புக்கிங் மழை வெளுத்து வாங்குது.. 60 நிமிஷத்துல 50 ஆயிரம் பேர் புக் பண்ணிட்டாங்களாம்! விலை அவ்ளோ கம்மியா!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் மாடல் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO) ஆகும். இது அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற எக்ஸ்யூவி 300 மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த கார் மாடலையே கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது மஹிந்திரா.
யாரும் எதிர்பார்த்திராத விலையிலேயே இந்த காரை அது விற்பனைக்குக் கொண்டு வந்தது. ரூ. 7.49 லட்சம் என்கிற விலையே அதற்கு நிர்ணயிக்கப்பட்டது. இது ஆரம்ப நிலை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து இன்று (மே 15) காலை 10 மணி முதல் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மாடலுக்கான புக்கிங் பணிகளையும் மஹிந்திரா தொடங்கியது.

இது தொடங்கப்பட்ட வெறும் 60 நிமிடங்களிலேயே, அதாவது, ஒரே ஒரு மணி நேரத்திலேயே சுமார் 50 ஆயிரம் இந்த காரை புக் செய்திருக்கின்றனர். இந்த தகவலை மஹிந்திரா நிறுவனமும் அதிகாரப்பூர்மவமாக உறுதி செய்திருக்கின்றது. இதில் முதல் 27 ஆயிரம் புக்கிங் வெறும் 10 நிமிடங்களில் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது மிகப் பெரிய வரலாற்று சாதனை ஆகும். இதன் வாயிலாக நிறுவனத்தின் மற்ற எஸ்யூவி ரக கார்களுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே அப்டேட் செய்யப்பட்டு புதிய பெயரில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஒட்டுமொத்தமாக ஒன்பது விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எம்எக்ஸ் 1 (MX1), எம்எக்ஸ் 2 (MX2), எம்எக்ஸ் 2 ப்ரோ (MX2 Pro), எம்எக்ஸ் 3 (MX3), எம்எக்ஸ் 3 ப்ரோ (MX3 Pro), ஏஎக்ஸ் 5 (MX5), ஏஎக்ஸ் 5 எல் (MX5L), ஏஎக்ஸ் 7 (MX7) மற்றும் ஏஎக்ஸ்7 எல் (MX7L)ஆகியவையே ஆகும்.
இந்த கார் மாடலில் பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர் பேக்குகள், 4 டிஸ்க் பிரேக்குகள், ரிமைண்ட் செய்யும் வசதியுடன் கூடிய மும்முனை பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் ஐசோ-ஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்டு அம்சமாக அனைத்து வேரியண்டுகளிலும் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது.
இதுதவிர, வெஹிக்கிள் டைனமிக்ஸ் கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், ரோல் ஓவர் மிடிகேஷன், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், பிரேக் டிஸ்க் வைப்பிங், எலெக்ட்ரானிக் பிரேக் ப்ரீஃபில் மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (advanced driver assistance systems) உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை உயர் நிலை தேர்வுகளிலேயே கிடைக்கும்.
நவீன கால தொழில்நுட்ப வசதிகளாக புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மாடலில் 10.2 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் சிஸ்டம், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டம், அலெக்ஸா, 7 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மேன் கர்டோன் சவுண்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜிங் கருவி, ஏழு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதுதவிர, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை மூன்று விதமான ஆப்ஷன்களே புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ-வில் வழங்கப்படுகின்றது. இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் தேர்வாக அவை கிடைக்கிறது. 1.2 லிட்டர் எம்ஸ்டாலியன் டிஜிடிஐ, 1.2 லிட்டர் டிசிஎம்பிஎஃப்ஐ மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஇ ஆகியவையே அவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி700, தார், ஸ்கார்பியோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையில் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ-வும் வரும் நாட்களில் இணையும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதற்கு சான்றாகவே தற்போது வெளியாகி இருக்கும் புக்கிங் நிலவரம் பற்றிய தகவல் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








