5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் தார் (Thar) காரை இப்போதைய நிலவரப்படி மூன்று கதவுகள் கொண்ட வெர்ஷனில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இதன் 5 கதவுகள் கொண்ட வெர்ஷனும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி வெளியாகி இருக்கும் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் தார்-ம் ஒன்றாகும். 3 கதவுகள் அமைப்பைக் கொண்ட தார் காரே இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவே இந்த கார் மாடலில் 5 கதவுகள் அமைப்பு வழங்கப்படாதது பெரும் குறையாகவே காணப்பட்டது. இந்த நிலையிலேயே இந்த குறையை விரைவில் மஹிந்திரா நிறுவனம் போக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, மஹிந்திரா தார் 5 டோர்கள் கொண்ட தேர்வு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது. ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்றே இந்த காரை இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த வெர்ஷன் இந்தியர்களின் நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பாகும்.
மஹிந்திரா தார் 3 கதவுகள் கொண்ட வெர்ஷன் விற்பனைக்கு வந்தபோதே, ஐந்து கதவுகள் கொண்ட வெர்ஷனின் மீதான எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் அதிகரித்துக் காணப்பட்டது. ஆனால், இதன் வருகையில் இழுபறியே நீடித்து வந்தது. இந்த நிலையிலேயே 5 டோர்கள் கொண்ட தார் ஆகஸ்டு 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், மஹிந்திரா தார் கார் காதலர்கள் மகிழ்ச்சியின் உச்சிக்கே தற்போது சென்றிருக்கின்றனர். இந்தியாவில் மிக சிறப்பான விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் தார்-ம் ஒன்றாகும். இந்த கார் மாடலுக்கு 8 வாரம் தொடங்கி 70 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேரியண்ட் வாரியாக இந்த காத்திருப்பு காலம் மாறுபட்டுக் காணப்படுகின்றது. இதுமாதிரியான வரவேற்பையே இந்தியாவில் தார் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே கூடுதல் டிமாண்டை இந்த கார் மாடலின் பக்கம் உருவாக்கும் விதமாக 5 டோர் வெர்ஷனையும் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது மஹிந்திரா.
5 கதவுகள் கொண்ட தார், 3 கதவுகள் கொண்ட தார் கார் மாடலைக் காட்டிலும் சற்று நீளமான வீல்பேஸ் (Wheelbase)-ஐக் கொண்டிருக்கும். பின்னிருக்கையாளர்கள் சுலபமாக ஏறி-இறங்க ஏதுவாக இந்த அம்சம் இருக்கும். மஹிந்திரா நிறுவனம் தார் 5 கதவுகள் கொண்ட வெர்ஷனின் சாலை சோதனையோட்ட பணிகளை ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டது.
நீண்ட காலமாக அது சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, இந்த காரில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது கணிசமான அளவில் தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, வட்ட வடிவ எல்இடி லைட்டுகள், இத்துடன் எல்இடி பகல்நேர லைட்டுகள் ஆகியவை இதில் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
ஆனால், இதனை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. சோதனையோட்டத்தின்போது ஸ்பை செய்யப்பட்ட தார் 5 டோர் காரின் படங்களின் வாயிலாகவே அது தெரிய வந்திருக்கின்றது. தார் 3 கதவுகள் கொண்ட வெர்ஷனில் வழங்கப்படுவதைப் போலவே ஹார்டு டாப் மற்றும் சாஃப்ட் டாப் ஆகிய வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர, வீல், எஞ்சின் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிலும் இரண்டு வெர்ஷன்களும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இதுதவிர, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகியவும் புதிய 5 டோர்கள் கொண்ட தார் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் அதன் புதிய கார் மாடல்களை ஆகஸ்டு 15 ஆம் தேதி அறிமுகம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்று தன்னுடைய சில கார் மாடல்களை அந்நாளில் அறிமுகம் செய்திருக்கின்றது. 3 கதவுகள் கொண்ட தார் மற்றும் எக்ஸ்யூவி700 ஆகிய இரண்டு கார் மாடல்களும் சுதந்திர தினத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
அதேவேளையில், இந்த நாளில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரண்டு கார் மாடல்களுக்கும் இந்தியாவில் மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனாலேயே என்னமோ இந்த நாளை குறி வைத்து தன்னுடைய அடுத்த புதுமுக தயாரிப்பான 5 கதவுகளைக் கொண்ட தார் கார் மாடலையும் ஆகஸ்டு 15லேயே அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









