ஓட்டி பார்த்துவிட்டு அப்புறம் புக் பண்ணுங்க... இதுக்காக தானே இத்தனை நாள் வெயிட் பண்ணோம்!!
மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), இந்தியாவில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம். ஏற்கனவே விற்பனையில் உள்ள மஹிந்திரா தார் வாகனத்தின் 5-டோர் வெர்சனாக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனத்திற்கான முன்பதிவுகளும், டெலிவிரிகளும் அடுத்த அக்டோபர் மாதத்தில் இருந்து துவங்கப்பட உள்ளன. இந்த நிலையில், இந்த வாகனத்தை கஸ்டமர்களுக்கு டெஸ்ட் டிரைவ் கொடுக்கும் பணிகள் நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 14) முதல் துவங்கப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா தார் மூலமாக மஹிந்திரா நிறுவனம் கடந்த சில வருடங்களில் நல்ல வருவாயை பெற்றுள்ளது. ஏனெனில், விற்பனையில் போட்டியாக மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் குர்கா வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், மஹிந்திரா தாரின் விற்பனையை அந்த வாகனங்களால் நெருங்கக் கூட முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இருப்பினும் மஹிந்திரா தாரில் ஒரேயொரு குறையாக பார்க்கப்பட்டது, வாகனத்தில் 3 கதவுகள் மட்டுமே இருப்பதாகும். இதனை சரிச்செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டதே தார் ராக்ஸ் ஆகும். இது 5 கதவுகளை கொண்ட தார் வாகனம் ஆகும். தோற்றத்திலும், தொழிற்நுட்ப வசதிகளிலும் தார் வாகனத்தை விட மேம்பட்டதாக தார் ராக்ஸ் விளங்குகிறது. இந்த வாகனத்திற்கான புக்கிங்குகள் அக்டோபர் 3ஆம் தேதியில் துவங்கப்பட உள்ளதாக அறிமுகத்தின்போதே அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற அக்டோபர் 12ஆம் தேதியில், துஷாரா பண்டிகையை முன்னிட்டு துவங்கப்பட உள்ளன. இதற்கிடையில், தார் ராக்ஸின் டெஸ்ட் டிரைவ்கள் இன்று முதல் மஹிந்திரா ஷோரூம்களில் துவங்கப்பட உள்ளன. ஆதலால், விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ஷோரூமுக்கு சென்று தார் ராக்ஸை ஓட்டிப் பார்த்து, அதன்பின் அக்.3ஆம் தேதியில் இருந்து புக் செய்யலாம்.

தார் ராக்ஸ் வாகனங்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டுவரும் பணிகள் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. ஷோரூமில் எடுக்கப்பட்ட தார் ராக்ஸ் வாகனத்தின் படங்களை கூட நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இதனால், தார் ராக்ஸ் வாகனத்தை கஸ்டமர்களுக்கு டெஸ்ட் டிரைவ் கொடுக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்த்தோம். எதிர்பார்த்ததை போன்று தற்போது டெஸ்ட் டிரைவ்ஸ் துவங்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா தார் ராக்ஸ் ஆனது எம்.எக்ஸ்1, எம்.எக்ஸ்3, எம்.எக்ஸ்5, ஏ.எக்ஸ்3எல், ஏ.எக்ஸ்5எல் மற்றும் ஏ.எக்ஸ்7எல் என மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. டாங்கோ சிவப்பு, எவரெஸ்ட் வெள்ளை, நெபுலா நீலம், பேட்டில்ஷிப் கிரே, பர்ண்ட் செயன்னா, டீப் ஃபாரஸ்ட் மற்றும் ஸ்டீல்த் பிளாக் என மொத்தம் 7 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் தார் ராக்ஸ் விற்பனை செய்யப்பட உள்ளது.

தார் ராக்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.20.49 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தொழிற்நுட்ப அம்சங்களாக, 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பனோராமிக் சன்ரூஃப், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் 9-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மஹிந்திரா தார் ராக்ஸ் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த இரு என்ஜின்களிலும் இயக்க ஆற்றல் ஆனது வாகனத்தின் பின் சக்கரங்களுக்கு செல்லும். என்ஜின் ஆற்றல் அனைத்து சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்ல வேண்டுமென்றால், டீசல் என்ஜின் உடன் இந்த வாகனத்தை வாங்க வேண்டும். 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் தார் ராக்ஸை வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: படங்களிலும், வீடியோக்களிலும் பார்த்துக் கொண்டிருக்கும் மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனம் அருகாமையில் பார்த்தற்கும், ஓட்டுவதற்கும் எவ்வாறு உள்ளது என்பதை அறிய நேராக ஷோரூமுக்கு சென்று இந்த மாடர்ன் மஹிந்திரா வாகனத்தை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிடுங்கள். நமது டிரைவ்ஸ்பார்க் குழு ஏற்கனவே தார் ராக்ஸ் வாகனத்தை ஓட்டி பார்த்து தங்களது விமர்சனங்களை வழங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications









