7 வருடத்தில் ரூ.7 லட்சம் வரையில் இலாபம்... சார்ஜ் செய்துக் கொண்டு நேரத்தை வீணடிக்க தேவையில்லை!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களில் சமீப காலமாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த மஹிந்திரா, அதன் கமர்ஷியல் வாகனங்களையும் எலக்ட்ரிக்கில் கொண்டுவர முனைப்புடன் உள்ளது. அந்த வகையில், புதிய ஸியோ (Zeo) என்கிற சிறிய அளவிலான எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. புதிய மஹிந்திரா ஸியோ இவி -ஐ பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடந்து முடிந்த செப்டம்பர் மாத கார்கள் விற்பனையில் அனைவரும் ஆச்சிரியப்படும் வகையில் டாடா மோட்டார்ஸை முந்தி 3வது இடத்தை மஹிந்திரா பிடித்துள்ளது. 2வது இடத்தில் உள்ள ஹூண்டாய்க்கும், மஹிந்திராவுக்கும் மிகவும் சில எண்ணிக்கைகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இதனால், வரும் மாதங்களில் ஹூண்டாயை முந்தி மஹிந்திரா 2வது இடத்தை பிடிப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு கார்கள் விற்பனையில் ஒருபக்கம் ஜொலித்துக் கொண்டிருக்கும் மஹிந்திரா, மறுப்பக்கம் கமர்ஷியல் வாகனங்களிலும் தனது ஆதிக்கத்தை வழக்கம்போல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், கார்கள் விற்பனையில் இறங்குவதற்கு முன்னரே டிராக்டர், சரக்கு வாகனங்கள் போன்ற கமர்ஷியல் வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்துவந்தது உங்கள் எல்லாருக்கும் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன்.
அந்த வகையில், வணிகத்திற்கான புதிய வாகனத்தை ஸியோ என்கிற பெயரில் எலக்ட்ரிக் வாகனமாக மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. எடை குறைவான 2-டன் பிரிவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய மஹிந்திரா வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.52 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதே 2-டன் எடையிலான டீசல் வாகனங்கள் உடன் ஒப்பிடுகையில், ஸியோ எலக்ட்ரிக் வாகனம் 7 வருடங்களில் உங்களுக்கு ரூ.7 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை மிச்சப்படுத்தி தரும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா ஸியோ எலக்ட்ரிக் வாகனத்தில் நிரந்தரமான காந்த மின்னியக்குவிசை மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 30 கிலோவாட்ஸ் பவர் மற்றும் 114 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வாகனத்திற்கு வழங்கும். இந்த மோட்டாருக்கு இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 21.3kWh லிக்யுடு-கூல்டு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 160கிமீ தொலைவிற்கு ஸியோ வாகனத்தில் செல்லலாம். இந்த எலக்ட்ரிக் வாகனத்தில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளதால், பிரேக் கொடுக்கும்போது வீணாகும் ஆற்றலை இது சேமித்து வைத்து பேட்டரியை அதிக நேரம் உழைக்க வைக்கும். டிசி ஃபாஸ்ட் சார்ஜரின் மூலமாக பேட்டரியை 100கிமீ தொலைவிற்கு இயங்க வைக்க 1 மணிநேரம் சார்ஜ் செய்தால் போதும்.

இது இல்லாமல், வேறு விதமான சார்ஜிங் ஆப்ஷன்களையும் பெறலாம். ஆனால், ஸியோ எலக்ட்ரிக் வாகனத்துடன் மஹிந்திரா வழங்க இருப்பது 3.3 கிலோவாட்ஸ் சார்ஜர் ஆகும். வாகனத்தின் பேட்டரிக்கு 7 வருட/ 1.5 லட்ச உத்தரவாதத்தை மஹிந்திரா வழங்கியுள்ளது. இந்த எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனத்தின் டாப்-ஸ்பீடு மணிக்கு 60கிமீ ஆகும். அதிகப்பட்சமாக 765 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை இந்த வாகனத்தில் ஏற்றிச் செல்லலாம்.
இந்த வாகனத்தின் கார்கோ பகுதியை 2,250மிமீ வரையில் பெரியதுப்படுத்திக் கொள்ள முடியும். முழு சுமை உடன் ஏறுமுகமான சாலைகளில் ஏறுவதிலும்/ இறங்குவதிலும் மற்ற 2-டன் கமர்ஷியல் வாகனங்களை காட்டிலும் 32% சிறந்ததாக ஸியோ இவி செயல்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. ஹில் ஹோல்ட் அசிஸ்ட், வாகனத்திற்கு உள்ளே டைப்-சி யுஎஸ்பி சார்ஜிங் வசதி, பூட்டி வைக்கக்கூடிய க்ளோவ் பாக்ஸ் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவையும் புதிய ஸியோ இவி -இல் இடம்பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய மஹிந்திரா ஸியோ வாகனத்தில் இவை மட்டுமின்றி இன்னும் ஏகப்பட்ட மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, தோற்றத்திலும் மற்ற கமர்ஷியல் வாகனங்களை காட்டிலும் மேம்பட்டதாக மஹிந்திரா ஸியோ காட்சியளிக்கிறது. ஆதலால், இன்றைய கால தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதத்தில் கமர்ஷியல் வாகனத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு மஹிந்திரா ஸியோ ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









