22 வருஷமா அசைக்க முடியாத நம்பிக்கை!! ஸ்கார்பியோ கார்களில் அப்படி என்ன தான் இருக்கு?
மஹிந்திரா (Mahindra), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றான இது, கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஜப்பான் மற்றும் கொரியன் கார்களுக்கு ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், அதேநேரம் நம் இந்தியாவை சேர்ந்த கார் நிறுவனங்களும் ஒவ்வொரு மாதமும் கணிசமான எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்கின்றன. அவ்வாறு, கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள இந்திய கார் நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகும்.

இதில் டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் 3வது பெரிய கார் நிறுவனமாகவும், மஹிந்திரா அதற்கடுத்து 4வது பெரிய கார் நிறுவனமாகவும் உள்ளன. கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் டாடா கார்களின் விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 ஆயிரத்தை நெருங்கி இருக்கும் நிலையில், மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த மாதத்தில் மொத்தம் 41,008 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் வெறும் 34,694 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 18.20%, அதாவது 6,314 யூனிட்கள் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை இந்தியாவில் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது என்றாலும், மார்ச்சை காட்டிலும் ஏப்ரலில் 377 மஹிந்திரா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா காராக முதலிடத்தை ஸ்கார்பியோ பிடித்துள்ளது.
இந்திய மார்க்கெட்டில் நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டுவரும் மிகவும் சில கார்களுள் ஒன்றான மஹிந்திரா ஸ்கார்பியோ கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 14,807 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் சுமார் 5,190 யூனிட்கள் அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 10 ஆயிரத்தை கூட தொடவில்லை, 9,617 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் 15,151 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஸ்கார்பியோ கார்களுக்கு அடுத்து, கடந்த மாதத்தில் பொலேரோ கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பொலேரோ கார்களின் எண்ணிக்கை 9,537 ஆகும். 2023 ஏப்ரலில் 9,054 பொலேரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இதற்கடுத்து 3வது மற்றும் 4வது இடங்களில் மஹிந்திரா தார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் உள்ளன. இவை இரண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் முறையே 6,160 மற்றும் 6,134 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 5வது இடத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 4,003 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இவை மட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 347 எக்ஸ்யூவி400 இவி எலக்ட்ரிக் கார்களையும், 20 மராஸ்ஸோ கார்களையும் மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸை போல், மஹிந்திராவும் தற்சமயம் 7 கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இருப்பினும், மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. எக்ஸ்யூவி300 காரின் புதிய ஜென்ரேஷன் சமீபத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், எக்ஸ்யூவி300 கார்களின் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









