மாருதியின் மார்க்கெட்டை மொத்தமா காலி பண்ண போகும் மஹிந்திரா... 3 கதவுகள் உடன் தார் வாகனத்தை வாங்கலாமா வேண்டாமா?
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் புத்தம் புதிய தார் ராக்ஸ் (Thar ROXX) வாகனத்தை கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் அறிமுகம் செய்தது. இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 3-கதவு தார் வாகனத்தின் 5-டோர் வெர்சன் ஆகும். தோற்றத்தில் மட்டுமின்றி, இவை இரண்டிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றியும், புதிய தார் ராக்ஸ் மற்றும் 3-கதவு தாருக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
தோற்றம்: மஹிந்திரா தாருக்கு என்றே ஒரு உடல்மொழி உள்ளது. அதனை புதிய தார் ராக்ஸ் வாகனமும் கொண்டுள்ளது. ஆனால் அதேநேரம், புதுமையான டிசைனிலான கிரில் போன்ற சில பிரத்யேகமான டிசைன் அம்சங்கள் தார் ராக்ஸில் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய தார் வாகனத்தின் விலை குறைவான வேரியண்ட்களில் கூட C-வடிவிலான எல்இடி டிஆர்எல்-கள், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்களை பெறலாம்.

மேலும், தார் ராக்ஸ் வாகனத்தில் புதிய டிசைனில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் மற்றும் நீளமான & அகலமான படிக்கட்டு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக கதவுகள் வழங்கப்பட்டுள்ளதால், 3வது ஜன்னல் கண்ணாடி சிறிய அளவில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 3-கதவு தாரில் 2 ஜன்னல் கண்ணாடிகள் மட்டுமே ஒரு பக்கத்தில் வழங்கப்படுகின்றன. அதேபோல், 3-கதவு தாரை ஐந்தில் ஏதேனும் ஒரு நிறத்தில் வாங்கலாம் என இருக்கும் நிலையில், புதிய தார் ராக்ஸ் வாகனத்திற்கு 7 விதமான பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
அளவுகள்: 3-கதவு தார் வாகனத்தை காட்டிலும் புதிய தார் ராக்ஸ் 443மிமீ கூடுதல் நீளமானது. அதுமட்டுமின்றி, தார் ராக்ஸ் அகலமானது, உயரமானதும் கூட. இதன் காரணமாக, முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் தார் ராக்ஸில் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இயக்கும்போது தார் ராக்ஸ் சாலையில் இன்னும் பிரம்மாண்டமானதாகவும், கம்பீரமானதாகவும் தெரிகிறது.

தொழிற்நுட்ப வசதிகள்: 3-கதவு தாரில் வழங்கப்படும் நிறைய வசதிகள் தார் ராக்ஸ் வாகனத்திலும் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், பனோராமிக் சன்ரூஃப், பவர்டு & வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பிரீமியம் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை தார் ராக்ஸ் வாகனம் கூடுதலாக பெற்றுள்ளது.
பயணிகளின் பாதுகாப்புக்கு தார் ராக்ஸ் வாகனத்தின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகளை பெறலாம். மேலும், எதிர்பார்த்ததை போன்று லெவல்-2 அடாஸ் வசதிகள் ராக்ஸில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், 3-பாயிண்ட் சீட் பெல்ட்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா சிஸ்டம் உள்பட 35க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

என்ஜின்: புதிய தார் ராக்ஸ் வாகனத்தில் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் என்ஹாவ்க் டீசல் என்ஜின் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 3-கதவு தார் வாகனத்தில் 1.5 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
விலை: 3-கதவு மஹிந்திரா தார் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.35 லட்சத்தில் இருந்து ரூ.17.60 லட்சம் வரையில் உள்ளன. அதேநேரம், புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.20.49 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அட்வென்ச்சர் பயணங்களுக்காக எஸ்யூவி வாகனங்களை வாங்குபவர்களில் பெரும்பாலானவர்களின் சாய்ஸ் மஹிந்திரா தார் வாகனமாக உள்ளது. இருப்பினும், தார் வாகனத்தில் 3 கதவுகள் மட்டுமே இருப்பது சற்று குறையாக பார்க்கப்பட்டு வந்தது. அந்த குறையை சரி செய்யும் விதமாக 5-கதவு தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்றத்தில் மட்டுமல்லாமல், தொழிற்நுட்ப அம்சங்களிலும் இந்த புதிய வாகனம் மேம்பட்டதாக உள்ளது.


Click it and Unblock the Notifications









