மாருதி, ஹூண்டாய் எல்லாம் கதற போறாங்க... மஹிந்திரா எலக்ட்ரிக் காரின் உண்மையான தரம் இதுதான்!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் கார், எக்ஸ்யூவி400 (XUV400) ஆகும். கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மஹிந்திராவின் தார் மற்றும் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார்கள் உள்பட எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரும் இந்தியாவில் நடத்தப்படும் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் (Bharat NCAP Crash Test)-இல் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிராஷ் டெஸ்ட்டில் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் எவ்வாறு செயல்பட்டது? இதில் இந்த கார் பெற்ற மதிப்பெண்கள் என்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய அரசாங்கம் தனக்கான பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டை கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பு தரத்தை மக்கள் நேரடியாக தெரிந்துக் கொள்ளும் விதமாக பாரத் என்சிஏபி அறிமுகம் செய்யப்பட்டது.

டாடா மோட்டார்ஸின் சில கார்கள் கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்த சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. சில வாரங்கள் கழித்து அவற்றின் மதிப்பெண் வெளிவந்தன. அதன்பின், கடந்த 1 வருடத்தில் பல்வேறு கார்கள் பாரத் என்சிஏபி-இல் உட்படுத்தப்பட்டன. அந்த வரிசையில், மஹிந்திரா 3 கார்களை இந்த கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தி உள்ளது. அவற்றின் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் மதிப்பெண்கள் வெளிவந்துள்ளன.
பாரத் என்சிஏபி வருவதற்கு முன்னரே க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் சில இந்திய கார்கள் உட்படுத்தப்பட்டு சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், டாடா மற்றும் மஹிந்திரா கார்கள் முழு 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தின. இதன் காரணமாகவே, டாடா மற்றும் மஹிந்திரா கார்கள் மிகவும் பாதுகாப்பானவை என்கிற பார்வை மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது.

க்ளோபல் என்சிஏபி-ஐ போல் பாரத் என்சிஏபி-யிலும் டாடா மற்றும் மஹிந்திரா கார்கள் சிறப்பான மதிப்பெண்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, சில டாடா கார்கள் கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியிலேயே பாரத் என்சிஏபி-இல் 5 நட்சத்திரங்களை பெற்று கவனத்தை ஈர்த்தன. இது, நாடு முழுவதும் புதியதாக துவங்கப்பட்ட பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் முடிவுகளுக்கும் விளம்பரமாக அமைந்தது. சமீபத்தில் கூட நெக்ஸான், பஞ்ச் உள்ளிட்ட டாடா கார்கள் 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தின.
இந்த நிலையில், மஹிந்திரா அதன் 3 கார்களில் 5 நட்சத்திரங்களை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த 3 கார்களில் ஒன்றான எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார், இந்தியாவில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருவர் பாதுகாப்பிலும் முழுவதுமாக 5 நட்சத்திரங்களை பெற்ற ஒரே எலக்ட்ரிக் காராக விளங்குகிறது. இந்த மதிப்பீடானது மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார் 32க்கு 30.38 மதிப்பெண்களை பெற்றுள்ளது. இது, டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் பெற்ற 29.86 மதிப்பெண்களை விட 0.52 அதிகமாகும். ஆனால், டாடா பஞ்ச் இவி மற்றும் கர்வ் இவி எலக்ட்ரிக் கார்கள் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை விட பெரியவர்கள் பாதுகாப்பில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளன.
வேறொரு வாகனம் காருக்கு பக்கவாட்டில் மோதினால் வழங்கும் பாதுகாப்பில் முழு 16 மதிப்பெண்களை பெற்றிருக்கும் எக்ஸ்யூவி400 கார், வளையாத பொருள் மீது முன்பக்கமாக மோதினால் வழங்கும் பாதுகாப்பில் 16க்கு 14.38 மதிப்பெண்களை பெற்றுள்ளது. சிறியவர்கள் பாதுகாப்பில் 49க்கு 43 மதிப்பெண்களை எக்ஸ்யூவி400 பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெற்றுள்ளது. இதில் டைனாமிக் டெஸ்ட்டிலும், குழந்தை இருக்கைக்கு வழங்கும் பாதுகாப்பிலும் முழு மதிப்பெண்களை இந்த எலக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார் வாங்குபவர்கள் முக்கியமாக கவனிக்கும் மதிப்பெண்களாக பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் முடிவு முக்கியத்துவம் பெற்று வருகிறது. கடுமையான விதிமுறைகளுடன் அதிநவீன கருவிகளை கொண்டு தீர்மானிக்கப்படும் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் முடிவுகளில் முழு 5 நட்சத்திரங்களை பெற வேண்டுமென்றால், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் போன்று கார்கள் சிறந்த பாதுகாப்பு தரத்தில் இருக்க வேண்டியது அவசியமாகிறது.


Click it and Unblock the Notifications









