குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் புதிய பொலிரோ நியோ பிளஸ் (Bolero Neo+) கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. குடும்பத்துடன் பயணிக்க உகந்த ஓர் கார் மாடல் இதுவாகும். இதன் விலை மற்றும் சிறப்புகள் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் 9 சீட்டர் கார் மாடல் ஆகும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 11.39 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இரண்டு விதமான வேரியண்டுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். பி4 மற்றும் பி10 ஆகியவையே அவை ஆகும். அதிக ஸ்டைல், அதிக இட வசதி மற்றும் இந்தியாவின் அனைத்து விதமான சாலையையும் சமாளிக்கும் திறன் என பலதரப்பட்ட திறன்களைத் தாங்கிய கார் மாடலாகவே இதனை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
இதற்கேற்ப 9 இருக்கைகள் வசதி அதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, டிரைவருடன் சேர்த்து 9 பேர் வரை இந்த காரில் பயணிக்க முடியும். ஒரு குடும்பம் பயணிக்க போதுமான கார் மாடலே இதுவாகும். இதன் வருகையால் ஆம்னி பேருந்துகளுக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கின்றது.

இந்த காரில் ஒன்பது பேர் பயணித்தாலும் இடம் தாராளமாக இருக்கும் என மஹிந்திரா தெரிவித்து உள்ளது. குடும்பங்களுக்கான வாகனமாக மட்டுமல்ல நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் நிர்வாகங்களுக்கும் ஏற்ற தயாரிப்பாக இந்த கார் மாடல் இருக்கும் என தெரிகின்றது. மேலும், இந்த காரில் பிரீமியம் தர அம்சங்களையும் மஹிந்திரா வாரி வழங்கி இருக்கின்றது.
22.8 செமீ அளவுள்ள தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஆன்டி கிளாஸ் வசதிக் கொண்ட பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் (இதை எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும்) மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், முன் மற்றும் பின் பக்கத்தில் பவர் விண்டோ, ஆர்ம்ரெஸ்ட்டுகள், பெரிய பூட் ஸ்பேஸ் (அதிக பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும்) உள்ளிட்ட வசதிகளையும் மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் கொண்டிருக்கின்றது. இதனால்தான் குடும்பத்துடன் பயணிக்க உகந்த கார் இது என கூறப்படுகின்றது.
இதை வர்த்தக பயன்பாட்டிற்கான காராக பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதன் அதிக இட வசதி அதிக பொருட்களை ஏற்றிச் செல்ல உதவியாக இருக்கும். எஞ்சினைப் பொருத்த வரை 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு மட்டுமே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 280 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்சினுடன் சேர்த்து மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது. ஆகையால், வழக்கமான டீசல் மோட்டாரைக் கட்டிலும் இது சற்று அதிக மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் மஹிந்திரா நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இரண்டு ஏர் பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை, எஞ்சின் இம்மொபிலைசர் மற்றும் ஆட்டோமேட்டிக்காக கதவை லாக் செய்யும் வசதி உள்ளிட்டவை மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 9 இருக்கைகளுடன் இந்த கார் விற்பனைக்கு வந்திருப்பதால் அதற்கு அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, வணிக நிறுவனங்களின் ஆதரவும் இதற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








