ஹைபிரிட் காருகூட இல்ல.. இருந்தும் லி.21.20கிமீ மைலேஜ் தரும்! மாருதிக்கு சவால் விடும் காரோட டெலிவரி தொடங்கியது!
இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub 4 Meter) கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் சூப்பரான கார் மாடலாக எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) இருக்கின்றது. இதன் டெலிவரி பணிகளே தற்போது இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV 300) மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனே இதுவாகும். சப்4 மீட்டர் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களுக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே இந்த பிரிவில் போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது.
கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) இவர்களே இந்த பிரிவின் மிக சிறந்த போட்டியாளர்கள் ஆவார்கள். இவர்களை அடித்து துவம்சம் செய்யும் நோக்கிலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மாடலை எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மாடலாக அப்கிரேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே, ஏற்கனவே புக்கிங் பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது அதன் டெலிவரி பணிகளையும் மஹிந்திரா நிறுவனம் தொடங்கி இருக்கின்றது. ஆகையால், இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்த கார் மாடல் தற்போது உரிமையாளர்களின் கை வந்து சேர தொடங்கி இருக்கின்றது.
இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஒட்டுமொத்தமாக 9 விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எம்எக்ஸ் 1 (MX1), எம்எக்ஸ் 2 (MX2), எம்எக்ஸ் 2 ப்ரோ (MX2 Pro), எம்எக்ஸ் 3 (MX3), எம்எக்ஸ் 3 ப்ரோ (MX3 Pro), ஏஎக்ஸ் 5 (MX5), ஏஎக்ஸ் 5 எல் (MX5L), ஏஎக்ஸ் 7 (MX7) மற்றும் ஏஎக்ஸ்7 எல் (MX7L) ஆகியவையே அவை ஆகும்.
இந்த கார் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை வழங்கும் என்பதற்காக சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ரூ. 7.49 லட்சமே அதன் விலை ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையிலேயே பாதுகாப்பு அம்சங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் இந்த காரில் வாரி வழங்கி இருக்கின்றது மஹிந்திரா நிறுவனம்.
அந்தவகையில், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டம், அலெக்ஸா, 7 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மேன் கர்டோன் சவுண்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜிங் கருவி, ஏழு வழியில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஓட்டுநர் இருக்கை ஆகியவற்றை இந்த காரில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது.
தொழில்நுட்பங்களைப் போலவே இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், மும்முனை பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் சிறுவர்களுக்கான ஐசோ-ஃபிக்ஸ் இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இவை அனைத்தும் ஸ்டாண்டர்டு அம்சங்களாகும். இதுதவிர, டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், ரோல் ஓவர் மிடிகேஷன், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் பிரேக் ப்ரீ-ஃபில் மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (advanced driver assistance systems) ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்று ஏகப்பட்ட அம்சங்களை இந்த கார் தாங்கி இருக்கின்றாலும், சவாலான விலையை இதுக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலும் இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பை இந்த கார் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்குசான்றாக இந்த காருக்கு புக்கிங் தொடங்கப்பட்ட வெறும் 60 நிமிடங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின.
இதில் 27 புக்கிங்குகள் 10 நிமிடத்தில் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மாடலின் டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றன. இந்த காரில் மூன்று விதமான மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதில் இரண்டு பெட்ரோல், ஒன்று டீசல் ஆகும்.
இதில் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக டீசல் ஏஎம்டி-யே உள்ளது. அது ஒரு லிட்டருக்கு 21.20 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று வழங்கி இருக்கின்றது. இதன் பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டருக்கு 17.96 கிமீ முதல் 20.10 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி 300 கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்தது இதைப் போலவே புதிய வெர்ஷன் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓவிற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சான்றாகவே அக்கார் மாடலுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு பற்றிய விபரங்கள் அமைந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications








