ஏப்.29ம் தேதிய இப்பவே உங்க காலண்டர்ல குறித்து வைச்சுக்கோங்க! மஹிந்திரா செம காரை வெளியிட போறாங்க!
மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி 300 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை முதன்முறையாக டீஸ் செய்துள்ளது. இந்த காரை அந்நிறுவனம் வரும் 29ஆம் தேதி காட்சிப்படுத்த போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய காருக்கும் இந்த காருக்கும் என்ன வித்தியாசம்? என்னென்ன மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது, உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் என்றாலே தரமான கார்களாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. இதனால் மஹிந்திரா கார்களை மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 300 காரை ஃபேஸ்லிஃப்ட் செய்து வெளியிட நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறது. தற்போது இந்த கார் தயாராகி உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் புதிதாக டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 என்ற பெயரில் கார்களுக்கான டீசர் வீடியோ வெளியாகி உள்ளன. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கார் தான் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் காராக இருக்கும் என்ற பேச்சு தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது வெளியான மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 என்ற காரின் டீசரை வைத்து பார்க்கும் போது இந்த காரின் முன் பக்கம் ஸ்பிலிட் ஹெட்லேம்ப் கொண்ட புதிய செட்டப் வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதன் ஹெட்லைட் எல்இடி புரொஜெக்டர் ஹெட் லைட்டாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் வட்ட வடிவிலான ஃபாக் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்பக்கம் உள்ள கிரில் பகுதி டைமண்ட் பேட்டனில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள அலாய் வீல்களை பொறுத்தவரை டூயல் டோன் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. டீசரில் உள்ள கார் மஞ்சள் நிற காராக இருக்கிறது. இந்த காரின் பின்பக்கத்தை பொறுத்தவரை சி வடிவ எல்இடி டெயில் லைட் கனெக்டெட் எல்இடி பார் ஆகியன வழங்கப்பட்டுள்ளன. மற்றும் பின்பக்க வைப்பர் மற்றும் வாஷர்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் பெரிதாக மஹிந்திரா லோகோவுடன் எக்ஸ்யூவி 3X0 என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த டீசரில் உள்ள உட்புற கட்டமைப்பை பொறுத்தவரை இந்த காரில் பெரிய ப்ரீ ஸ்டாண்ட் நிலையில் உள்ள டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இது பார்க்க 10.25 இன்ச் அளவு கொண்டதாக தெரிகிறது. இது மட்டுமல்லாமல் டிரைவருக்கு முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. காரின் உட்புறம் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்டர் கன்சோல் பகுதியும் ஏசி வென்ட் பகுதியும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த காரின் இன்ஜின் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் மஹிந்திரா நிறுவனத்தால் வெளியிடவில்லை. ஆனால் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 என்ற காரின் இன்ஜினை பொறுத்தவரை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின்கள் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும்போது மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், கியா சோனட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னெட் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 என்ற கார் வரும் 29ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காருக்காக தான் ஏராளமான மக்கள் காத்திருந்த நிலையில் தற்போது இந்த கார் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது மக்களை குஷிப்படுத்தி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் எக்யூவி 300 கார் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தால் போட்டி நிறுவனங்களின் கார்கள் எல்லாம் விற்பனையில் மிகப்பெரிய சரிவை சந்திக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. மஹிந்திரா நிறுவனம் சிறப்பான வடிவமைப்பிலும் அதிக அம்சங்களும் கொண்ட காராக இதை உருவாக்கி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications









