குளம், குட்டைகளில் தைரியமாக கொண்டு போகலாம்... நம்ம ஊர் சாலைகளுக்கு ஏற்ற வாகனத்தை உருவாக்கும் மஹிந்திரா!!
மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), இந்தியாவில் தற்சமயம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் அறிமுகங்களுள் ஒன்று. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தின் போது புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட உள்ளன. இதற்கிடையில் இந்த வாகனத்தை பற்றிய விபரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளன. இந்த வகையில், தற்போது தார் ராக்ஸ் வாகனத்தில் வழங்கப்பட உள்ள என்ஜின் ஆப்ஷன்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் வாகனங்களுள் ஒன்றாக தார் உள்ளது. அட்வென்ச்சர் பயணங்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய எஸ்யூவி வாகனமாக தார் விளங்குகிறது. ஆனால், தாரின் ஒரே குறை என்னவென்றால், 3 கதவுகளுடன் மட்டுமே கிடைப்பதாகும்.

ஆனால் இந்த குறை நீண்ட நாட்களுக்கு இருக்க போவதில்லை. ஏனெனில், 5 கதவுகளை கொண்ட தார் வாகனம் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. தார் ராக்ஸ் என்கிற பெயரில் தாரின் 5-டோர் வெர்சன் வருகிற ஆகஸ்ட் 15இல் வெளியீடு செய்யப்பட உள்ளது. அதாவது, அன்றைய தினத்தில் வாகனத்தின் விலைகள் தவிர்த்து மற்ற விபரங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
ஆனால், அதற்கு முன்பாகவே தார் ராக்ஸ் வாகனத்தை பற்றிய சில விபரங்கள் நமக்கு கிடைக்க பெற்றுள்ளன. 5 கதவுகளுடன் 4.3 மீட்டர் நீளத்தில் புதிய தார் ராக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மஹிந்திரா நிறுவனத்தால் புதியதாக வடிவமைக்கப்பட்ட 4ஜி பிளாட்ஃபாரத்தில் தார் ராக்ஸ் உருவாக்கப்படுகிறது. இது, ஸ்கார்பியோ என் காரின் 3ஜி பிளாட்ஃபாரத்தில் இருந்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய 4ஜி பிளாட்ஃபாரத்தின் மூலமாக தார் ராக்ஸின் உற்பத்தியில் அட்வான்ஸான மிகவும் வலிமையான இரும்பு பயன்படுத்தப்பட்டு உள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், 3ஜி பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் கார்களை காட்டிலும் புதிய 4ஜி பிளாட்ஃபாரத்தில் சுமார் 40 கிலோ வரையில் குறைந்த எடையில் வாகனங்களை உருவாக்க முடியுமாம். இந்த வகையில், தார் ராக்ஸ் எடை குறைவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் பயன்படுத்தப்படும் நிறைய பாகங்களை புதிய தார் ராக்ஸ் வாகனத்தில் பார்க்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, பின்பக்கத்தில் வழங்கப்படும் மல்டி-லிங்க் சஸ்பென்ஷனை சொல்லலாம். இது சுதந்திரமாக செயல்படக்கூடிய இரட்டை விஷ்போன் செட்-அப்பை கொண்டது ஆகும். இதனால், 3-டோர் தார் வாகனத்தை காட்டிலும் 5-டோர் மாடல் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மேலும் ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தற்போது கிடைத்துள்ள விபரங்களின்படி பார்த்தால், புதிய தார் ராக்ஸ் வாகனத்தில் அதிகப்பட்சமாக 650மிமீ ஆழமுள்ள நீரில் இயங்க முடியும். 650மிமீ என்பது இடுப்பளவு நீரில் இயங்குவதற்கு சமம் ஆகும். அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட உள்ளன. எலக்ட்ரானிக் பிரேக் லாக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் லாக்கிங் டிஃப்ரென்ஷியல், டெர்ரன் மோட்கள் மற்றும் 4X4 கியர் லிவர் உள்ளிட்டவற்றையும் தார் ராக்ஸ் வாகனத்தில் எதிர்பார்க்கிறோம்.
மஹிந்திரா ஸ்கார்பியோ-என் மற்றும் எக்ஸ்யூவி700 கார்களில் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய தார் ராக்ஸில் வழங்கப்பட உள்ளது. விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 160 பிஎச்பி மற்றும் 330 என்.எம் டார்க் திறன் வரையிலும், டாப் வேரியண்ட்களில் 175 பிஎச்பி மற்றும் 380 என்.எம் டார்க் திறன் வரையிலும் இந்த டர்போ என்ஜின் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா ஸ்கார்பியோ-என் மற்றும் எக்ஸ்யூவி700 கார்களில் பொருத்தப்படும் அதே என்ஜின் தார் ராக்ஸில் பொருத்தப்பட்டாலும், அந்த கார்களில் கிடைக்கும் 203 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை தார் ராக்ஸ் வாகனத்தில் பெற முடியாது என்பது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. ஏனெனில், இவ்வாறான ஆஃப்-ரோடு வாகனங்களுக்கு என்ஜின் ஆற்றல் முக்கியமான ஒன்றாகும். இருப்பினும், இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரையில் காத்திருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications








