கொஞ்சமா பெட்ரோல் போட்டா போதும் நிக்காம போகும்! காருக்குள் ஜெனரேட்டரை பொருத்தும் மாருதி!
மாருதி நிறுவனம் தற்போது ஸ்டிராங் ஹைபிரிட் காரை முதன்முதலாக கிராண்ட் விட்டாரா காரில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் 5 புதிய ஸ்ட்ராங் ஹைபிரிட் கொண்ட கார்கள் மாருதி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதிக மைலேஜ் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற ரீதியில் இந்த கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனம் சர்வதேச அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரு நிறுவனங்களும் தங்கள் தொழில்நுட்பத்தை பகிர்ந்து வருகின்றன. இதன்படி மாருதி நிறுவனம் தயாரிக்கும் கார்களை மாடிஃபிகேஷன் செய்து டொயோட்டா பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல டொயோட்டா பிராண்டில் விற்பனையாகும் கார்கள் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டு மாருதி பிராண்டில் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் தயாரித்த ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை மாருதி நிறுவனமும் தனது கார்களில் புகுத்தி வருகிறது. இதன் படி கிராண்ட் விட்டாரா கார் ஸ்டிராங் ஹைபிரிட் வெர்ஷனில் உருவாக்கப்பட்ட காராக மாருதி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்டிராங் ஹைபிரிட் வெர்ஷன் கார் அதிக மைலேஜ் தரும் காராக இருக்கிறது.
மாருதி பிராண்டில் கிராண்ட் விட்டாரா என்ற காரும் டொயோட்டா பிராண்டில் அர்பன் க்ரூஸர் ஹைட்ரேடர் என்ற காரும் ஸ்டிராங்க் ஹைபிரிட் வெர்ஷனில் விற்பனையாகி வரும் நிலையில் இந்த இரு கார்களும் இவி அவதாரம் எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இது குறித்த அப்டேட்கள் எல்லாம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மாருதி நிறுவனம் தற்போது இந்த ஹைபிரிட் தொழில்நுட்பத்தை தனது மற்ற கார்களுக்கும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா நிறுவனம் 1.5 லிட்டர் இன்ஜினில் ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை பொருத்தி தற்போது மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் மாருதி நிறுவனம் வரும் 2025-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டுக்குள் 5 புதிய ஹைபிரிட் கார்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதன் முதல் காராக பிராங்க்ஸ் ஸ்டிராங்க் ஹைபிரிடு வெர்ஷனில் விரைவில் வெளியாகும் என்ற தகவல் ஏற்கனவே நமக்கு கிடைத்துள்ளது.
5 கார்களில் மாஸ் மார்க்கெட் கார் நிச்சயம் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். மாருதி நிறுவனம் இந்த ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை தானே உருவாக்கி அதில் மாஸ் மார்க்கெட் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மிக குறைவான விலையில் ஹைபிரிட் காரர்களை விற்பனைக்கு கொண்டுவர முடியும் என அந்நிறுவனம் கருதுகிறது.
இதற்காக மாருதி நிறுவனம் ஹைபிரிட் தொழில்நுட்பத்திலேயே மிகப் புதிய ஒரு டெக்னாலஜியை கொண்டு வர ஆய்வு செய்து வருகிறது. அதன்படி முழுவதுமாக எலெக்ட்ரிக் இன்ஜினில் இயங்கும் ஒரு கார் உள்ளே பெட்ரோல் இன்ஜினும் இருக்கும், ஆனால் அது வழக்கமான மோட்டார் இன்ஜினாக இல்லாமல் ஒரு ஜெனரேட்டர் போல செயல்படும்.
தற்போது பேட்டரியில் வாகனம் இயங்கிக் கொண்டிருக்கும்போது எலெக்ட்ரிக் மோட்டார் கூடுதல் பவரை தருவதற்காக உள்ளுக்குள்ளேயே ஒரு ஜெனரேட்டர் செட்டப்பை வைத்து அந்த ஜெனரேட்டர் பெட்ரோல் போன்ற எரிபொருளில் இயங்குவது போல வடிவமைக்கப்படுகிறது. இந்த ஜெனரேட்டர் அதிகமான மின்சக்தியை மோட்டாருக்கு செலுத்தி மோட்டாரை வேகமாக இயங்க வைக்கிறது.
இதனால் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் கார் இயங்கும் போது பெட்ரோல் மூலம் கிடைக்கும் மின்சக்தியை வைத்து மோட்டார் ஸ்டார்டாகி காருக்கு அதிக பவரை கொடுத்து அதிக ரேஞ்ச் தரும் வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டிய தேவை இருக்காது. பேட்டரியில் உள்ள பவர் மிக குறைவாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
இதே தொழில்நுட்பம் ஏற்கனவே இ-பவர் என்ற பெயரில் சர்வதேச மார்க்கெட்டில் நிஸான் கார்களின் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் வரவுள்ள நிசான் எக்ஸ் டிரெயல் காரில் இந்த தொழில்நுட்பம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது தற்போது உள்ள ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை விட மிகவும் சிம்பிளாக இயங்கும் தொழில்நுட்பமாக வடிவமைக்கப்படுகிறது. இதனால் குறைவான பெட்ரோல் செலவில் நீண்ட தூரம் பயணிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது எலெக்ட்ரிக் கார்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அதன் ரேஞ்ச்தான். நீண்ட தூர பயணங்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் லாயக்கு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது காருக்குள்ளேயே ஜெனரேட்டரை பொருத்தும் தொழில்நுட்பம் மாருதி நிறுவனத்தின் பலே ஐடியா தான். இது மட்டும் சாத்தியமானால் எதிர்காலத்தில் மிகப்பெரிய புரட்சி தான்.


Click it and Unblock the Notifications








