டாடா நெக்ஸான் கொஞ்சம் ஓரமா போ.. அதிகம் மைலேஜ் தரும் மஹிந்திரா கார் அறிமுகம்! ஆரம்ப விலை ரூ.7.49லட்சம் மட்டுமே!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது அந்நிறுவனத்தின் எக்ஸ்யூவி 300 கார் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். மிகப் பெரிய மாற்றங்களை இந்த காரில் செய்து அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த காரில் பல்வேறு மாற்றங்களை மஹிந்திரா செய்திருக்கின்றது. அப்டேட்டின்கீழ் வெறும் அலங்கார வேலைகளை மட்டும் செய்யாமல் அது பல்வேறு மாற்றங்களை இந்த காரின் உருவத்தில் செய்திருக்கின்றது. அந்தவகையில் முன் மற்றும் வால் பகுதியின் அமைப்பை மிகப் பெரிய மாற்றத்திற்கு உட்படுத்தி இருக்கின்றது.

இதன் வாயிலாக இந்தியாவின் அதிக கரடு-முரடான மற்றும் மிக உயரமான ஸ்பீடு பிரேக்கர்களை சமாளிக்கும் வசதி அதற்குக் கிடைத்திருக்கின்றது. அறிமுகமாக ரூ. 7.49 லட்சம் முதல் 15.49 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அனைத்தும் வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
இந்த காரை ஒன்பது விதமான தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். எம்எக்ஸ் 1, எம்எக்ஸ் 2, எம்எக்ஸ் 2 ப்ரோ, எம்எக்ஸ் 3, எம்எக்ஸ் 3 ப்ரோ, ஏஎக்ஸ் 5, ஏஎக்ஸ் 5 எல், ஏஎக்ஸ் 7 மற்றும் ஏஎக்ஸ்7 எல் ஆகியவையே ஆகும்.

அனைத்திலும் பெஸ்ட் இன் கிளாஸ் (Best In Class) என கூறும் அளவிற்கு மஹிந்திரா இந்த காரை செய்திருக்கின்றது. அதாவது, அனைத்து நிலைகளிலும் சிறந்த காராகவே எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், இதன் பான்னெட் 1033 மிமீ அளவில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவருக்கு மிக சிறந்த பார்வை திறனை வழங்கும் நோக்கில் இந்த அளவில் பான்னெட் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரால் 350 மிமீ ஆழமுள்ள நீர் நிலைகளில் பயணிக்க முடியும் என மஹிந்திரா கூறி இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல திறன்களைக் கொண்டதாகவே மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

குறிப்பாக, அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்த காரை மஹிந்திரா தயார் செய்திருக்கின்றது. முன் மற்றும் பின் பக்கங்கள் மிக வேகமான மோதலைத் தாங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பலதரப்பட்டு பாதுகாப்பு கருவிகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், 4 டிஸ்க் பிரேக்குகள், சீட் பெல்ட் அணியவில்லை எனில் ஞாபகப்படுத்தும் வசதிக் கொண்ட மும்முனை பாயிண்டுகள் கொண்ட சீட் பெல்ட் (அனைத்து இருக்கைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கும்) மற்றும் ஐசோ-ஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. அனைத்தும் அனைத்து வேரியண்டுகளிலும் வழங்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர, வெஹிக்கிள் டைனமிக்ஸ் கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், ரோல் ஓவர் மிடிகேஷன், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், பிரேக் டிஸ்க் வைப்பிங், எலெக்ட்ரானிக் பிரேக் ப்ரீஃபில் உள்ளிட்டவை எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், மிக முக்கியமான அம்சமாக லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (advanced driver assistance systems) இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
எனவே எக்ஸ்யூவி 300 மாடலைக் காட்டிலும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ அதீத பாதுகாப்பை பயணிகளுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஓர் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய அடாஸ் அம்சத்தின் வாயிலாக க்ரூஸ் கன்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எஞ்சினைப் பொருத்த வரை மூன்று விதமான ஆப்ஷன்கள் இந்த காரில் கிடைக்கும். இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் மோட்டாரே அது ஆகும். 1.2 லிட்டர் எம்ஸ்டாலியன் டிஜிடிஐ, 1.2 லிட்டர் டிசிஎம்பிஎஃப்ஐ மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஇ ஆகிய மோட்டார் தேர்வுகளே இந்த காரில் வழங்கப்படுகின்றது.
இத்துடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ-வில் வழங்கப்படும் என மஹிந்திரா அறிவித்து இருக்கின்றது. மேலும், ஜிப், ஜேப் மற்றும் ஜும் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்களும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ-வில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், நவீன கால தொழில்நுட்ப வசதிகளையும் இந்த காரில் மஹிந்திரா வாரி வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், 10.2 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை, 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். இதுதவிர, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டம், அலெக்ஸா, 7 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மேன் கர்டோன் சவுண்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜிங் கருவி, ஏழு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் மைலேஜ் தருவதிலும் பெஸ்ட்டான ஒன்றாக உள்ளது. அந்தவகையில், லிட்டர் ஒன்றிற்கே இது18.89 கிமீ முதல் 21.1 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இந்த கார் விற்பனையில் மிகப் பெரிய உச்சத்தைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் வருகையால் டாடா நெக்ஸானுக்கு மிகப் பெரிய போட்டியான சூழல் உருவாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









