5 டோர் தார் ராக்ஸ் காரின் உள்பக்கமா இது!.. ஆடி, பென்ஸ் கார்களுக்கே டஃப் கொடுக்கும் போலையே!
இந்திய கார் ஆர்வலர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக ஐந்து கதவுகள் கொண்ட தார் (Thar) இருக்கின்றது. இந்த காரை விரைவில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆகஸ்டு 15 ஆம் தேதியையே இந்த காரின் வெளியீட்டிற்காக மஹிந்திரா நிறுவனம் தேர்வு செய்திருக்கின்றது. இந்தியாவில் 3 கதவுகள் கொண்ட தார் காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான காரில் 5 கதவுகள் வழங்கப்படாதது மிக பெரிய குறையாகவே காணப்படுகின்றது.
இந்த குறையை போக்கும் விதமாகவே விரைவில் ஐந்து கதவுகள் கொண்ட தார் காரை, தார் ராக்ஸ் (Thar Roxx) எனும் பெயரில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, மஹிந்திரா. இந்த தகவலை சமீபத்திலேயே டீசர் படத்தின் வாயிலாக நிறுவனம் உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அதன் டீசர் படங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. இந்தியர்களைக் கவரும் விதமாக டீசர் படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் உள்பக்கத்தை விவரிக்கக் கூடிய ஸ்பை படங்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன. சில தினங்களுக்கு முன்னரே இந்த காரின் வெளிப்பக்க லுக்கை விவரிக்க கூடிய படங்கள் வெளியாகின. இந்த நிலையிலேயே இந்த புதிய படங்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த படத்தின் வாயிலாக புதிய தார் ராக்ஸ் காரின் உள்பக்கம் எப்படி இருக்கும்? என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் அதனுள் இடம் பெற இருக்கின்றன? என்பது தெரிய வந்திருக்கின்றது. மிக முக்கியமாக இந்த காரின் உட்பக்கம் எக்ஸ்யூவி 700 (XUV700)-ஐ பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்பதை இந்த படங்கள் உறுதி செய்திருக்கின்றன.

வெள்ளை நிற இருக்கைகளே இதற்கு சான்றாக உள்ளது. இத்தகைய இருக்கைகளே எக்ஸ்யூவி700 காரிலும் இடம் பெற்றிருக்கின்றன. இதுதவிர, முன் பக்கத்தில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகளும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த காரில் வெள்ளை நிற இருக்கைகள் வழங்கப்பட்டு இருப்பது அதை பராமரிப்பதில் மிகப் பெரிய சவாலானதாக இருக்கலாம்.
இது ஓர் ஆஃப்-ரோடு எஸ்யூவி ரக காராகும். இந்த மாதிரியான காரை நம்ம ஆட்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதை வைத்தே இந்த காரின் இருக்கையை பராமரிப்பது சற்று சவாலானதாக இருக்கும் யூகிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், தார் ராக்ஸ்-ம், 3 கதவு தார்-ஐ போலவே லைஃப்-ஸ்டைல் மற்றும் ஆஃப்-ரோடு பயன்பாட்டு வாகனமாக இருக்கும் என்பதும் இந்த படத்தின் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது.

இந்த படங்கள் வாயிலாக தார் ராக்ஸ் காரின் கேபினில் பல்வேறு நவீன அம்சங்கள் இடம் பெற இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது. அந்தவகையில், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐஆர்விஎம், ஆட்டோமேட்டிக் காலநிலை கட்டுப்பாடு கருவி, புதிய ஸ்டீயரிங் வீல், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவையும் தார் ராக்ஸ் காரில் இடம் பெற இருப்பது உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியாகிய இந்த காரின் டீசர் படங்களும் இந்த அம்சங்கள் இடம் பெற இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, உயர்நிலை தேர்வில் பனோரமிக் சன்ரூஃப்-ம், ஆரம்ப நிலை பதிப்புகளில் சிங்கிள்-பேன் சன்ரூஃப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு தார் ராக்ஸ் காரில் அனைத்து பயணிகளுக்கும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட், ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றை வழங்க இருப்பதும் தற்போது வெளியாகி இருக்கும் படங்கள் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது.
தொடர்ந்து, இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் போன்ற ஒரு சில அம்சங்களில் 3 டோர் தார் மாடலை தழுவியதாகவே, 5 டோர் தார் ராக்ஸ் இருக்கப் போகின்றது என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவலும் இந்த படங்கள் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், குறிப்பிட்ட சில விஷயங்களில் தார் ராக்ஸ் 5 டோர், 3 டோர் தார் ஃபீலை வழங்கும் என்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, எஞ்சின் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும். ஆனால், உருவம் மற்றும் கவர்ச்சியில் பலமடங்கு மேம்பட்டதாகவே 5 டோர் தார் ராக்ஸ் இருக்கும். 1.5 லிட்டர் டீசல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே 5 கதவுகள் கொண்ட தார் ராக்ஸ் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தார் ராக்ஸ்-க்கு இந்தியாவில் இப்போது மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆகையால், விற்பனையில் இந்த கார் மிக சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, 3 டோர் தார் காரை போலவே விற்பனையில் இது ஜொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப நவீன அம்சங்கள் மற்றும் முரட்டுத்தனமான தோற்றம் ஆகியவற்றின் கலவையாக இந்த கார் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









