மாருதி 800 கார் இது என்று சொன்னால் நம்புவீங்களா!! இப்போதும் நல்ல ரன்னிங்கில்...
மாருதி சுஸுகி 800 (Maruti Suzuki 800) கார் ஒன்று பஞ்சாப்பில் நீளமான அமரர் ஊர்தி வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை 800 கார் தொடர்பான வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம், இந்த மாடிஃபை காரை பற்றி நமக்கு தெரிய வந்துள்ள விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் மிக பிரபலமான கார்களுள் ஒன்று மாருதி சுஸுகி 800 ஆகும். ஆரம்ப கால கட்டத்தில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த கார் மாடல் என்று 800 ஐ சொல்லலாம். அந்த அளவிற்கு, ஒரு காலத்தில் நிறைய வீடுகளில் மாருதி 800 கார் நின்றுக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது 800 காரை வைத்திருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அந்த அளவுக்கு மிகவும் குறைவானவர்களே தற்சமயம் மாருதி 800 காரை வைத்துள்ளனர். ஏனெனில், 800 காரின் விற்பனையை 2014ஆம் ஆண்டிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்திவிட்டது. மாருதி 800 காரை இப்போது வைத்திருக்கும் சிலரும் தங்களது 800 காரை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளதை இதற்கும் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.
அந்த வகையில், பஞ்சாப்பில் பதிவு செய்யப்பட்ட மாருதி சுஸுகி 800 கார் ஒன்று இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் அமரர் ஊர்தி வாகனமாக, நீளமானதாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, இந்தியாவின் மிக நீளமான மாருதி 800 காராக இது விளங்குகிறது. இந்த மாடிஃபைடு 800 கார் தொடர்பான வீடியோ ஜெய்பூர் ஜீப் லவ்வர்ஸ் என்கிற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் அதிகம் காணப்படும் சீக்கர்கள் இறந்தவரின் உடலை அவர்களது மத கோவிலான குருத்வாராவுக்கு கொண்டு செல்வது வழக்கம். அங்கு சில பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு, பின்னர் எரிப்பது/ புதைப்பது நடக்கும். வட இந்தியாவில் நிறைய குருத்வாரா கோயில்கள் உள்ளன. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக உள்ளன. இருப்பினும், சீக்கர் மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக குருத்வாரா கோயில்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனால், குருத்வாராவை நோக்கி இறந்தவரின் உடலை சில கிமீ தொலைவிற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த போக்குவரத்துக்காக, இந்த மாடிஃபைடு 800 கார் பயன்படுத்தப்பட உள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், இந்த 800 காரின் முன்பக்கத்தில் பழைய ஹெட்லைட்கள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, கார் பாதியாக வெட்டப்பட்டு, இடைப்பட்ட பகுதியில் புதிய உலோக தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இறந்தவரின் உடலை கொண்டு செல்வதற்காக காருக்கு உள்ளே ஒரு ஸ்ட்ரேச்சர் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இறந்தவரின் உடலுடன் வருபவர்களுக்காக இரு இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், காரின் நீளம் அதிகரித்து இருப்பதன் காரணமாக, டிரைவிங்கில் சில அசவுகரியங்கள் ஏற்படலாம்.
குறிப்பாக, குறுகலான சாலைகளில் இத்தகைய கார்களில் வளைவுகளில் திரும்புவது கடினம். வெளிப்பக்கத்தை போன்று இந்த மாடிஃபை காரின் உட்பக்கமும் நீல நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இருக்கைகளுக்கு லெதர் கவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றப்படி டேஸ்போர்டின் டிசைன் மற்றும் அதில் இருக்கும் ஸ்விட்ச்களில் கை வைக்கவில்லை. அதாவது, மாருதி சுஸுகி நிறுவனம் எவ்வாறு வழங்கியதோ, அவ்வாறே இப்போதும் உள்ளது.

இறந்தவரின் உடலை கொண்டு செல்வதற்கான ஸ்ட்ரேச்சரை பின்பக்க கதவின் வாயிலாக காரின் உள்ளே கொண்டு செல்லலாம். லாரிகளில் உள்ளதை போன்று, இந்த காரில் டிரைவருக்கென தனியாக கேபின் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, முன் இருக்கைகள் இரண்டும் ஒரு கேபினாக மாற்றப்பட்டுள்ளது. இறந்தவர் உடலை கொண்டு செல்லும் வாகனங்களில் ஏசி வசதி இருக்கும். ஆனால், இந்த வாகனத்தில் ஏசி பொருத்தப்பட்டுள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கீழே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த மாருதி 800 காரில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாடிஃபிகேஷன்களை விரிவாக அறிய முடியவில்லை. அதாவது, மாடிஃபிகேஷனுக்கு பிறகு கார் எவ்வாறு உள்ளது என்பது மட்டுமே இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸை காட்டிலும், இத்தகைய வாகனங்கள் அமரர் ஊர்தி பணிக்கு இன்னும் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









