கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸுக்கு பயத்தை காட்டும் மஹிந்திரா!! மக்கள் மேட்-இன்-இந்தியா காரை தேடி வாங்குறாங்க
மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் 4வது பெரிய நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது. மற்ற நிறுவனங்களை போன்று, மஹிந்திராவின் கார்கள் விற்பனையும் ஒவ்வொரு மாதமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த வகையில், நடந்து முடிந்த 2024 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள மஹிந்திரா கார்களின் எண்ணிக்கையையும், கடந்த ஆண்டு மே மாதத்தை விட அது எவ்வளவு அதிகம் என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஒரு காலத்தில் மஹிந்திரா என்றாலே டிராக்டர்களை விற்பனை செய்யும் நிறுவனம் என மக்களால் பார்க்கப்பட்டுவந்த நிலையில், தற்போது இந்தியாவின் முக்கியமான கார் நிறுவனங்களுள் ஒன்றாக மஹிந்திரா வளர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் மொத்தம் 43,218 கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கடந்த 2023 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் இது 31% அதிகமாகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களையும் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக 44,283 கார்களை மஹிந்திரா கடந்த மே மாதத்தில் விற்பனை செய்துள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் 1,065 கார்களை வெளிநாடுகளுக்கு மஹிந்திரா ஏற்றுமதி செய்துள்ளது.
மஹிந்திராவின் கார்கள், லாரிகள், பேருந்துகள் என எல்லாவற்றையும் சேர்த்தால், கடந்த மே மாதத்தில் மொத்தம் 71,682 வாகனங்கள் இந்த நிறுவனத்தில் இருந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 17% அதிகமாகும். மஹிந்திராவில் இருந்து கடந்த மே மாதத்தில் 19,826 கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கை அடங்காது.

மஹிந்திராவில் இருந்து 3-சக்கர வாகனங்களும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த மே மாதத்தில் மொத்தம் 5,967 மூன்று-சக்கர வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. இதில் எலக்ட்ரிக் 3-வீலர்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. அதுவே, 2023 மே மாதத்தில் 5,851 மூன்று-சக்கர வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், இந்த மே மாதத்தில் மஹிந்திரா 3-வீலர்களின் விற்பனை 2% அதிகரித்துள்ளது.
2024 ஏப்ரல் மாதத்தையும் சேர்த்தால், கடந்த 2 மாதங்களில் மொத்தம் 84,226 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் 67,584 கார்களை மட்டும் மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், இந்த 2 மாதங்களில் மஹிந்திரா கார்களின் விற்பனை 25% அதிகரித்துள்ளது.

2024 மே மாத விற்பனை குறித்து மஹிந்திரா & மஹிந்திரா ஆட்டோமொபைல் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா கூறுகையில், "மே 15ஆம் தேதியன்று நாங்கள் முன்பதிவுகளை துவங்கிய போது, எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கு அமோகமான வரவேற்பை பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சிடைந்தோம். முன்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணிநேரத்திலேயே 50,000 மதிப்பெண்ணை எட்டினோம். மே 26 முதல் டெலிவிரியை ஆரம்பித்துள்ளோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா ஆரம்ப காலக்கட்டத்தில் செடான் & ஹேட்ச்பேக் ரக கார்களை விற்பனை செய்திருந்தாலும், தற்போது முற்றிலுமாக எஸ்யூவி கார்களுக்கு மாறிவிட்டது. இதன் காரணமாகவே, மஹிந்திரா கார்கள் விற்பனை எண்ணிக்கை சமீப காலமாக வெகுவாக அதிகரித்துள்ளது. எலக்ட்ரிக் கார்கள் விற்பனையிலும் மஹிந்திரா ஈடுப்பட துவங்கியுள்ளதால், இந்த விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









