இந்தியாவில் 5 கதவுகள் கொண்ட தார் காருக்கு புக்கிங் தொடங்கியது.. இது நிறுவனத்தால் தொடங்கப்பட்ட புக்கிங் அல்ல!
இந்தியாவின் புகழ்பெற்ற எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஒன்றாக தார் (Thar) இருக்கின்றது. இதன் 5 டோர் வெர்ஷன் (5 Door Thar)-ஐ விரைவில் மஹிந்திரா (Mahindra) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. 2024 ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
இதை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டது. இந்த நிலையிலேயே மஹிந்திரா கார் விற்பனையாளர்கள் சிலர் இந்த காருக்கான முன்பதிவு பணிகளைத் தொடங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை இதற்கு கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இது அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய மஹிந்திரா தார் 5 டோர் வெர்ஷனில் மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 203 பிஎச்பி திறன் கொண்ட 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 175 பிஎச்பி திறன் கொண்ட 2.2 லிட்டர் டீசல் மற்றும் 117 பிஎச்பி திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே 5 கதவுகள் வெர்ஷனில் வழங்கப்பட இருக்கின்றன.
இதே என்சின் ஆப்ஷன்களே தார் கார் மாடலின் 3 கதவுகள் கொண்ட வெர்ஷனிலும் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ்கள் ஆப்ஷன்கள் மற்றும் 2WD மற்றும் 4WD டிரைவ்டிரெய்ன் ஆகிய சிஸ்டமும் 5 டோர் வெர்ஷனில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே மஹிந்திரா தார் 5 டோர் வெர்ஷனை தீவிர சாலை பல பரீட்சைக்கு ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது. விரைவில் இந்த காரின் உற்பத்தி பணிகளை அது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த கார் விற்பனைக்கு வரும்போது மஹிந்திரா தார் அர்மடா (Armada) எனும் பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த கார் மாடலில் எஞ்சினைப் போலவே இன்னும் பல அம்சங்கள் 3 கதவு தாரில் வழங்கப்பட்டு இருப்பதைப் போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இட வசதி மற்றும் உருவத்தில் 3 கதவுகள் தார் ஒப்பிடுகையில் 5 டோர் சற்று பெரியதாகவும், அதிக இட வசதியைக் கொண்டதாகவும் இருக்கும்.
இதுதவிர, சிங்கிள்-பேன் சன்ரூஃப், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், பின்புறத்திற்கான ஏசி துவாரங்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட், முன் மற்றும் பின்பக்கத்தில் ஆர்ம்ரெஸ்ட்கள் ஆகியவையும் 5 டோர் தார் கார் மாடலில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல் பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக அதிகளவில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டேஷ்கேம் மற்றும் முன் பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர, டிரம் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவையும் 5 டோர் தார் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுபோன்று இன்னும் பல பாதுகாப்பு அம்சங்கள் இந்த கார் மாடலில் எதிர்பார்க்கப்படுகின்றது.
மிக நேர்த்தியான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கம் விதமாக இந்த காரில் இரண்டு விதமான திரைகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராகவும் செயல்படும். குடும்பத்துடன் டிராவல் செய்ய விரும்புவர்கள் மற்றும் ஆஃப்-ரோடு பயண ஆர்வலர்கள் மத்தியில் இந்த கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா தார் 3 கதவுகள் கொண்ட வெர்ஷனுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே மஹிந்திரா நிறுவனம் இந்த கார் மாடலில் 5 டோர் வெர்ஷன் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதன் வருகை மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்கா ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








