குடும்பமாக போவதற்கு ஏற்ற புது மஹிந்திரா வாகனம்... இது எல்லாம் நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!!
மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் கார் அறிமுகங்களுள் ஒன்று. இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக மஹிந்திரா தார் விளங்குகிறது. அதன் 5-டோர் வெர்சனாக தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தார் ராக்ஸ் வாகனத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய மஹிந்திரா தயாராகி வருகிறது. இதற்கிடையில், தார் ராக்ஸ் வாகனத்தை பற்றிய முக்கியமான சில விபரங்கள் டீசர்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு முக்கியமான விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு சமயத்தில் மாருதி சுஸுகி ஜிப்ஸி இந்தியா முழுவதும் பரவலாக அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. அதற்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் களமிறக்கியதே தார் ஆகும். ஒரு கட்டத்திற்கு மேல் இவை இரண்டின் விற்பனையும் நிறுத்திக் கொள்ளப்பட்டது. 2020ஆம் ஆண்டில் தார் வாகனத்தை மீண்டும் மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. இதற்கு போட்டியாக மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டில் ஜிம்னியை அறிமுகப்படுத்தியது.

இருப்பினும், மஹிந்திரா தார் அளவிற்கு ஜிம்னியை மக்கள் கண்டுக்கொள்வது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் மஹிந்திரா தார் விற்பனையாகிக் கொண்டிருக்க, ஜிம்னியின் விற்பனை நூறுகளில் குறைந்துக் கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தார் ராக்ஸ் 5-டோர் வாகனத்தை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டுவருகிறது.
மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனம் 2022ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட கடந்த 2 வருடங்களாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நீண்ட கால எதிர்பார்ப்புக்கு ஒரு முடிவாக, வருகிற ஆகஸ்ட் 15இல் தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில், மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தில் பனோராமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) வழங்கப்பட உள்ளது ஹைலைட்டாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, நன்கு பெரிய அளவில் கண்ணாடிகளை கொண்ட சன்ரூஃப் வாகனத்தின் மேற்கூரையில் வழங்கப்பட உள்ளது. இதன் மூலமாக, வாகனத்தினுள் இருந்தவாறு வாகனத்திற்கு மேலே நடப்பவற்றை காண முடியும். வாகனம் ஓய்வு நிலையில் இருக்கும் நேரத்தில், பனோராமிக் சன்ரூஃப் வழியாக வெளியே எட்டி பார்க்கலாம். இவ்வாறான ஆஃப்-ரோடு வாகனங்களில் பனோராமிக் சன்ரூஃப் போன்ற மாடர்ன் சன்ரூஃப் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
அதாவது, மஹிந்திரா தாருக்கு விற்பனையில் போட்டியாக உள்ள மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் குர்கா வாகனங்களில் சன்ரூஃப் வழங்கப்படுவதில்லை. ஆனால் எங்களுக்கு தெரிந்தவரையில், புதிய தார் ராக்ஸ் வாகனத்தின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் மட்டுமே பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். மிட்-வேரியண்ட்களில் சிங்கிள்-பேன் சன்ரூஃப் வழங்கப்படலாம்.
மஹிந்திரா தார் லேடார் ஃப்ரேமில் உருவாக்கப்படுகிறது. இத்தகைய ஃப்ரேமில் உருவாக்கப்படும் வாகனத்தில் பனோராமிக் சன்ரூஃப்-ஐ வழங்குவது சற்று கடினமான விஷயமாகும். இதற்கேற்ப வாகனத்தில் சில பல மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்பதால், பனோராமிக் சன்ரூஃப்-ஐ பெறும் தார் ராக்ஸ் வேரியண்ட்களின் விலைகள் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.
மற்ற தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் மற்றும் எக்ஸ்யூவி700 கார்களில் வழங்கப்படும் நிறைய வசதிகளை புதிய தார் ராக்ஸ் வாகனத்தில் எதிர்பார்க்கலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், டேஸ்போர்டில் பெரிய அளவில் ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, ஃபுல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பனோராமிக் சன்ரூஃப், இன்றைய கால வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களுள் ஒன்றாக மாறிவிட்டது. சிறிய அளவிலான எஸ்யூவி கார்களில் கூட பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. ஆதலால், தார் ராக்ஸ் போன்ற அளவில் பெரியதான ஆஃப்-ரோடு வாகனத்தில் இத்தகைய அம்சத்தை மஹிந்திரா வழங்கவுள்ளதில் பெரியதாக எந்த ஆச்சிரியமும் இல்லை. புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை இதற்காகவே நிறைய பேர் வாங்குவார்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.


Click it and Unblock the Notifications








