வெறும் 1 மணி நேரத்துல இத்தன லட்சம் பேரா! எதோ சாதாரண சினிமா டிக்கெட் மாதிரி ஆளாளுக்கு புக் பண்ணீட்டு இருக்காங்க
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, மஹிந்திரா தார் ராக்ஸ் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணி இன்று (அக்டோபர் 3) தொடங்கப்பட்டது. சரியாக காலை 11 மணி அளவில் முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் தொடங்கியது. அதற்கு பிறகு நடந்த சம்பவம், உண்மையிலேயே யாரும் எதிர்பார்க்காத ஒன்று. மஹிந்திரா நிறுவனமே இதை எதிர்பார்த்திருக்குமா? என்பது சந்தேகம்தான்.
ஆம், வெறும் 60 நிமிடங்களில், அதாவது வெறும் 1 மணி நேரத்தில், 1.76 லட்சத்திற்கும் மேற்பட்டோர், மஹிந்திரா தார் ராக்ஸ் காரை முன்பதிவு செய்து விட்டனர். துல்லியமாக சொல்வதென்றால், 1 மணி நேரத்தில் 1,76,218 பேர், மஹிந்திரா தார் ராக்ஸ் காரை முன்பதிவு செய்துள்ளனர்.

இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் ஆகும். ஏனெனில் வெறும் 1 மணி நேரத்தில், 1.76 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருப்பது என்பது, சாதாரண விஷயம் அல்ல. எனவே மஹிந்திரா தார் ராக்ஸ் கார், இந்திய சந்தையில் விற்பனையில் புதிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 5 கதவுகளை (5 Door) கொண்ட, ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) ரக கார் ஆகும். MX1, MX3, MX5, AX3L, AX5L மற்றும் AX7L என மொத்தம் 6 வேரியண்ட்களில் (Variants) மஹிந்திரா தார் ராக்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் ஆரம்ப விலை 12.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 22.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி காரில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் mStallion டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் ஆகியவை ஆகும். இந்த காரில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி கார், ரியர் வீல் டிரைவ் எனப்படும் ஆர்டபிள்யூடி (Rear Wheel Drive - RWD) மற்றும் 4x4 வெர்ஷன்களில் கிடைக்கிறது. அடிக்கடி ஆஃப்-ரோடு சாகச பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு, மஹிந்திரா தார் ராக்ஸ் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) மற்றும் ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) ஆகிய ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்களுக்கு, மஹிந்திரா தார் ராக்ஸ் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்த போகிறது என்பது தற்போது குவிந்துள்ள முன்பதிவுகளிலேயே தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








