பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இந்த சிறப்பு பதிப்பு விற்பனைக்கு கிடைக்கும்.. பண்டிகை கால ஸ்பெஷல் கார்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்று கிராண்ட் விட்டாரா (Grand Vitara). இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடல் இந்தியாவில் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இரண்டு விதமான ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த இரண்டிற்கும் இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரின் விற்பனை வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் தற்போது புதிய சிறப்பு பதிப்பை அதில் இணைத்திருக்கின்றது.
குறுகிய நாட்களுக்கே மட்டுமே விற்பனைக்குக் கிடைக்க இருக்கும் இந்த கார் மாடல் கிராண்ட் விட்டாரா டோமினியன் லிமிடெட் எடிசன் (Grand Vitara Dominion Limited Edition) எனும் பெயரில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆல்ஃபா (Alpha), ஜெட்டா (Zeta) மற்றும் டெல்டா (Delta) ஆகிய வேரியண்டுகளில் மட்டுமே இந்த சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கிடைக்கும்.

வரும் விழாக் காலத்தை முன்னிட்டே இந்த சிறப்பு பதிப்பை மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. பொதுவாகவே, விழாக்காலத்தில் அதிக எண்ணிக்கையில் புது கார்கள் விற்பனையாகும். இந்த நிலையைக் கருத்தில் கொண்டே இந்த சிறப்பு பதிப்பு களமிறக்கப்பட்டு இருக்கின்றது. வழக்கமான கிராண்ட் விட்டாராவைக் காட்டிலும் சற்றே அதிக கவர்ச்சியான லுக்கைக் கொண்டதாக மட்டுமே இந்த சிறப்பு பதிப்பு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் மாடலுக்கு மேக்-அப் வாயிலாக கூடுதல் அழகு சேர்த்திருப்பதை போல இந்த காருக்கும் கூடுதல் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும். அந்தவகையில், கிராண்ட் விட்டாராவின் வெளிப்புறத்தை அழகுப்படுத்தும் விதமாக புதிய பக்கவாட்டில் படிகட்டு, பின் பக்கத்தில் ஸ்கிட் பிளேட்டுகள், பக்கவாட்டு பாடி மோல்டிங்குகள் மற்றும் டோர் விஷர்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், பிரீமியம் கார் கிட்-ம் இந்த சிறப்பு பதிப்புடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் வெளிப்பக்கம் மட்டுமல்ல உட்பக்கமும் மிகுந்த அழகிற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், இரண்டு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இருக்கை கவர், அனைத்து கால சூழலுக்கும் ஏற்ற 3டி மேட்டுகள் மற்றும் இன்டீரியரை கூடுதல் அழகாக்கும் ஸ்டைலிங் கிட் ஆகியவையும் இந்த சிறப்பு பதிப்பில் வழங்கப்படுகின்றன என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.
இத்தகைய சிறப்புகளுடனேயே புதிய கிராண்ட் விட்டாரா டோமினியோன் எடிசன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இவை வழக்கமான வேரியண்டைக் காட்டிலும் ரூ. 48,599 முதல் ரூ. 52,699 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றன. அதேநேரத்தில் இந்த சிறப்பு பதிப்பானது இந்த மாதம் இறுதி வரை மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.
மாருதி சுஸுகியின் நெக்ஸா ஷோரூம் வாயிலாகவே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். காஸ்மெட்டிக் மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றத்தையும் இந்த காரில் மாருதி சுஸுகி செய்யவில்லை. ஆகையால், வழக்கமான கிராண்ட் விட்டாராவில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே மோட்டாரே இந்த காரிலும் இடம் பெற்றிருக்கின்றது.
மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட 1.5 லிட்டர் கே15சி பெட்ரோல் எஞ்சினே கிராண்ட் விட்டாரா டோமினியன் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 102 பிஎச்பி பவரையும், 137 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
சிஎன்ஜி ஆப்ஷனிலும் இதே மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், இது சற்று குறைவான ஆற்றலை வெளியேற்றும். அந்தவகையில், 87 பிஎச்பி பவரையும், 121.5 என்எம் டார்க் ஆற்றலையும் அது உருவாக்கும். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக கிராண்ட் விட்டாரா இருக்க இந்த இரண்டு ஆப்ஷன்களே காரணமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டே மாருதி சுஸுகி இந்த கிராண்ட் விட்டாரா டோமினியன் லிமிடெட் எடிசனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. கிராண்ட் விட்டாராவின் வழக்கமான வேரியண்டைப் போலவே இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








