2030இல் கார்கள் இப்படித்தான் இருக்கும்!! மஹிந்திரா பக்கா பிளானில் இருக்கு... வெயிட் பண்ணி பார்ப்போம்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் வருகிற 2030ஆம் ஆண்டிற்கு உள்ளாக இந்திய சந்தையில் 16 புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தனது எதிர்கால திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், மஹிந்திரா நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த விரிவான விபரங்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மஹிந்திரா, இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் 4வது பெரிய நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது. கடந்த காலங்களில் செடான், ஹேட்ச்பேக் ரக கார்களை விற்பனை செய்திருந்தாலும், தற்சமயம் மஹிந்திரா பிராண்டில் இருந்து எஸ்யூவி ரக கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவில் நிமிர்ந்த கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக டிமாண்ட் அதிகமாகி வருகிறது. அதனை முடிந்தவரையில் நன்கு பயன்படுத்திக் கொள்ளும் விதமாக எஸ்யூவி கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. மேலும், எதிர்காலத்திலும் நிறைய எஸ்யூவி ரக கார்களையே கொண்டுவர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
அடுத்த 6 வருடங்களில், அதாவது 2030ஆம் ஆண்டிற்குள் மார்க்கெட்டில் புதியதாக 16 கார்களை மஹிந்திரா விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. நடந்து முடிந்த 2024ஆம் நிதியாண்டின் நிதி முடிவுகள் தொடர்பான ஊடக கலந்துரையாடலின் போது இதுதொடர்பாக மஹிந்திரா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களின்படி, 2030க்குள் 9 புதிய எரிபொருள் என்ஜின் எஸ்யூவி கார்கள் மற்றும் 7 புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் என மொத்தம் 16 கார்கள் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

மஹிந்திராவின் 9 புதிய எரிபொருள் என்ஜின் எஸ்யூவி கார்களில் 3 ஃபேஸ்லிஃப்ட் கார்கள் அடங்குகின்றன. அதாவது, ஏற்கனவே விற்பனையில் உள்ள 3 மஹிந்திரா கார்களின் முன், பின்பக்கங்களின் தோற்றங்கள் அப்டேட் செய்யப்படுவதுடன், காருக்குள் கேபினும் அப்கிரேட் செய்யப்பட உள்ளது. இந்த 3 கார்களில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரும் ஒன்றாகும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் நியூ ஜென்ரேஷன் மாடலாக எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இந்த 2024 மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புக் செய்தவர்களுக்கு இன்னும் டெலிவிரி செய்யப்படாத எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் இன்னும் சில வருடங்களில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்யப்படும். எலக்ட்ரிக் கார்களை பொறுத்தவரையில், மஹிந்திராவில் இருந்து ஏற்கனவே எக்ஸ்யூவி400 கார் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார் 2025ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் அடுத்த 3 வருடத்திற்கான அதன் ஆட்டோமொபைல் வணிகத்திற்காக சுமார் ரூ.27,000ஐ முதலீடு செய்ய உள்ளது. இந்த பெரிய முதலீடு மஹிந்திராவின் எதிர்கால கார்களுக்காக மட்டுமில்லாமல், லாரி, பேருந்து உள்ளிட்ட கமர்ஷியல் வாகனத்திற்காகவும் ஆகும்.
மேலும், இந்த முதலீட்டின் மூலம் அடுத்த 3 வருடங்களில் புதிய கார்களை அறிமுகம் செய்வதுடன், தற்போது விற்பனையில் இருக்கும் கார்களின் நெட்வொர்க்கையும் விரிவுப்படுத்துவதில் மஹிந்திரா தீவிரமாக உள்ளது. குறிப்பாக, மாறிவரும் டிரெண்ட்டிற்கு ஏற்ப எலக்ட்ரிக் வாகனங்களில் கூடுதல் கவனம் செலுத்த மஹிந்திரா முடிவெடுத்துள்ளது. இதற்காக ரூ.12,000 கோடியை மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட் நிறுவனத்தில் மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் முதலீடு செய்யவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு அதன் எதிர்கால கார்களை ஏற்கனவே வெளிக்காட்டி இருந்தது. அதாவது, புதிய மஹிந்திரா கார்களின் தோற்றத்தை வெளியிடாமல், கார்கள் இப்படித்தான் இருக்கும் என ஓர் அணுகூலமாக மஹிந்திரா தெரிவித்து இருந்தது. அதன்படி, எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார்கள் வெளிவந்தன. தற்போது, 16 புதிய கார்களை 2030க்குள் அறிமுகம் செய்யவுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளதால், அறிவித்தப்படி புதிய கார்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மஹிந்திரா அறிமுகம் செய்யும்.


Click it and Unblock the Notifications









