டீசல் என்ஜினில் இந்த காரை வாங்க டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது - மஹிந்திரா உருவாக்கும் என்ஜினுக்கு கூடும் மவுசு!
மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700), இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் எஸ்யூவி கார்களுள் ஒன்று. 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதல்முறையாக எக்ஸ்யூவி700 காரை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 காரின் நியூ ஜென்ரேஷன் காராக எக்ஸ்யூவி700-ஐ மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிவிட்டாலும், இப்போதும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களின் விற்பனை நல்லப்படியாகவே உள்ளது. குறிப்பாக, இந்த காரை டீசல் என்ஜின் உடன் வாங்கவே நிறைய விரும்புவதாக ஓர் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து கடந்த 2024 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் எண்ணிக்கைகள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி பார்க்கும்போது, கடந்த மாதத்தில் மொத்தம் 5,008 எக்ஸ்யூவி700 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. அதுவே 2023 மே மாதத்தில் 5,245 எக்ஸ்யூவி700 கார்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் 237 எக்ஸ்யூவி700 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 6,134 மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. நடந்த முடிந்த கடந்த மே மாதத்தில் மொத்தம் 43,218 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், 5,008 கார்கள் எக்ஸ்யூவி700 ஆகும்.
அதாவது, கடந்த மே மாதத்தில் மஹிந்திரா காரை வாங்கியவர்களில் 9இல் ஒருவர் நிச்சயமாக எக்ஸ்யூவி700 காரை வாங்கியுள்ளார். கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 5,008 எக்ஸ்யூவி700 கார்களில் 3,845 கார்கள் டீசல் என்ஜினை கொண்ட எக்ஸ்யூவி700 கார்கள் ஆகும். மீதி 1,163 கார்கள் மட்டுமே பெட்ரோல் என்ஜினை கொண்ட எக்ஸ்யூவி700 கார்களாகும்.

அதாவது, கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களில் சுமார் 77 சதவீதம் டீசல் என்ஜினை கொண்டவை ஆகும். அதாவது, எக்ஸ்யூவி700 காரை வாங்கும் 4இல் 3 பேர் டீசல் என்ஜின் உடன் இந்த எஸ்யூவி காரை வாங்குகின்றனர். 2023 மே மாதத்திலும், விற்கப்பட்ட மொத்த 5,245 எக்ஸ்யூவி700 கார்களில் 3,739 கார்கள் டீசல் என்ஜினை கொண்டவை, மீதி 1,506 கார்கள் பெட்ரோல் என்ஜினை கொண்டவை ஆகும்.
கடந்த மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களின் எண்ணிக்கைக்கு வருவோம். கடந்த 2024 மே மாதத்தில் டீசல் என்ஜின் உடன் மொத்தம் 3,675 எக்ஸ்யூவி700 கார்களையும், பெட்ரோல் என்ஜின் உடன் 1,732 கார்களையும் மஹிந்திரா நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. 2023ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும்.

ஏனெனில், அந்த மாதத்தில் டீசல் என்ஜின் உடன் 3,708 எக்ஸ்யூவி700 கார்களையும், பெட்ரோல் என்ஜின் உடன் 1,570 எக்ஸ்யூவி700 கார்களையும் மஹிந்திரா உற்பத்தி செய்திருந்தது. இவ்வாறு, தேவைக்கு ஏற்ப எக்ஸ்யூவி700 கார்களை உற்பத்தி செய்யவும் மஹிந்திரா நிறுவனம் மறப்பதில்லை. அதேபோல், கடந்த 3 வருடங்களில் எக்ஸ்யூவி700 காரை அவ்வப்போது அப்டேட் செய்யவும் மஹிந்திரா மறந்தது கிடையாது.
இந்த வகையில், கடந்த மே மாதத்தில் எக்ஸ்யூவி700 பிளாஸ் எடிசன் கார் அறிமுகம் செய்யப்பட்டது. மேட் சிவப்பு நிறத்தில் புதிய எக்ஸ்யூவி700 பிளாஸ் எடிசன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து, விரைவில் எக்ஸ்யூவி700 காரில் விலை குறைவான ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டையும் அறிமுகம் செய்ய மஹிந்திரா தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், டீசல் கார்கள் உலகளவில் ஓரங்கட்டப்படுகின்றன. நம் இந்திய அரசாங்கமும் டீசல் கார்களை சாலையில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. இருப்பினும், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை டீசல் என்ஜின் உடன் வாங்க அதிக பேர் ஆர்வம் காட்டுவது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. மஹிந்திரா உற்பத்தி செய்யும் டீசல் என்ஜினின் தரம் இதற்கு காரணமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









