சிங்கத்தை களமிறக்க நாள் குறித்த மஹிந்திரா! எழுதி வெச்சுக்கோங்க! டாடா, மாருதிய எல்லாம் இந்த கார் கதற விட போகுது
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், எக்ஸ்யூவி300 காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் தயாராகி வருகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடல், வரும் ஏப்ரல் 29ம் தேதி (April 29) அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் டீசர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது ஒரு டீசர் வீடியோ (Teaser Video) வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடலில், பனரோமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) வசதி இடம்பெறுவது இந்த வீடியோவின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய மாடல் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடலானது, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. வசதிகளை (Features)பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை இதன் முக்கியமான அம்சங்களாக இருக்கும்.
இதுதவிர 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் பின் பகுதியிலும் ஏசி வெண்ட்கள் போன்ற வசதிகளும், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் வழங்கப்படவுள்ளன. ஆனால் தற்போது வேகமாக பிரபலமடைந்து வரும் அடாஸ் வசதி வழங்கப்படுமா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் நேரடி போட்டி மாடல்களான கியா சொனெட் (Kia Sonet) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்களில், அடாஸ் வசதி வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில், தற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.5 லிட்டர் டீசல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஸன் டர்போ பெட்ரோல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடர்ந்து வழங்கப்படவுள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படவுள்ளன.
டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாலும், பல்வேறு புதிய வசதிகள் கூடுதலாக வழங்கப்படுவதாலும், தற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை காட்டிலும், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 14.76 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப விலை 8.50 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 16 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கலாம். கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ ஆகிய கார்களுடன், டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) ஆகிய கார்களுடனும், இது விற்பனையில் போட்டியிடும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் வருகை, அதன் போட்டி மாடல்களுக்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்த போகிறது என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கும், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ உதவி செய்யும் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








