அதிகம் லாபத்தை தரும்.. சரக்கை இழுத்து செல்வதில் குட்டி யானைக்கே டஃப் கொடுக்கும் இந்த குட்டி டிரக்!
வர்த்தக வாகன பயன்பாட்டாளர்களுக்கு இரட்டிப்பான லாபத்தை வழங்கும் நோக்கில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் புதிதாக சூப்ரோ புராஃபிட் டிரக் எக்சல் (Supro Profit Truck Excel) எனும் புதுமுக மினி லோடு வண்டியை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் சிறிய ரக வர்த்தக பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா (Mahindra) இருக்கின்றது. இந்த நிறுவனமே தற்போது இந்த பிரிவில் தன்னுடைய இருப்பை உறுதி செய்யும் விதமாக ஓர் சூப்பரான மினி டிரக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

அது சூப்ரோ ஃப்ராஃபிட் ட்ரக் எக்சல் (Supro Profit Truck Excel) எனும் மினி டிரக்கையே விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 6.61 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த மினி டிரக் டீசல் மற்றும் சிஎன்ஜி இரண்டு வெர்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.
அதிக லோடுகளை ஏற்றிச் செல்லும் வகையிலேயே இந்த வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது. மேலும், இந்த வாகனத்தின் வடிவமைப்பிற்காக அது சூப்ரோ பிளாட்பாரத்தையே பயன்படுத்தி இருக்கின்றது. ஆகையால், சூப்பரான பவர், அட்டகாசமான ஸ்டைல் மற்றும் மிக சிறந்த பயன்பாடு ஆகியவற்றை இந்த புதிய மினி டிரக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இதன் டீசல் வேரியண்ட் ரூ. 6 லட்சத்து 61 ஆயிரம் என்கிற ஆரம்ப விலையிலும், சிஎன்ஜி தேர்வு 6 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மினி டிரக்குகளில் ஒன்றாக சூப்ரோ இருக்கின்றது.
இதன் வரிசையிலேயே தற்போது புதிதாக சூப்ரோ புராஃபிட் டிரக் எக்செல் எனும் புதிய ரேஞ்ஜை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் சிஎன்ஜி வெர்ஷனில் ஒரு முழுமையாக சிலிண்டரை நிரப்பினால் சுமார் 500 கிமீ வரை தாராளமாக பயணிக்க முடியும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

ஆகையால், இது வர்த்தக வாகன பயன்பாட்டாளர்களுக்கு மிகப் பெரிய லாபத்தை வழங்கக் கூடியதாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. மைலேஜ் விஷயத்தில் மட்டுமல்ல, அதிக பொருட்களை செல்லும் விதமாக இந்த வாகனத்தின் பாடி கட்டுமானம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் வகையில் இதற்கு அதிக வீல்பேஸ் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
2,050 மிமீ வீல்பேஸே இதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டீசல் வெர்ஷனில் 900 கிலோ வரையிலும், சிஎன்ஜியில் 750 கிலோ வரையிலும் எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். மேலும், டீசல் வெர்ஷனில் ஒரு லிட்டருக்கு 23.6 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி 24.8 கிமீ மைலேஜையும் வழங்கும். இதன் டெக் நீளத்தை 2515 ஆக மஹிந்திரா உயர்த்தி இருக்கின்றது.

மேலும், இந்த மினி டிரக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஆன்டி-ரோல் பார் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது சிறந்த ஸ்டெபிளிட்டியை வழங்கும். சூப்ரோ புராஃபிட் டிரக் எக்செல் டீசல் மோட்டார் 19.4 kW பவரையும், 55 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டதாக இருக்கின்றது.
இதன் சிஎன்ஜி 20.01 kW பவரையும், 60 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். டீசல் வெர்ஷனில் 30 லிட்டர் வரை டீசலை நிரப்பிக் கொள்ள முடியும். சிஎன்ஜி தேர்வில் 105 லிட்டர் சிஎன்ஜியையும், 5 லிட்டர் பெட்ரோலையும் நிரப்பிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி முழுமையாக தீர்ந்துவிட்டால் பெட்ரோலைப் பயன்படுத்தி பயணிக்க வேண்டும் என்கிற அவசர காரணத்திற்காகவே இந்த மினி டிரக்கின் சிஎன்ஜி தேர்வில் 5 லிட்டரை நிரப்பிக் கொள்ளும் விதமாக ஃப்யூவல் டேங்க் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. சிஎன்ஜி, டீசல் என இரண்டு மோட்டார் ஆப்ஷனிலும் 5 ஃபார்வார்டு மற்றும் 1 ரிவர்ஸிங் மோட் வழங்கப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









