மஹிந்திராவில் நிறைய பேர் கார் வாங்க மாட்டாங்கனு யாருங்க சொன்னா! டாடாவுக்கு இப்போதே பயம்வர ஆரம்பிச்சு இருக்கும்
மஹிந்திரா ஆட்டோ (Mahindra Auto) நிறுவனத்தில் இருந்து கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. மேலும், மொத்தமாக கடந்த ஒரு வருடத்திலும் மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா, இந்தியாவின் மிக பெரிய முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. டிராக்டர்களை உற்பத்தி செய்வதில் இருந்து துவங்கிய மஹிந்திராவின் பயணத்தில் அதன்பின்னர் லாரிகள், ஆட்டோக்கள் என பல்வேறு கமர்ஷியல் வாகனங்கள் இணைந்துக் கொண்டன. இருப்பினும், கார்கள் உற்பத்தியில் மஹிந்திரா இறங்கியது அந்த நிறுவனத்தின் மிக பெரிய மூவ் என்றுதான் சொல்ல வேண்டும்.

நீண்ட வருடங்களாக கார்கள் உற்பத்தியில் ஈடுப்பட்டுவரும் மஹிந்திரா இன்றைய கால மாடர்ன் இந்திய கார்கள் சந்தையில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் 4வது பெரிய கார் நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது.
2023 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து துவங்கிய 2023-24ஆம் நிதியாண்டு இந்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இந்த ஒரு வருடத்தில் அடைந்த இலாப, நஷ்ட கணக்குகளை மற்ற தனியார் நிறுவனங்களை போல் மஹிந்திராவும் கணக்கிட்டு பார்த்துள்ளது. இதன்படி மஹிந்திரா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2023 ஏப்ரலில் இருந்து கடந்த ஒரு வருடத்தில் 4 லட்சத்து 59,877 பயணிகள் வாகனங்கள் மஹிந்திராவில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆட்களை ஏற்றி செல்ல பயன்படுபவையே பயணிகள் வாகனங்கள் ஆகும். இதில், மஹிந்திராவின் எஸ்யூவி, எம்பிவி கார்கள் மற்றும் வேன்களின் விற்பனை எண்ணிக்கைகள் அடங்குகின்றன. மஹிந்திராவில் இருந்து விற்பனை செய்யப்படும் வேன்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. மொத்தமாகவே ஒரு வருடத்தில் வெறும் 10 வேன்கள் மட்டுமே மஹிந்திராவில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கடந்த ஒரு வருடத்தில் 4 லட்சத்து 59,877 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ள மஹிந்திரா நிறுவனம், இதற்கு முந்தைய வருடத்தில் வெறும் 3 லட்சத்து 59,253 பயணிகள் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், கடந்த வருடத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வாகனங்களை மஹிந்திரா கூடுதலாக விற்பனை செய்துள்ளது.

அதாவது, கடந்த நிதியாண்டில் ஒவ்வொரு மாதத்திலும் வழக்கத்தை காட்டிலும் சராசரியாக 10,000 கார்களை மஹிந்திரா அதிகமாக விற்பனை செய்துள்ளது. கடந்த 2024 மார்ச் மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 40,631 ஆகும். ஆனால், 2023ஆம் ஆண்டின் இதே மார்ச் மாதத்தில் 35,976 கார்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில், மஹிந்திரா கார்கள் விற்பனை ஆனது 13% அதிகரித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கை 1573 ஆகும். ஆனால், 2023 மார்ச் மாதத்தில் 542 கார்கள் அதிகமாக, 2115 கார்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருந்தது. ஒட்டுமொத்தமாக, கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்து 24,663 கார்களை வெளிநாடுகளுக்கு மஹிந்திரா ஏற்றுமதி செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த மார்ச் மாதத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாகவே கடந்த ஒரு வருடத்தில் மஹிந்திரா கார்கள் ஏற்றுமதி ஆனது கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும், இதற்கெல்லாம் மஹிந்திரா கவலைப்படாது. ஏனெனில், மஹிந்திராவின் உள்நாட்டு விற்பனை லட்சங்களில் உயர்ந்து கொண்டிருக்கிறது. வருங்காலங்களில் இந்தியாவின் டாப்-3 கார் நிறுவனங்களுள் ஒன்றாக மஹிந்திரா இடம்பிடித்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications









