மஹிந்திரா தன்னோட மொத்த வித்தையையும் காட்ட போகுது... புதிய வாகனத்தில் இல்லாத வசதிகளே கிடையாது!!
மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) வாகனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மார்க்கெட்டில் விற்பனைக்குவர உள்ளது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் 3-கதவு தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக உருவாக்கப்பட்டு இருக்கும் தார் ராக்ஸ் வாகனத்தை பற்றிய விபரங்கள் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. தற்சமயம் விற்பனையில் இருக்கும் 3-கதவு தாருக்கும், புதிய 5-கதவு தாருக்கும் இடையே தோற்றத்தில் பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்காது என்றாலும், தொழிற்நுட்ப அம்சங்களில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். வித்தியாசங்கள் என சொல்வதை காட்டிலும், அப்டேட்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
ஏனெனில் மற்ற கார் நிறுவனங்களை போன்று மஹிந்திராவும் தொழிற்நுட்ப வசதிகளை புதியது, புதியதாக கண்டுப்பிடித்து வருகிறது. அந்த வகையில், மாடர்ன் மஹிந்திரா காரான எக்ஸ்யூவி400 -இல் வழங்கப்படும் நிறைய அம்சங்கள் புதிய தார் ராக்ஸ் வாகனத்திலும் வழங்கப்பட உள்ளன. இதற்கிடையில், மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தின் மிட்-வேரியண்ட்டின் உட்பக்க கேபின் எவ்வாறு இருக்கும் என்பது சமீபத்தில் படங்களுடன் கசிந்துள்ளது.

10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் (10.25-inch Touchscreen): தற்சமயம் விற்பனையில் இருக்கும் 3-கதவு தார் வாகனத்தை காட்டிலும் பெரிய அளவிலான டச் ஸ்க்ரீனை டேஸ்போர்டில் புதிய 5-டோர் தார் பெற்றுள்ளது. எங்களுக்கு தெரிந்தவரையில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரில் வழங்கப்படும் 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் ஆனது ராக்ஸ் வாகனத்தில் அப்டேட் செய்யப்பட்டு வழங்கப்படலாம். இந்த வகையில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே கனெக்ட்டிவிட்டி வசதி உடன் டச் ஸ்க்ரீன் ராக்ஸ் வாகனத்தில் கொடுக்கப்படலாம்.

ஃபுல்-டிஜிட்டலில் டிரைவருக்கான டிஸ்பிளே (Fully Digital Driver's Display): டச் ஸ்க்ரீன் மட்டுமின்றி, சமீபத்தில் நமக்கு கிடைக்க பெற்ற ராக்ஸ் வாகனத்தின் ஸ்பை படத்தில் ஓட்டுனருக்கான டிஜிட்டல் டிஸ்பிளேவையும் காண முடிந்தது. ஆதலால், எக்ஸ்யூவி400 காரில் டிரைவர் விபரங்களை பெறுவதற்காக வவழங்கப்படும் அதே 10.25-இன்ச் திரையை ராக்ஸ் வாகனத்திலும் எதிர்பார்க்கலாம். இது, எந்த திசையில் வாகனம் செல்ல வேண்டும் என்கிற திசையை காட்டுவது மட்டுமின்றி, டயர்களில் உள்ள காற்றின் அழுத்தத்தையும் அறிய உதவுகிறது.

ட்யூயல்-ஸோன் ஏசி (Dual-Zone AC): இந்த ஏசி கண்ட்ரோல் வசதி ஆனது இன்றைய மாடர்ன் கார்களில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதன் மூலமாக, கேபினுக்குள் முன் & பின் இருக்கை பயணிகளுக்கு வெவ்வேறான ஏசி செட்டிங்கை நிர்ணயித்துக் கொள்ள முடியும். இதற்காக பின் இருக்கை பயணிக்களுக்கென தனியாக ஏசி காற்று துளைகள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரில் வழங்கப்படுகிற இந்த வசதியை ராக்ஸ் வாகனத்திலும் எதிர்பார்க்கலாம்.

டிஸ்க் பிரேக்குகள் (Disc Brakes): பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் உடன் 5-டோர் தார் வாகனம் ஏற்கனவே நமது கண்ணில் சிக்கியுள்ளது. ஆதலால், இந்த புதிய தார் வாகனத்தில் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளை எதிர்பார்க்கலாம். எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரில் 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.

வயர்லெஸ் போன் சார்ஜர் (Wireless Phone Charger): இன்றைய கால கார்களின் உள்ளே வயர்களை காண்பது வெகுவாக குறைந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், மொபைல் போனை சார்ஜ் செய்வதற்கு கூட கேபிள் தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் போனை வைத்தாலே போதும், தானாக சார்ஜ் ஆகிவிடும். எக்ஸ்யூவி400 காரில் ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் இந்த வசதியை தார் ராக்ஸ் வாகனத்திலும் மஹிந்திரா அறிமுகம் செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் ஆனது சமீப காலத்தில் மஹிந்திராவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் கார்களுள் ஒன்றாகும். ஆதலால், அதில் வழங்கும் தொழிற்நுட்ப வசதிகளை புதிய தார் ராக்ஸ் வாகனத்தில் மஹிந்திரா வழங்குவதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. அதுமட்டுமில்லாமல், இவ்வாறு ஒரு காரில் வழங்கும் அம்சங்களை அப்படியே இன்னொரு காரில் வழங்குவதன் மூலமாக மஹிந்திரா நிறுவனத்திற்கும் உற்பத்தி செலவு குறையும்.


Click it and Unblock the Notifications









