது இடத்தில் எக்ஸ்யூவி700 கார் 9 ஆயிரத்து 100 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2023 நவம்பரில் 7 ஆயிரத்து 221 எக்ஸ்யூவி700 கார்களும், 2024 அக்டோபரில் 10 ஆயிரத்து 435 எக்ஸ்யூவி700 கார்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள தார் வாகனத்தின் விற்பனை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
தார் 3-கதவு வாகனம், தார் ராக்ஸ் 5-கதவு வாகனம் என இரண்டும் சேர்த்து கடந்த மாதத்தில் மொத்தம் 8 ஆயிரத்து 708 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, 2023 நவம்பர் மற்றும் 2024 அக்டோபர் என இரு மாதங்களை காட்டிலும் அதிகமாகும். இவற்றிற்கு அடுத்து 4வது மற்றும் 5வது இடங்களில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ மற்றும் பொலிரோ கார்கள் முறையே 7,656 மற்றும் 7,045 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. இவை இல்லாமல், கடந்த மாதத்தில் ஆயிரம் எக்ஸ்யூவி400 இவி எலக்ட்ரிக் கார்கள் மற்றும் 9 மராஸ்ஸோ கார்களையும் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் அனைத்து கார்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக, எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகுவது மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதை காட்டுகிறது. இருப்பினும், மஹிந்திரா நிறுவனம் அதன் பிரபலமான பொலிரோ காரை அப்டேட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications









